தினமலர் விமர்சனம் » லீலை
தினமலர் விமர்சனம்
பெண்களை போகப் பொருளாகவும், ஐஸ்ட் டைம் பாஸாகவும் நினைக்கும் ஹீரோவிற்கும், ஹீரோ மாதிரி கேரக்டர்களிடம் கேர்புல்லாக இருக்க வேண்டும் என எக்கச்சக்கமாக தனது பெண் சுற்றத்திற்கும், நட்பிற்கும் அடிக்கடி எச்சரிக்கை மணி அடிக்கும் ஹீரோயினுக்குமிடையில் ஏற்படும் காதலும், அதற்காக ஹீரோ போடும் நாடகங்களும், நடவடிக்கைகளும் தான் "லீலை" படத்தின் மொத்த கதையும்!
தன் கல்லூரி தோழிகளை காதலித்து ஏமாற்றிய கார்த்திக் மீது கதாநாயகி மலருக்கு அப்படி ஒரு வெறுப்பு! கார்த்திக்கும் கருணை மலர் எனும் அட்வைஸ் மலரின் முழுப்பெயரை கேட்டாலே அப்படி ஒரு வெறுப்பு. ஆனால் ஒரு சில வருடங்கள் கழித்து தான் வேலை பார்க்கும் ஐ.டி., கம்பெனியிலேயே வேலை பார்க்கும் மலர் அப்படி ஒரு அழகு என தெரிந்ததும், கார்த்திக்கிற்கு மலர் மீது அப்படி ஒரு காதல் ஈர்ப்பு! தான் கார்த்திக் என தெரிந்தால் தன் காதல் மலர் ஆகவேண்டிய கருணைமலர், காட்டுமலர் ஆகி கசப்பை வீசுவாள்... என எண்ணும் கார்த்திக், அவளுக்காக சுந்தர் எனும் பெயரில் நாடகமாடுகிறான், நடமாடுகிறான். ஒருகட்டத்தில் கார்த்திக்காலேயே கார்த்திக்தான் சுந்தர், சுந்தர் தான் கார்த்திக் என தெரிய வரும்போது, கருணைமலர், அவனது காதல் மலராகவே இருந்தாரா...? இல்லை காட்டுமலராக கசந்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்!
கார்த்திக் மற்றும் சுந்தராக புதுமுகம் ஷிவ், நன்கு நடிக்கத் தெரிந்த முகமாக அறிமுகமாகியிருக்கிறார். அவரை மாதிரியே கருணை மலர் எனும் மலராக கதாநாயகி மான்சியும் நச் என்று நடித்திருக்கிறார். இருவருமே விறுவிறு கதைக்கேற்ற செம துருதுரு!
விக்கியா வரும் சந்தானம், விலா நோக சிரித்து விக்கலெடுக்க வைக்கிறார். சுஜாவாக ஹீரோவின் நல்ல தோழியாக வரும் சுஹாசினியும் பிரமாதம்!
ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு - அழகுப்பதிவு! வாலி, பா.விஜய் இவர்களின் பாடல் வரிகளில், சதீஷ் சக்கரவர்த்தி இசை - சக்ரவர்த்தியாக மிளிர்ந்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் சிஷ்யராம். ஒரு சில இடங்களில் குருவையே மிஞ்சி நிற்கிறார் சிஷ்யர். பலே, பலே!
கதை மொத்தமும் ஐ.டி.கம்பெனி ஒன்றின் உள்ளேயே நடப்பது சற்றே போரடித்தாலும், அழகிய ஒளிப்பதிவும், அழகிய அயல்நாட்டு லொகேஷன்களில் படமாகியிருக்கும் பாடல் காட்சிகளும் லீலை-யை வெற்றி மாலை ஆக்கிவிடுகின்றன என்றால் மிகையல்ல!
மொத்தத்தில் "லீலை" - "கலை!"