தினமலர் விமர்சனம் » மனம் கொத்தி பறவை
தினமலர் விமர்சனம்
"மெரினா" படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் படம் மனம் கொத்தி பறவை. "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் ஏற்படுத்தி தந்த இயக்குநர் எஸ்.எழில் இயக்கத்தில் சற்று பெரிய இடைவெளிக்குப்பின் வெளிவந்திருக்கும் திரைப்படம் என ஏகப்பட்ட சிறப்புகளுடன் வெளிவந்திருக்கும் காதல் ப(பா)டம் தான் "மனம் கொத்தி பறவை" என்றால் மிகையல்ல!
கதைப்படி வேறு வேறு சமூகத்தை சேர்ந்த எதிர், எதிர் வீட்டைச் சேர்ந்தவர்கள் நாயகன் சிவகார்த்திகேயனும், புதுமுக நாயகி ஆத்மியாவும் சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்து வளர்ந்த நாயகி மீது நாயகருக்கு காதல் என்றால் அப்படி ஒரு காதல்! ஆனால், கல்விதரத்திலும், வாழ்க்கை தரத்திலும், சமூக அந்தஸ்த்திலும் மிகவும் உயர்ந்த நாயகியிடம் தன் காதலை சொல்ல நாயகருக்கு பயங்கர தயக்கம்! ஆனால், நாயகி நட்பாக தன்னிடம் பழகுவதை எல்லாம் தன் ஆண் நட்பு வட்டாரத்தில் தப்பாக இல்லை, இல்லை... காதலாக கலந்துகட்டி சொல்லும் நாயகர் தனது பொய்களாலேயே நாயகியின் திருமணம் நின்று போக காரணமாகிறார். அப்புறம்? அப்புறமென்ன...? நாயகிக்கும், நாயகர் மீது காதல் இருந்ததா? இல்லையா...? உற்றார், ஊரார் எதிர்ப்பையும் மீறி நாயகனும், நாயகியும் இணைந்தார்களா...? இல்லையா...? என்பது மனம் கொத்தி பறவை படத்தின் பக் பக் மீதிக்கதை!
கண்ணனாக, காதலனாக, கதாநாயகராக சிவகார்த்திகேயன் வாழ்ந்திருக்கிறார். தன் தந்தை இளவரசு சொல்லும் வேலைகளை தட்டிக்கழித்தும், எதிர்வீட்டு நாயகியின் குடும்பத்தார் சொல்லும் காரியங்களை "எள்" என்பதற்குள் எண்ணெய் ஆக்கி முடிப்பதுமாக கலக்கி இருக்கிறார் சிவகார்த்தி! நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருந்தும் சிவகார்த்தி ஏனோ தெரியவில்லை... ஹீரோவாக நம் மனதில் ஒட்ட மறுப்பது சற்றே மைனஸ்! மற்றபடி ஓ.கே.!!
ரேவதி பாத்திரத்தில் வரும் ஆத்மியா பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "ஆத்ம" திருப்தியா!
சிங்கம் புலி, பரோட்டா சூரி, வெண்ணிறை ஆடை மூர்த்தி, சாமஸ், ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் காமெடிக்கு கியாரண்டி கூறுகிறார்கள். பலே! பலே! இளவரசு, ரவிமரியா, கிஷோர், ஆடுகளம் நரேன், வனிதா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
டி.இமானின் இசையில் "டங்... டங்..." மற்றும் "போ போ... போ..." உள்ளிட்ட பாடல்கள் படத்தின் பெரியபலம்! சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு ஆஹா ஓஹோ பதிவு!
"காதலுக்கு மரியாதை" க்ளைமாக்ஸை மீண்டும் ஒரு முறை க்ளைமாக்ஸ் ஆக்கியிருப்பதை மட்டும் இயக்குநர் எஸ்.எழில் தவிர்த்திருந்தார் என்றால் "மனம் கொத்தி பறவை" மேலும் பெருவாரியான ரசிகர்களின் மனங்களை கொத்திப் பறந்திருக்கும் எனலாம்!
-------------------------------------------------
குமுதம் விமர்சனம்
“டேய், ரேவதிக்கு எம்மேல லவ்டா’ - கண்ணன். “உசுருக்கு உசுரா காதலிக்குற ரெண்டு பேரையும் நாம சேர்த்து வச்சே ஆகணும்னு’ - கண்ணனின் நண்பர்கள்.
“கல்யாணத்தன்னிக்கு என்னைக் கடத்திட்டு வந்திருக்கீங்களே, நான் கண்ணனைக் காதலிக்கவே இல்லை லூஸுங்களா’ - ரேவதி. இப்படி சில கலாட்டாக்களின் தொகுப்புதான் “மனங்கொத்திப்பறவை.’
அடிவாங்கியே காதலில் ஸ்கோர் பண்ணுகிற கண்ணன் கேரக்கடருக்கு சிவகார்த்திகேயன் வெகு பொருத்தம். கேரக்டரின் அம்சமே சொதப்புவதுதான் என்பதால் இவரது நடிப்பில் நிகழும் சின்னச் சின்ன சொதப்பல்கள் பேலன்ஸ் ஆகிவிடுகின்றன. ரேவதியாக வரும் புதுமுகம் ஆத்மியா செழுமை, இனிமை, நடிப்பில் மட்டும் கொஞ்சம் வெறுமை. திருமணத்தின்போது கடத்தப்பட்டாலும் சரி, வெளியூரில் அரைகுறைக் காதலன் அண்ட் கோவிடம் மாட்டிக் கொண்டாலும் சரி இவரது ரியாக்ஷன் ரொம்பவே ஸ்லோமோஷன்.
சிங்கம்புலி, சூரி, ஷாம்ஸ், ஸ்ரீநாத் ஆகியோர் அடங்கிய நண்பர்கள் டீம்தான் படத்தின் நிஜ ஹீரோ. ஆத்மியாவின் முரட்டு அண்ணன்களிடம் இவர்கள் தவணை முறையில் அடிவாங்குவதும் புலம்புவதும் காமெடி ஸ்பெஷல்.
இளவரசுக்கு வழக்கம்போல் தறுதலைப் பையனுக்காக அப்பா கேரக்டர். ஆனாலும் ரசிக்க வைக்கிறார். ஆத்மியாவின் அப்பா நரேன், அவரது சித்தப்பா (யாரது, நல்ல செலக்ஷன்) ரவிமரியா, வனிதா ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
பல இடங்களில் ஒளிப்பதிவில் இலக்க தெரியாத தடுமாற்றம். கும்பகோணம், மன்னார்குடி என சுற்றிவரும் முதல் பாதிக்கான கதைக்களம் படத்துக்கு உயிரூட்டுகிறது. இமானின் பாடல்கள் ஜாலி கதைக்கு சுதி ஏற்றுகின்றன. செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத மாதிரி முதல் முக்கால் மணி நேரம் படத்தில் எக்கச்சக்க திணறல். ஆத்மியா திடீரென “எனக்கும் உன்னைப் பிடிக்கும்டா’ என்று சிவகார்த்திகேயனிடம் சரண்டர் ஆவதற்கு எங்குமே க்ளூ இல்லை.
இயக்குநர் எழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு கலகலப்பான காதல் கதையைத் தர வேண்டும் என களமிறங்கியிருக்கிறார். அங்கங்கே தடுமாறினாலும் ஜெயித்துவிட்டார்.
மனம்கொத்திப் பறவை - கலர்ஃபுல் பறவை
குமுதம் ரேட்டிங் - ஓகே.