தினமலர் விமர்சனம் » வேலூர் மாவட்டம்
தினமலர் விமர்சனம்
ஹீரோ, வில்லன், வில்லானிக் ஹீரோ என பன்முகங்கொண்ட இளம் நடிகர் நந்தா, ஹீரோவாக ஐ.பி.எஸ்., ஆபிஸராக நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் "வேலூர் மாவட்டம்". "மாசிலாமணி" படத்தை தொடர்ந்து, ஆர்.என்.ஆர்.மனோகரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம்!
கதைப்படி, மார்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக வருகிறார் ஜி.எம்.குமார். அவரது மகன் நந்தா, தன்னை மாதிரி தன் மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மகனை நன்றாக படிக்க வைக்கிறார். படித்து பெரிய ஐ.பி.எஸ்., ஆபிஸராகும் நந்தா, டில்லியில் போலீஸ் அகடாமி டிரையினிங் முடிந்ததும், வேலூர் மாவட்டத்திற்கு ஏ.எஸ்.பி.யாக பொறுப்பேற்கிறார். நேர்மையாக செயல்படும் அதிகாரியாக வளைய வரும் நந்தாவிற்கு, அவரது நேர்மையே வில்லனாகிறது. அதன் விளைவு ராஜினாமா வரை செல்லும் நந்தா, தொடர்ந்து போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தாரா...? வில்லன்களை வென்றாரா...? என்பது மீதிக் கதை! இக்கதையினூடே கதாநாயகி பூர்ணாவுடனான நந்தாவின் காதல், கல்யாணம், இத்யாதி, இத்யாதிகளை கலந்து கட்டி, கட்-அண்ட்-ரைட் காக்கி கதையில் மேற்படி கலர்ஃபுல் சமாச்சாரங்களையும் இணைத்து கலக்கலாக கதை சொல்லி, இரண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் ஃபுல் ஸ்பீடில் படம் பண்ணியிருக்கும் இயக்குநரை பாராட்டலாம்!
மிடுக்கான போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் ஐ.பி.எஸ். ஆபிஸராக நந்தா நன்றாகவே நடித்திருக்கிறார். அப்பா ஜி.எம்.குமாருடனான சென்டிமெண்ட், பூர்ணாவுடனான லவ், வில்லன் அழகம்பெருமாள், அமைச்சர் அண்ட் கோவினருடனான ஆக்ஷ்ன் என அத்தனையிலும் புதிய பரிமாணத்தில் மிளிர்ந்திருக்கும் நந்தாவிற்கு நான்கைந்து சபாஷ்கள் சொல்லலாம்.
முத்துக்குமார் ஐ.பி.எஸ்.ஸின் அதாங்க நந்தா காதல் மனைவி ப்ரியாவாக பூர்ணா, தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். நந்தாவின் ஜீப் டிரைவராக வரும் சந்தானமும், அவரது அப்பாவாக வரும் சிங்கமுத்துவும் செய்யும் காமெடி காட்சிகள் ஒவ்வொன்றும் வயிறு புண்ணாகும் கலாட்டா காட்சிகள். ஜி.எம்.குமார், வில்லன் அழகம் பெருமாள், கோடிகளிலேயே பேரம் பேசும் அந்த அமைச்சர் கேரக்டர் என ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே, பலே! வெற்றியின் ஒளிப்பதிவு பலம்! சுந்தர்.சி.பாபுவின் இசையும், பாடல்களும் பலவீனம்!
மொத்தத்தில் ஆர்.என்.ஆர்.மனோகரின் எழுத்து இயக்கத்தில் "வேலூர் மாவட்டம்", கடமை தவறாத "காக்கி வட்டம்" கண்டிப்பாக "கல்லாகட்டும்"!