தினமலர் விமர்சனம்
வானவராயன் - கிருஷ்ணாவும், வல்லவராயன் - மா.கா.பா.ஆனந்தும் ஆ...ஊ..என்றால் அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பிகள்...ஆனாலும் அவர்களை அடிக்க யாராவது வந்தால் இருவரும் எதிராளிகளை உண்டு, இல்லை...என செய்துவிடும் உயிருக்கு உயிரான உடன்பிறப்புகள். இப்படிப்பட்ட இருவருக்குமிடையே வானவராயன் கிருஷ்ணாவின் காதலியாக மோனல் கஜார் மூக்கை நுழைக்கிறார்.
காதலி அஞ்சலியான மோனலை நள்ளிரவு 12 மணிக்கு சந்திக்கப் போன கிருஷ்ணாவை, மோனலின் அண்ணன் எஸ்.பி.சரண் தலைமையில் ஊரே ஒன்று திரண்டு அடித்து, உதைத்து அனுப்ப, இதில் ஆவேசமாகும் தம்பி மா.கா.ப.ஆனந்த், பதிலுக்கு புல்மப்பில் ஆட்களை திரட்டிக் கொண்டு போய் மோனலின் அப்பா ஜெயப்பிரகாஷின் வேட்டியை உருவி அடித்து உதைத்து விட்டு வருகிறார். இதனால் பணால் ஆகும் கிருஷ்ணா-மோனலின் காதல் மீண்டும் கை கூடியதா? இல்லையா? பொறுப்பில்லாத வானவராயன் வல்லவராயன் பிரதர்ஸ் பொறுப்பானவர்கள் ஆனார்களா? இல்லையா? என்பதை காதலும், காமெடியும் கலந்து கலர்ஃபுல்லாக சொல்லியிருக்கின்றனர்.
வானவராயனாக கிருஷ்ணா, ஃபுல்லாக குடிப்பதும், பொண்ணு கிடைக்கலையே என ஏங்குவதுமாக வழக்கம் போலவே பிய்த்து பெடலெடுத்திருக்கிறார்.
வல்லவராயனாக மா.கா.ப.ஆனந்த் புதுமுகம் என்பது தெரியாத அளவிற்கு, கிருஷ்ணாவுக்கு ஈடுகொடுத்து போஷாக்காக நடித்திருக்கிறார்.
கதாநாயகி மோனல் கஜார், அஞ்சலி கதாபாத்திரத்தில், கிளாமருக்கும் ஒத்துவரும் ஹோம்லி குத்துவிளக்காக மிளிர்ந்திருக்கிறார்.
அமெரிக்க மாப்பிள்ளையாக சந்தானம் கெஸ்ட் ரோலில் வந்தாலும் பெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். க்ளைமாக்ஸில் கல்யாண மண்டபத்திலும், மருத்துவமனையிலும் அவர் பண்ணும் அலப்பறையில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.
ராயர் பிரதர்ஸின் அப்பாவாக தம்பி ராமையா, பாட்டி செளகார் ஜானகி, அம்மா கோவை சரளா, மோனலின் அப்பா ஜெயபிரகாஷ், அம்மா மீரா கிருஷ்ணன், அண்ணன் எஸ்.பி.சரண், குடிகார சித்தாப்பாவாக வரும் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, பிரியா, பாவா லட்சுமணன் உள்ளிட்ட எல்லோரும் பளிச் தேர்வு, பலே நடிப்பு. அதிலும் தம்பி ராமையா காமெடியாகவும், கண்ணீர் வரவழைக்கும் படியும் ரசிகர்களை உருக்கி எடுத்து விடுகிறார்.
-------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
இணைபிரியாத அண்ணன், தம்பிகளுக்கு இடையே இளம் பெண் வந்தால் என்ன ஆகும்?
அண்ணனின் காதலுக்குத் துணை போகிறேன் என்று தம்பி, ஒவ்வொரு முறையும் ரணகளமாய்ச் சொதப்ப, நானா? தம்பியா? முடிவு செய்து கொள் என்று நாயகி எகிற அப்புறம் என்ன? டும் டும்தான்! (இயக்கம் ராஜ்மோகன்)
கிருஷ்ணாவுக்கு காமெடி, டான்ஸ், ஃபைட் என்று எல்லாம் நன்றாக வருகிறது. காதலியிடம் ஒரு மணி நேரம் பேச டைம் கேட்டு, தினம் பத்து நிமிடமாக அதைக் கழிக்கும் உத்தி பலே.
ம.க.ப. ஆனந்த், நகைச்சுவைக்கு அழும்போது மட்டும் சகிக்கலை.
படம் நெடுக இரட்டை அர்த்த வசனங்கள் நிரவிக் கிடக்கின்றன. ஆனால் கைதட்டி ரசிக்கிறார்கள்! (என்ன தைரியத்துல நீ என்னை லவ் பண்ணுவேன்னு சொல்வ? - எல்லாம் நீ வயசுக்கு வந்திருப்பேங்கிற தைரியத்துலதான்)
மோனல் கஜ்ஜார் பளிச்சென்று இருக்கிறார். குத்தாட்டம் போடாமல் குட் ஆட்டம் போடுகிறார்.
மீண்டும் சௌகார் ஜானகி! அவர் நடித்த பழைய படங்களை வைத்த பில்டப் ஏற்றுவது க்யூட். ஆனால் பாட்டி, கிருஷ்ணாவிடம், அந்தப் பெண்ணை முடிச்சுடுடா, வயத்துல கொடுத்துடுடா என்று சொல்வது கண்ணியக்குறைவு.
பத்து நிமிடமே வந்தாலும் பட்டையக் கிளப்புகிறார் சந்தானம். ஒவ்வொரு நிமிடத்திலும் சிரிப்பு வெடி.
இசை யுவனா? நெசமாவா? தக்காளிப் பாட்டு மட்டும் ஓகே.
வா.வ.: - சிரிச்சுட்டு மட்டும் வரலாம்!
குமுதம் ரேட்டிங் - ஓகே