தினமலர் விமர்சனம் » விளையாடவா
தினமலர் விமர்சனம்
தெருவோரம் கேரம் விளையாடும் ஒரு அன்றாடங்காச்சியின் வளர்ப்பு மகன், ஸ்டேட் கேரம் பிளேயராகும் கதை தான் "விளையாட வா" படத்தின் மொத்த கதையும்!
தெருவோரம் கேரம் விளையாடி ஜெயிக்கும் அன்றாடங்காச்சி கட்டிட தொழிலாளியாக பொன்வண்ணன், மிகச்சரியாக பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். அவரது வளர்ப்பு மகனாக புதுமுகம் விஸ்வநாதன் பாலாஜியும், முதல்படம் என்று சொல்லுமளவிற்கு இல்லாமல் பிரமாதப்படுத்தியிருக்கிறார். விஸ்வநாதன் பாலாஜியின் காதலியாக நடிகை திவ்யா பத்மினி காதல், கண்ணாமூச்சி, கவர்ச்சி என ரசிகர்களை உட்கார வைக்கிறார். பொன்வண்ணனின் மனைவியாக லட்சுமி ராமகிருஷ்ணன், லிவிங்ஸ்டன், மயில்சாமி, சார்லி, கொட்டாச்சி, சங்கர் உள்ளிட்டவர்களும் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணாவும் வந்து போகிறார்கள்.
கே.எஸ்.ராமகிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஓ.கே., ஸ்ரீமுரளியின் இசையில் "லாலி லாலி காதலி..." பாடல் மட்டுமே சுபலாலி மற்றபடி, கதாநாயகி வில்லியாக வந்து காதலியாவது, அண்ணன்-தம்பிகளை விரோதமாக்கி வில்லன்கள் குளிர்காய்வது, தம்பியின் தன் மீதான பசாத்தை அவன் வாங்கி, தனக்காக வைத்திருக்கும் ஒரு பொருள் மூலம் உணர்ந்ததும், அண்ணன் மனம் மாறுவது, வளர்த்த குடும்பத்திற்காக ஹீரோ தன் வாழ்க்கையையே விட்டுத்தர முயல்வது... உள்ளிட்ட வழக்கமான கதைக்களத்தை தவிர்த்து விட்டுப்பார்த்தால், கமலேஷ்குமாரின் கதை, வசனத்தில் விஜய் நந்தாவின் திரைக்கதை, இயக்கத்தில் "விளையாடவா" படத்தில் கேரம் விளையாட்டை முதன்முதலாக தமிழ் திரையில் பிரபலப்படுத்தியிருப்பதாக பாராட்டலாம்!
"விளையாடவா" - "வாரே வா"!!