2013ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவந்த 'ராஞ்சனா' படம் மூலம் ஹிந்தி சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தனுஷ். அதற்குப் பிறகு அமிதாப் உடன் இணைந்து 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆனந்த் எல் ராய், தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் 'அத்ராங்கி ரே'. இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தியேட்டர்களில் வந்திருக்க வேண்டிய படம். கொரோனா தாக்கத்தால் தாதமாகி தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நாளை(நவ., 24) இப்படத்தின் டிரைலரை வெளியிட உள்ளார்கள். அதற்கு முன்னதாக இன்று படத்தில் நடிக்கும் அக்ஷய்குமார், தனுஷ், சாரா அலிகான் ஆகியோரது கதாபாத்திர அறிமுகங்களை சிறு வீடியோக்களாக வெளியிட்டார்கள்.
ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளை டிரைலருடன் பட வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த தமிழ்ப் படமான 'ஜகமே தந்திரம்' ஓடிடி தளத்தில்தான் வெளியானது. அடுத்து ஹிந்திப் படமான 'அத்ராங்கி ரே' படமும் ஓடிடியில்தான் வெளியாக உள்ளது. தனுஷ் தமிழில் நடித்து முடித்துள்ள 'மாறன்' படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.