Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9,Vazhakku Enn 18/9
 • வழக்கு எண் 18/9
 • ஸ்ரீ
 • நடிகை:ஊர்மிளா
 • இயக்குனர்: பாலாஜி சக்திவேல்
13 மே, 2012 - 16:30 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வழக்கு எண் 18/9

 

தினமலர் விமர்சனம்வசதியானவர்களின் காம காதல் ஒன்றால், வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும், இன்னல்களும் தான் "வழக்கு எண் 18/9" படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! "காதல்" படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலின் மற்றுமொரு காதல் படைப்பு மட்டுமல்ல... காதல் - காவல் காவிய படைப்பும் கூட!

கதைப்படி, ரோட்டோர டிபன் கடையில் வேலை பார்க்கும் அநாதை வேலுவுக்கு, அவன் கடையை ஒட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கும் ஜோதி மீது காதல். ஆனால் இந்த காதல் கசிந்துருவதற்குள், வேறு சில காரணங்களால் ‌வேலு மீது தப்பான அபிப்ராயம் கொண்டு வெறுப்பை உமிழ்கிறார் ஜோதி! இந்நிலையில் ஜோதி வீட்டு வேலை செய்யும் வசதியான வீட்டுப்பெண் ஆர்த்தி மீது அதே ப்ளாட்டில் வசிக்கும் அர்த்தியை விட வசதியான தினேஷூக்கு காதல் போர்வையில் காமம்! அந்த காமமும், காதலும் ஆர்த்தியை, ஆபாசமாக தனது செல்போனில் படமெடுத்து அதை நண்பர்களின் போனில் உலவ செய்து, பெருமை பட வேண்டும் எனும் நோக்கத்தில் தான் தினேஷூக்கு ஏற்படுகிறது. இது தெரியாமல் தினேஷின் வலையில் விழும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு தினேஷை விட்டு விலக, தன் நோக்கம் நிறைவேறாத வருத்தத்தில் தினேஷ், ஆர்த்திக்கு அடிக்கும் ஆசிட், குறிதவறி ஜோதியின் முகத்தையும், முக்கால்வாசி உடம்பையும் பதம்பார்க்கிறது.

ஜோதியின் அம்மா உள்ளிட்டவர்களின் கூற்றுபடி ஆசிட் அடித்தது வேலு தான் என விசாரணை கைதியாக பிடித்து வரும் ‌காவல்துறை, காசுக்கு ஆசைப்பட்டு தனது குள்ளநரித்தனத்தால் அவரையே குற்றவாளியாகவும் கோர்ட்டின் முன் நிறுத்துகிறது. இந்த வழக்கில் இருந்து வேலு தப்பித்தாரா...? உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா...? ஜோதியின் மீதான வேலுவின் காதல் என்னாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல எண்ணிலடங்கா வினாக்களுக்கு விடையளிக்கிறது வழக்கு எண் 18/9 படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்பான மீதிக்கதை!

வேலுவாக புதுமுகம் ஸ்ரீ, ரோட்டோர தள்ளுவண்டி டிபன் கடை வேலையாளாகாவே வாழ்ந்திருக்கிறார். அவரை மாதிரியே ஜோதியாக வரும் வீட்டு வேலைப்பெண்ணாக சட்டை, பாவாடையில் கையில் தூக்குவாளி கூடையுடன் வரும் ஊர்மிளாவும் காரமிளையாக கலக்கி எடுத்திருக்கிறார். இவர்களை மாதிரியே தினேஷாக வரும் மிதுன் முரளி, ஆர்த்தியாக வரும் மனிஷா யாதவ் உள்ளிட்ட புதுமுகங்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!

மேற்படி இந்த ஜோடிகளைக் காட்டிலும் ஒருபடி மேலாக ஸ்ரீயின் அப்பா-அம்மாவாக ஒரு சில காட்சிகளே வரும் வேடியப்பன் எனும் செந்தில், ராணி, தினேஷ் எனும் மிதுனின் தாயாக மினிஸ்டரின் கீப்பாக வரும் ராதிகா, ஆர்த்தி எனும் மனிஷாவின் தாய் தந்தையாக வரும் கவுதம், வித்யா-ஈஸ்வர், ஊர்மிளா எனும் ஜோதியின் தாயாக வரும் பார்வதி, ஸ்ரீக்கு வேலை வாங்கி தரும் "ஒரு மாதிரி" தோழியாக தேவி எனும் ரோஸி உள்ளிட்ட துணை, இணை நடிகர்கள் கூட பிரமாதம் போங்கள்... எனும் அளவு நடித்திருப்பது படத்தின் பெரியபலம்! இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக இன்ஸ்பெக்டர் குமாரவேலாக நல்லவர் மாதிரி வாயாலேயே "வடை சுடும்" புதுமுகம் முத்துராமனும், ஸ்ரீயின் ரோட்டுகடை உதவியாளனாக காமெடி பண்ணும் சின்னசாமியும் சற்றே வறண்ட கதைக்களத்தை மறைத்து கலர்புல்லாக படத்தை பிரமாதமாக தூக்கி நிறுத்தி, வழக்கு எண் படத்திற்கு வெற்றி வாக்குளை சேர்க்கின்றனர். பேஷ்! பேஷ்!!

முதல்பாதி சற்று மெதுவாக நகர்வதும், படம்முழுக்க ஒருவித சோகம் பரவிக்கிடப்பதும் சற்றே டாக்குமெண்ட்ரி ‌எபெக்ட்டை கொடுத்தாலும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவின் அழகிய பின்னணி இசையும், அசத்தலான பாடல்களும், எஸ்.டி.விஜய் மில்டனின் வித்தியாசமான புதுவித ஒளிப்பதிவும், இயக்குநர் பாலாஜி சக்திவேலின் கருத்தாழமிக்க எழுத்தும்-இயக்கமும் மைனஸ் பாயண்டுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பிளஸ் பாயிண்டுகளை ‌நோக்கியே படத்தை இழுத்து சென்றிருப்பது, வழக்கு எண்ணை நம் வாழ்க்கையாக பிரதிபலிக்க செய்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் "வழக்கு எண் 18/9" , வாழ்க்கையை பிரதிபலிக்கும் தமிழ் திரைப்படங்களில் என்றென்றும் வாழும் "நம்பர்-ஒன்!"


-------------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்விடலைப் பருவத்தினரை உசுப்பேற்றி கல்லா கட்டிக்கொள்ளும் படங்களுக்கு மத்தியில், பெரியவர்கள் கவனிக்க மறந்த இளசுகளின் பிரச்னைகளை முதன்முதலாக உருப்படியாகப் பேச வந்துள்ளது “வழக்கு எண் 18/9’.

வளர்ப்பும் சூழ்நிலையும் கற்றுக்கொடுத்த வக்கிரத்தால் ஒரு பள்ளி மாணவன் செய்யும் ஒரு குற்றத்தை மையமாக வைத்து, இன்றைய விடலைப் பருவத்தினரின் வாழ்க்கையை உள்ளபடி பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

ஓரளவுக்காவது பெயர் தெரிந்த ஒரு முகத்தைக்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால் அனைவரும் அசத்தியிருக்கிறார்கள். ஹீரோ ஸ்ரீ இனி சொந்தமாக கையேந்திபவன் நடத்தலாம். அந்தளவுக்கு சாலையோர சாப்பாட்டுக் கடையில் வேலைபார்க்கும் கேரக்டருக்காக உழைத்திருக்கிறார். காதலிக்கான வழக்கில் காதலிக்காகவே குற்றவாளி ஆவதற்கு போலீஸிடம் ஸ்ரீ ஒத்துக்கொள்வது பார்ப்பவர்களின் மனசில் பாறாங்கல்லைக் கட்டி விடுகிற காட்சி. வேலைக்காரப் பெண்ணுக்கே உரிய அவசரமும் மிரட்சியுமாக நடமாடும் ஊர்மிளா மகந்தா ஒரிசா பெண்ணாம். அடக்கி வாசித்தே வெளுத்து வாங்கியிருக்கிறார். க்ளைமாக்ஸில் இவர் எடுக்கும் முடிவுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

தவறான பாதையில் கால் பதித்துவிடும் பள்ளி மாணவி மணீஷா, பால் வடியும் முகத்துடன் வில்லத்தனம் செய்யும் மிதுன் முரளி போன்ற சின்னஞ்சிறுசுகளின் இயல்பான நடிப்பு ஆச்சரியம். இரவு நேர நடைபாதையில் நண்பனுக்காக கூத்துக் கலைஞன் சின்னசாமி போடும் அதிரடி ஆட்டம் மண்ணின் கலைகளை மறந்துவிட்ட நம்மை செவுளில் அடிக்கிறது. கடை முதலாளியிடம் பையன்கள் செய்யும் குறும்புகள் காமெடியில் புது ரகம்.

இன்ஸ்பெக்டராக நடித்துள்ள அந்த மீசைக்காரர் யாரோ? நெஞ்சைப் பதற வைக்கிற வழக்கில்கூட உருட்டி மிரட்டி பணம் பார்த்துவிடுகிற காவல்துறையின் கடுப்பு ஆடுகளை இவர் பிரதிபலிக்கும் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்.

ஸ்ரீயின் கதைக்கும், மணீஷாவின் கதைக்கும் அங்கங்கே அழகாக முடிச்சுப் போடும் எடிட்டிங் உத்தி அருமை. 5டி கேமராவிலேயே தரமான படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவின் பின்னணி இசை ஏமாற்றவில்லை. மையக்கதைக்கு ஓரமாக கந்துவட்டி, வட நாட்டு முறுக்கு கம்பெனி, கல்வித்துறையின் கசடுகள், அதற்குத் துணை போகும் அரசியல் என சமூக அவலங்களை பிரசார வாசனையே இல்லாமல் விளாசுவதோடு, இடையே மயிலிறகாய் ஒரு காதல் கதையையும் சொருகியிருப்பது பிரமிக்க வைக்கிற ஸ்கிரிப்ட் உழைப்பு.

க்ளைமாக்ஸை நியாயப்படுத்த, ஊர்மிளாவின் அப்பா சமூக அக்கறை மிக்கவராக முதலிலேயே காட்டப்படுகிறது. ஆனால் அது ஊர்மிளாவைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஸ்ரீ மூலம்தான் காட்டப்பட வேண்டுமா?

உண்மைச் செய்தியின் யதார்த்தம் கெடாமல் கற்பனையைக் கலந்து, கண்ணியமாக ஒரு கதையை நிறுவுவதில் பாலாஜி சக்திவேலுக்கு அபார வெற்றி கிடைத்திருக்கிறது.

வழக்கு எண் 18/9 - குறிஞ்சிப்பூ.

குமுதம் ரேட்டிங் - சூப்பர்வாசகர் கருத்து (205)

Ravendhran - Port Dickson,மலேஷியா
29 ஆக, 2012 - 13:04 Report Abuse
 Ravendhran நல்ல படம். எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.
Rate this:
ராஜி - Chennai,இந்தியா
18 ஜூலை, 2012 - 15:15 Report Abuse
 ராஜி படம் செம சூப்பர் இந்த மாதரி படம் தான் எல்லாரும் எதிர் பக்கரங்க. ஆல் தி பெஸ்ட் பாலாஜி சக்தி வேலன் சார்.
Rate this:
ப.ந.வரதராஜன் - chennai,இந்தியா
17 ஜூலை, 2012 - 06:53 Report Abuse
 ப.ந.வரதராஜன் இந்தப்படம் ஒரு குறிஞ்சிப்பூ என்றால் அது மிகை யில்லை.ஒவ்வொரு மாணவனும் மாணவியும் பெற்றோர்களும் காவல்துறையினரும் ஆக மொத்தம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் சாரி பாடம் .வாழ்க பாலாஜி சக்திவேல்
Rate this:
sekar - nellai,இந்தியா
10 ஜூலை, 2012 - 13:38 Report Abuse
 sekar வரவேற்கவேண்டிய படம்
Rate this:
seran - chidambaram,இந்தியா
04 ஜூலை, 2012 - 21:36 Report Abuse
 seran வசனம் மிஹவும் யதார்தமாஹ் உள்ளது அருமையான படம் கிளைமாக்ஸ் அருமை
Rate this:
மேலும் 200 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in