தினமலர் விமர்சனம் » ஒரு நடிகையின் வாக்குமூலம்
தினமலர் விமர்சனம்
ஒரு நடிகை, நடிகையாக அறிமுகமாவதற்கும், தொடர்ந்து நடிகையாக தன்னை தக்க வைத்துக் கொள்ளவும், அதற்காக அவர் படும்பாடுகளையும், பகிர்ந்து கொள்ளும் படுக்கைகளையும் பட்டவர்த்தனமாக எடுத்து கூறியிருக்கும் திரைப்படம் தான் "ஒரு நடிகையின் வாக்குமூலம்" மொத்தமும்!
கதைப்படி நடிகை அஞ்சலி எனும் பாத்திரத்தில் வரும் சோனியா அகர்வாலின் அப்பா தேவராஜூலு, ஆந்திராவின் அவர்களது சொந்த ஊரில் பெரிய மேடை நாடக நடிகர். அதனால் நடிப்பாசையில், தன் தாய்குலம் கிரிஜாவுடன் சென்னை வருகிறார் சோனியா அகர்வால். வந்த இடத்தில் மகளை நடிகையாக்க, தாய் தன் உடலை விற்கிறார். அதுவும் போதாதென மகளின் மனதையும் கல்லாக்கி அவரையும் எல்லாவற்றிற்கும் தயாராக்கி, எல்லோராலும் பாராட்டப்படும் நம்பர்-1 நடிகையாக்குகிறார். நம்பர்-1 நடிகை ஆன பின்பும், நம்பர்-2 திரை மறைவு காரியங்களை நிறுத்தாமல் செய்ய சொல்லும் தாய்க்குலம், தாய்மாமன், இயக்குநர், காதலன் அண்ட் கோவினர் என எல்லோர் மீதும் கோபித்துக் கொண்டு துறவரம் போகிறார். இந்த கதையை எத்தனைக்கு எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ...?அத்தனைக்கு அத்தனை வித்தியாசம் ப்ளஸ் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராஜ்கிருஷ்ணா என்பது தான் ஹைலைட்!
இயக்குநர் எதிர்பார்க்கும் வித்தியாசத்தையும், விறுவிறுப்பையும் உள்வாங்கிக் கொண்டு நடிகை அஞ்சலியாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகை சோனியா அகர்வால்! ஒரு பக்கம் தந்தையின் நடிப்பாசை, மற்றொரு பக்கம் தாய்குலத்தின் பணத்தாசை, இன்னொருபக்கம் காதலன் என நம்பியவர்கள் எல்லாம் தன்னை தான் உயருவதற்காகவும், தன் உடம்பு சுகத்தை தணித்து கொள்வதற்காகவும், அனுபவித்துவிட்டு அம்போ என விட்டு விட்டு செல்லும் இடங்களில் சோனியாவைத்தவிர இத்தனை சிறப்பாக வேறு யாராலும் நடித்திருக்க முடியாது, எனும் அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கிறார். நடிகையாக சோகமே பிரதானமாக வாழ்ந்தாலும், பாடல் காட்சிகளில் படம் பார்க்கும் ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டும் விதத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார் என்பது தான் இப்படத்தின் பெரும்பலம்!
சோனியாவின் தாய்குலமாக கிரிஜாவாக வரும் ஊர்மிளா, பெரும்பாலான நம்மூர் நடிகைகளின் பணத்தாசை பிடித்த தாய்குலங்களை பிமாதமாக பிரதிபலித்திருக்கிறார். மேடை நாடக கலைஞராக, சோனியாவின் அப்பாவாக வரும் தேவராஜ், சென்னையில் செட்டிலான மனைவியின் சர்வாதிகாரத்திற்குமுன் சைலண்ட்டாக அதுவும் தனியாக அமர்ந்து குடித்து கொண்டிருப்பது போன்ற ஷாட் ஒன்று போதும், நம்மூர் நடிகைகளின் தந்தை குலங்கள் படும்பாட்டை எடுத்து கூற...
புதுமுக நடிகர்கள் சதன், கபில், பைனான்சியரின் சட்டப்பூர்வமில்லாத மனைவியாக வரும் கோவை சரளா, நடிக்க வாய்ப்பு தேடும் அவரது தங்கை நிக்கோல், ருக்மணி-ஜோதிலட்சுமி, ஆல் இன் ஆல் அழகேஷ் - கஞ்சாகருப்பு, இயக்குநர் ராஜ்நந்தனாக வரும் ராஜ்கபூர், தாய்மாமன் தட்சணாமூர்த்தியாக வரும் சுக்ரன், டி.வி.நிருபராக வரும் புன்னகைப்பூ கீதா உள்ளிட்ட எல்லோரும் தங்களது பாத்திரம் அறிந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். கிரேட்!!
நாக-கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஓ.கே! ஆதிஷின் பின்னணி இசை பலவீனம், பாடல்கள் இசை பலம்! டெக்னிக்கலாக ஒரு சில குறைகளும், லாஜிக்காக மேலும் சில குறைகளும் இருந்தாலும், துணிச்சலாக திரையில் ஜொலிக்கும் நம்மூர் நடிகைகளின் திரை மறைவு வாழ்க்கைகளை ஒரு நடிகையின் வாக்குமூலமாக எழுதி, இயக்கி இருக்கும் ராஜ்கிருஷ்ணாவுக்கு தயக்கமின்றி ஹாட்ஸ் ஆப் சொல்லலாம்!
ஆக மொத்தத்தில் "ஒரு நடிகையின் வாக்குமூலம்" - நடிகையாக விரும்பும் பெண்களுக்கு "படம் அல்ல பாடம்"!--------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
கதைஒரு நாடக நடிகரின் மகள் வெள்ளித் திரையின் சக்ஸஸ்ஃபுல் நடிகையாகிறார். அவரது வெற்றிக்குப் பின்புறத்தில் இருக்கும் ரணங்களும், சோகங்களும், துரோகங்களும் தான் கதை. இந்த நடிகையாக இருக்குமோ, இல்லை இல்லை இது அந்த நடிகையின் கதை என ஏகத்துக்கும் யூகிக்கும்படி உண்மையின் நிழல் படிந்த திரைக்கதை! துணிச்சல்தான் புதுமுக இயக்குனர் ராஜ் கிருஷ்ணாவுக்கு! கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறது படம்!
ப்ளஸ்:* கதையின் சோகத்தைத் தாங்கிப் பிடிக்கும் சோனியா அகர்வால்.
* சோனியா அகர்வாலுக்கு எதிராகக் களமிறங்கும் கோவை சரளா கலாட்டா காமெடிகள்!
* நடிகையை உறவுக்கு அழைக்கும் இயக்குனராக நடித்த நிஜ இயக்குனர் ராஜ் கபூரின் தைரியம்!
* சோனியாவின் அம்மாவாக நடிகை ஊர்மிளாவுக்கு நிறம் மாறும் கேரக்டரில் ஈர்ப்பான நடிப்பு.
* நான் பணம் பண்ணும் எந்திரமல்ல என்னை விட்டு விடு என்று சோனியா, தாயிடம் கெஞ்சும் போது திரைக் கதையின் கனம் மனசுக்குள் இறங்குகிறது!
* ஒரு பாட்டுக்கு வந்து ஆடிவிட்டுப் போகும் ஜித்தன் ரமேஷால் ஐந்து நிமிடம் தியேட்டரில் கலகல!
மைனஸ்:* துணிச்சலான கதைதான் என்றாலும் அடல்ஸ் ஒன்லி என்று சொல்ல வைக்கும் சீன் தொகுப்பு!
* பிரபல நடிகை எங்கிருக்கிறார் என ஒருவருக்குக் கூடவா தெரியாது? லாஜிக்கின் மேஜிக் ஒர்க்-அவுட் ஆகவில்லை.
* ஆதிஷின் இசையில் பாட்டு பரவாயில்லை என்றாலும், சோனியாவுக்கு டான்ஸ் வரவில்லை!
* கஞ்சா கருப்பு ஏனோ எதிலும் ஒட்டாமல் நடித்து விட்டு போயிருக்கிறார்!
* சினிமா உலகின் கெட்டவர்களை மட்டும் காட்டாமல் நல்லவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கலாம்!