தினமலர் விமர்சனம் » அகிலன்
தினமலர் விமர்சனம்
மதுரையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் பி.சரவணன், ஆக்டர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் "அகிலன்". அதுவும் ஆக்ஷ்ன் ஆக்டராக அவதாரம் எடுத்திருப்பது தான் ஹைலைட்!
கதைப்படி அடிக்கடி நகரில் நடக்கும் பெண் கடத்தலை தடுக்க போலீஸ் தடுமாறுகிறது. அதனால் பொதுமக்கள் மத்தியில் போலீஸ்க்கு கெட்டப்பெயர். இந்த கெட்டப்பெயரை போக்கி போலீஸ்க்கு நற்பெயரை வாங்கித்தர துடிக்கும் இளம் போலீஸ் அதிகாரி அகிலனை, ஈகோ மோதலால் செயல்பட விடாமல் கைகளை கட்டிப்போடுகிறார் உயர் அதிகாரி ஒருவர். ஒரு கட்டத்தில் அந்த உயர் அதிகாரியே காவல் துறைக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கலங்கத்தை துடைக்க ஒரு கடத்தல் நாடகம் போடுகிறார். அதில் அகிலனையே கடத்தல்காரனாக நடிக்க வைத்து பழிதீர்க்கவும் பார்க்கிறார். ஆனாலும் உஷாராகும் அகிலன், உயர் அதிகாரியின் சதிதிட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதும், நிஜ பெண் கடத்தல்காரர்களை எப்படி பிடிக்கிறார் என்பதும் வித்தியாசமும், விறுவிப்புமிக்க க்ளைமாக்ஸ்!
போலீஸ் அதிகாரி அகிலனாக டாக்டர்.பி.சரவணன். போலீஸ் வேடத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார். கடத்தல் நாடகத்தில் உயர் அதிகாரியின் மகளையே கடத்தும் புத்திசாலிதனத்திலும், அவரிடம் இறுதியில் என் மீது உங்களுக்கு ஆத்திரம் இருக்கும், அது என்னை தீர்த்துகட்ட திட்டம் தீட்டும் அளவுக்கு இருக்கும்.... என்று எதிர்பார்க்கவில்லை என்று வசனம் பேசும் இடத்திலும் சரவணன் சபாஷ் போட வைக்கிறார். அடிதடி ஆக்ஷ்ன் அவ்வளவாக இல்லாமல் அறிமுகம் என்ற அளவில் டாக்டர் நல்ல ஆக்டர் என்றே சொல்லலாம்!
கதாநாயகியாக டாக்டர் சரவணன் மீது காதல் கொள்வதற்கும், டூயட்பாடுவதற்கும் புதுமுகம் வித்யா வந்துபோகிறார். ஓ.கே.!
அகிலனின் உயர் அதிகாரியாக வரும் ராஜ்கபூர், கஞ்சாகருப்பு, சிங்கம்புலி, போண்டாமணி, பாலாஜி, மயில்சாமி உள்ளிட்டவர்கள் தங்கள் கடமையிலும் காமெடியிலும் மிரட்டுகிறார்கள்! ரசிகர்கள் பயங்கொள்ளாமல் இருந்தால் சரி!
டெக்னிக்கலாக ஒருசில குறைகள் இருந்தாலும் டில்லி மாணவி கற்பழிப்பு - இறப்பு... உள்ளிட்டவைகள் நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த தருணத்தில், இப்படத்தில் பெண் கடத்தல் கதையை கையில் எடுத்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு அகிலன் நாயகர் டாக்டர்.பி.சரவணன், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவாளர் சி.டி.அருள்செல்வன், இயக்குனர் ஹென்ரி ஜோசப் உள்ளிட்டோர் ஒருகிணைந்து ஒருமாதிரி தீர்வை சொல்லி, அந்த எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாகவே தெரிகிறது.
ஆகமொத்தத்தில் "அகிலன்" - கவனிக்கப்படவேண்டிய "அழகன்"!