அலமேலு டூ ஸ்ரீப்ரியா : பிறந்தநாள் ஸ்பெஷல்
05 மார், 2022 - 12:01 IST
பன்முகத் தன்மை கொண்ட நடிகைகள் பலர் தமிழ் திரையுலகில் உண்டு, அவர்களில் குறிப்பிடும்படியான ஒருவர் நடிகை ஸ்ரீப்ரியா. நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என் பன்முக திறமை கொண்டவர். இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
இசைப் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் 1956, மார்ச் 5ல் பிறந்தார் அலமேலு எனும் ஸ்ரீப்ரியா. சிறு வயதிலேயே முறையான நாட்டியப் பயிற்சி மேற்கொண்டு நடனம் கற்றார். தனது பள்ளிப் படிப்பை சென்னையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்டில் பயின்றார்.
1970 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி நாயகிகளில் ஒருவராக விளங்கிய ஸ்ரீப்ரியா, 1974ம் ஆண்டு இயக்குநர் பி.மாதவன் தயாரித்து இயக்கிய "முருகன் காட்டிய வழி" என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அதே ஆண்டில் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "அவள் ஒரு தொடர்கதை" திரைப்படம் இவருக்கு வெள்ளித்திரையில் ஒரு நிரந்தர விலாசத்தை ஏற்படுத்தி தந்தது.
பின்னர் 1978ல் இயக்குநர் சி ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்த "அவள் அப்படித்தான்" என்ற திரைப்படம் ஸ்ரீப்ரியவிற்கு சிறந்த நடிகைக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்ததோடு, இவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் திரைப்படமாகவும் அமைந்தது.
"நவரத்தினம்" என்ற படத்தில் நடித்தன் மூலம் எம்.ஜி.ஆரோடும் இணைந்து நடித்த பெருமையும் கிடைக்கப் பெற்றார் ஸ்ரீப்ரியா. "திரிசூலம்" திரைப்படத்தின் மூலம் நடிகர் சிவாஜி கணேசனுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீப்ரியா 80களில் தொடர்ந்து அவருடன் இணைந்து பல திரைப்படங்களில் பணிபுரியும் வாய்ப்பினையும் பெற்றார்.
தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களே ஏற்று நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், முதல் முறையாக கதாநாயகனாக நடித்த "பைரவி" திரைப்படத்தில் நாயகியாக அவருடனும் ஸ்ரீப்ரியா ஜோடி சேர்ந்தார். ரஜினி உடன் கிட்டத்தட்ட 28 படங்களில் நடித்துள்ளார். அதேப்போன்று நடிகர் கமல்ஹாசன் உடனும் சுமார் 30 படங்களை வரை நடித்துள்ளார். ரஜினி, கமல் உடன் அதிக படங்களில் நடித்தவர் ஸ்ரீப்ரியா
நடிகை ஸ்ரீப்ரியாவிற்கு புகழ் தேடித் தந்த திரைப்படங்களில் முக்கியமான ஒரு திரைப்படம் என்றால் அது தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் நடித்த "ஆட்டுக்கார அலமேலு". 1977 ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளியான இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.
"நீயா?", "நட்சத்திரம்" ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்ததோடு, சொந்தமாக தயாரித்து தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் அடையாளப் படுத்திக் கொண்டார் நடிகை ஸ்ரீப்ரியா.
1984 ஆம் ஆண்டு நடிகர் மோகன், ஊர்வசி நடிப்பில் வெளிவந்த "சாந்தி முகூர்த்தம்" என்ற திரைப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியதன் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார் நடிகை ஸ்ரீப்ரியா. தொடர்ந்து "எங்க ஊரு ஆட்டுக்காரன்", "நாகினி" (கன்னடம்), "நானே வருவேன்", "மாலினி 22 பாளையங்கோட்டை" "த்ருஷ்யம்" (தெலுங்கு) ஆகிய திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களாகும்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நாயகர்களோடும் இணைந்து பணிபுரிந்த பெருமையும் இவருக்கு உண்டு. ஏறக்குறைய தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், தமிழில் மட்டும் 200 படங்கள் வரை நடித்திருப்பது குறிப்பிடும்படியான ஒன்று. தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வென்றுள்ளார்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா தற்போது நடிகர் கமல்ஹாசனால் ஆரம்பிக்கப்பட்ட "மக்கள் நீதி மய்யம்" என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார்.