Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

களத்தூர் கண்ணம்மா டூ விக்ரம் : கமல் பிறந்தநாள் ஸ்பெஷல்

07 நவ, 2021 - 12:03 IST
எழுத்தின் அளவு:
kamalhaasan-birthday-special

தமிழ் மண்ணின் மைந்தனான கமல்ஹாசன், 1954 நவ.,7ல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்தார். ஐந்து வயதில் சினிமாவில் அறிமுகமானவர், சகலகலா வல்லவனாக இன்றும் திகழ்கிறார். அவரது கலைப்பயணம் இன்னமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நடனக்கலைஞர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இவர், உலக நாயகனாக உச்சம் தொட்டுள்ளார். அவர் பிறந்தநாளான இன்று (நவ.,7) அவர் கடந்து வந்த சினிமா பாதையை சற்றே திரும்பி பார்க்கலாம்.




குழந்தை நட்சத்திரம்


ஐந்து வயதில் களத்துார் கண்ணம்மாவில் அறிமுகமானார். தனது மழலைப் பிராயத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சுவுகார் ஜானகி, ஜே.பி.சந்திரபாபு, எஸ்.வி.சுப்பையா, சத்யன் என மிகச்சிறந்த திரைக்கலைஞர்களுடன் இணைந்து திரையில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். ஒரு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தனது நடிப்புப் பணியைத் தொடர்ந்த கமல்ஹாசன், டி.கே.எஸ் குழுவில் இணைந்து மேடை அனுபவமும் கிடைக்கப் பெற்றார்.


நடன இயக்குனர்


பரதம், குச்சுப்புடி, கதகளி என கலையின் அடுத்த பரிமாணமான நடனத்தையும் முறைப்படி கற்று பல திரைப்படங்களில் உதவி நடன இயக்குநராகவும் ஆரம்பகாலங்களில் பணிபுரிந்திருக்கின்றார். பார்வைக்கு சிறு பையன் போல் இருந்ததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, எடிட்டிங், உதவி இயக்கம் என்று எதையாவது கற்றுக் கொண்டால் பிழைக்கலாம் என்ற பலருடைய பரிகாசப் பேச்சுக்களையும் மீறி இன்று உலக நாயகனாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றார் என்றால், அது அவர் கடந்து வந்த பாதை கற்றுத் தந்த அனுபவமும், அயராத உழைப்பும், அவர் சார்ந்த பணியில் அவர் காட்டிய அர்பணிப்பும் தான் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதே உண்மை.


ஏராளமான துணை கதாபாத்திரங்கள்


1970ம் ஆண்டு வெளிவந்த "மாணவன்" திரைப்படத்தில் தான் ஒரு இளைஞனாக முதன் முதலில் தோன்றி நடித்தார். நடிகை குட்டி பத்மினியுடன் "விசில் அடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா" என்ற ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றி நடித்திருந்தார். இதற்குப் பிறகு "அன்னை வேளாங்கன்னி", "குறத்தி மகன்", "அரங்கேற்றம்", "சொல்லத்தான் நினைக்கிறேன்", "குமஸ்தாவின் மகள்", "நான் அவனில்லை" என்று பல படங்களில் துணைக் கதாபாத்திரம் மற்றும் எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றும் நடித்து வந்தார்.




கே.பாலசந்தரின் பார்வை


நாகேஷ், சவுகார் ஜானகி போன்ற தேர்ந்த கலைஞர்களை வைத்து வலுவான கதாபாத்திரங்களும், கதையம்சமும் கொண்ட திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குநர் கே பாலசந்தரின் பார்வை கமல்ஹாசன் மீது விழுந்தது. அதன் விளைவு, "அபூர்வ ராகங்கள்", "மூன்று முடிச்சு", "மன்மத லீலை", "அவர்கள்" போன்ற படங்களில் நாயகனாக மின்னும் வாய்ப்பைப் பெற்றார். 1974ம் ஆண்டு வெளியான "கன்னியாகுமரி" என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் நாயகனாக அறிமுகமானார் கமல்ஹாசன்.


தமிழில் இவர் நாயகனாக அறிமுகமானது இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "அபூர்வ ராகங்கள்" திரைப்படமாகும். நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலமே. இதனைத் தொடர்ந்து "மூன்று முடிச்சு", "அவர்கள்", "16 வயதினிலே", "இளமை ஊஞ்சலாடுகிறது", "நினைத்தாலே இனிக்கும்" என இருவரும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை தந்தனர்.


கமலை மாற்றிய கதாபாத்திரம்


1977ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகப் படமான "16 வயதினிலே" திரைப்படம் கமல்ஹாசனுக்கு வேறொரு பரிமாணத்தைத் தந்ததென்றே சொல்ல வேண்டும். நடை, உடை, பாவனை, தோற்றம் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி, சப்பாணியாகவே கமல்ஹாசன் வாழ்ந்து காட்டிய திரைப்படமாக அது அமைந்தது. பாரதிராஜாவின் அடுத்த படமான "சிகப்பு ரோஜாக்கள்" திரைப்படத்தில் தனது முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமான நவநாகரீக இளைஞனாக ஒரு "சைக்கோபாத்" கதாபாத்திரம் ஏற்று மீண்டும் வாழ்ந்து காட்டியிருந்த கமல்ஹாசனுக்கு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களுடன் படமும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.


காதல் இளவரசன்


சொல்லத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும், அவள் ஒரு தொடர்கதை, மன்மத லீலை, மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நீயா, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, ராஜ பார்வை போன்ற படங்களில் முத்திரை பதித்ததோடு, காதல் இளவரசனாக வலம் வந்தார்.


முதல் தயாரிப்பு


ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இவர் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் "ராஜபார்வை". இத்திரைப்படத்தை இயக்கியது இவருடைய ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ். படத்தில் பார்வையற்ற இளைஞனாக நடித்து ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். "அந்திமழை பொழிகிறது", "அழகே அழகு" என இளையராஜாவின் இசை வெள்ளத்தில் வந்த பாடல்கள் இன்றும் ரசிகர்கள் நெஞ்சங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.


வியக்க வைத்த அபூர்வ சகோதரர்கள்


கதை, கதாபாத்திரம், நடிப்பு, தொழில் நுட்பம் என அனைத்திலும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக காட்ட விரும்பும் நடிகர் கமல்ஹாசன், 1989ம் ஆண்டு தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள்". படத்தில் குள்ளனாக நடித்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் படத்தையும் வெற்றிப்படமாக்கினார். இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடித்தார் என்பது இன்று வரை அதிசயமாகவே பார்க்கிறது திரையுலகம்.


சிவாஜியின் செல்லபிள்ளை


நடிப்பின் அந்திம காலத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி என்ற அந்த மாபெரும் கலைஞனின் மொத்த நடிப்பையும் தனது திரைக்கதையின் மூலம் "தேவர் மகன்" திரைப்படத்தின் மூலம் பெற்றார் கமல்ஹாசன். அதோடு சிவாஜியின் செல்லபிள்ளையாக திகழ்ந்த இவர், அவரது வீட்டில் இன்றும் மூத்த மகனாகவே பாவிக்கப்படுகிறது.


கவர்ந்த படங்கள்


மூன்றாம்பிறை, புன்னகை மன்னன், நாயகன், மைக்கேல் மதன காமராஜன், குணா, மகாநதி, தேவர் மகன், அவ்வை சண்முகி, இந்தியன், தெனாலி, தசாவதாரம், விஸ்வரூபம், பாபநாசம் உட்பட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. அனைத்து மொழிகளிலும் சேர்த்து 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமானவர், அவ்வை சண்முகியில் பெண், இந்தியன் படத்தில் முதியவர் என பல்வேறு கெட்-அப்களில் தோன்றி மக்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தார். அதிலும் "குணா", "மகாநதி", "அவ்வை சண்முகி", "ஹேராம்", "ஆளவந்தான்", "தசாவதாரம்", "விஸ்வரூபம்" என இவருடைய திரைப்படங்கள் தமிழ் திரையுலகை உலக அளவில் பேச வைத்ததென்றால் அது மிகையன்று.



பத்திரிக்கையாளர் - சமூக நற்பணி


தமிழ் இலக்கியத்தில் இவருக்கு இருக்கும் அதீத ஆர்வம் இவரை "மய்யம்" என்ற பத்திரிகையை இயக்கும்படி செய்தது. "கமல்ஹாசன் நற்பணி மன்றம்" இயக்கி வருகின்றது. இவரது ரசிகர்கள் ரசிகர் சங்கம் சார்பாக பல சமுதாய சீர்திருத்தங்களையும் சேவைகளையும் செய்து வருகின்றனர். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த இவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஒரு இல்லத்தை அமைத்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதி திரட்டி, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் 2010 ஆம் ஆண்டு வழங்கினார்.


பாலசந்தர் பாசம் : பாலசந்தர் இயக்கத்தில் 23 படங்களில் நடித்துள்ளார் கமல்.


இளையராஜா உடன்...


இளையராஜா இசையில் அதிக படங்களில் நடித்துள்ளார் கமல். இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர்.


அரசியல் களத்தில்...


மதுரையில் 2018 பிப்., 21ல் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். 2019 லோக்சபா தேர்தல் (ஓட்டு சதவீதம் 3.72) மற்றும் தமிழகத்தில் நடந்த 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இவரது கட்சி போட்டியிட்டது. அதேபோல், 2021 சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், தொடர்ந்து அரசியல் களத்தில் நீடித்து வருகிறார்.


24 பட ஜோடி


கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர்.


தயாரிப்பாளர்


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 27 படங்களை தயாரித்துள்ளார்.


இயக்கிய படங்கள்


அவ்வை சண்முகியின் இந்தி பதிப்பான சாச்சி 420, ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம்-2 உட்பட படங்களை இயக்கியுள்ளார்.


நடன இயக்குநர்


சிவாஜியின் சவாலே சமாளி, எம்.ஜி.ஆரின் சங்கே முழங்கு, ஜெய்சங்கரின் நுாற்றுக்கு நுாறு, எஸ்.பி.முத்துராமனின் காசி யாத்திரை உட்பட பல படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.


விருதுகள்


செவாலியே புகழ்


தமிழக அரசின் கலைமாமணி விருது (1980)


பத்மஸ்ரீ (1990)


கவுரவ டாக்டர் பட்டம் (2005)


பத்ம பூஷண் (2004)


பிரான்சு நாட்டின் செவாலியே விருது (2016)


தமிழக அரசின் திரைப்பட விருது - ஒன்பது முறை


ஆந்திராவின் நந்தி விருது - மூன்று முறை


நான்கு தேசிய விருது


களத்துார் கண்ணம்மா (1960)


மூன்றாம் பிறை (1983)


நாயகன் (1988)


இந்தியன் (1996)


19 பிலிம்பேர்


ஐந்து மொழிகளில் 19 முறை பிலிம்பேர் விருது பெற்று உள்ளார். இனி பிலிம்பேர் விருது தனக்கு வேண்டாம், புதியவர்களுக்கு வழங்கும்படி 2000ல் கேட்டுக்கொண்டார்.


பிக்பாஸ்


சின்னத்திரையிலும் கால் பதித்த இவர், தனியார் டிவி சேனலின் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான்காவது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.


தசாவதாரம்


தசாவதாரம் (2008) படத்தில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட பத்து வேடங்களில் நடித்தவர்.


ஆஸ்கர் கனவு


ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து இவரது படங்களான நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம், சுவாதி முத்யம் (தெலுங்கு), சாகர் (இந்தி) ஆகிய படங்கள் அனுப்பப்பட்டது. விருதுக்கு தேர்வாகவில்லை. இவருக்கு ஆஸ்கர் எட்டாக்கனியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யுடன் இணையும் சிவாவிஜய்யுடன் இணையும் சிவா நவரசாவில் நடந்தது என்ன? - பொன்ராம் விளக்கம் நவரசாவில் நடந்தது என்ன? - பொன்ராம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

07 நவ, 2021 - 20:48 Report Abuse
Kumar, Toronto Happy birthday to the Legacy of Tamil cinema..
Rate this:
07 நவ, 2021 - 14:11 Report Abuse
amaithiyo amithi sir, last year news sir, no information about current Vikram movie..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in