தினமலர் விமர்சனம் » குருசாமி
தினமலர் விமர்சனம்
ஐயப்ப சுவாமி தன் பக்தர்களுக்கு, பக்தர்களோடு பக்தராய் காட்சியளித்த கதைகளையும், பாடம் புகட்டிய நிகழ்வுகளையும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் தொகுத்து, இந்த ஐயப்ப சீசனில் வெளிவந்திருக்கும் பக்திப்படம் தான் "குருசாமி".
முருகன் புகழ்பாடிய கிருபானந்த வாரியார் ஸ்டைலில் குருசாமி டெல்லி கணேஷ், மாலை போட்டுக்கொள்ள வரும் தன் பக்தர்களுக்கு ஐயப்பனின் மகிமைகளை ஒவ்வொன்றாக சொல்வது போன்று குருசாமி படத்தில் ஆரம்பமாகும் முதல் காட்சியில் தொடங்கி, இறுதிவரை குட்டிகுட்டி கதைகளை உட்புகுத்தி படத்தை வித்தியாசமாக ஐயப்பன் பக்திப்படம் என்ற அளவில் மட்டுமே இல்லாமல் ஜனரஞ்சகமாக நகர்த்தியிருக்கும் இயக்குநர், தயாரிப்பாளர் கே.ஆர்.விஷ்ராந்த் விஷயாதிதான்!
வட்டிக்கு விடுபவரின் வாரிசுக்கு மாலை போட வைத்து அப்பனுக்கு புத்தி புகட்டுவதில் தொடங்கி, மந்திரம்-தந்திரங்களால் பாதிக்கப்படும் மலேசிய பக்தர்களுக்கு அருள்பாவிப்பது, ஏமாற்று பேர்வழிகள், திருடர்களை திருத்தி மலைக்கு மாலைபோட வைத்து, மாமூல் கேட்டு அடாவடி, அடிதடி பண்ணும் ரவுடியை ஐயப்ப சாமியாக்குவது, அக்கா மகளுக்கு அவள் சம்மதம் இல்லாமல் அவசரமாக தாலிகட்டியவரை, மலைக்கு வரவழைத்து மனைவிக்கு பிடித்தவராக்குவது... என ஏகப்பட்ட ஐயப்பன் திருவிளையாடல்களை... குட்டி குட்டி கிளைக்கதைகளாக குருசாமி டெல்லி கணேஷ் வாயால் சொல்ல வைத்து, காட்சிகளாக நம் கண்களுக்கு கலக்கலாக விரிய வைத்திருக்கும் டைரக்டரின் டெக்னிக் முற்றிலும் பிரமாதம்! அதிலும் பக்தர்களுக்கு கதை சொல்லும் குருசாமியாக ஐயப்பசாமியே அவதாரம் எடுத்து வந்திருக்கும் டெக்னிக் ரொம்ப ரொம்ப பிரமாதம்!
படத்தில் நட்புக்காக ஐயப்ப பக்தராக க்ளைமாக்ஸில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வரும் "மைனா" விதார்த். காக்கும் கடவுள் கருப்பசாமியாக வரும் "பருத்திவீரன்" சரவணன், பக்தர்களாக வரும் "பாய்ஸ்" மணிகண்டன், "தனம்" பிரேம்குமார், குருசாமி கம் ஐயப்ப சாமி டெல்லி கணேஷ், சங்கர் கணேஷ், ப்ரோட்டா சூரி, அலெக்ஸ், நெல்லை சிவா, சிசர் மனோகர், சூப்பர்குட் லெட்சுமணன், பாடகர் வீரமணிதாசன், போண்டாமணி, விஜய கணேஷ், சூரியகாந்த், கொட்டாச்சி, வெள்ளை சுப்பையா, "கல்லுக்குள் ஈரம்" ராமநாதன், நம்பிராஜன், சகாதேவன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!
வசந்தமணியின் இசையில், சபரிமலை யாத்திரைக்கு குருசாமி கட்டிட்டாரு இருமுடி..., தேங்காயில் நெய்யடைத்து வரச் சொன்னதும் பொய்யாகுமா..., இமைகள் மூடி இறைவனைத் தேடினேன்... உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ஐயப்ப பக்தர்களுக்கு அரவண பாயசம் என்றால் மிகையல்ல!
கே.ஜி.ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு, சிவசங்கர், ராபர்ட், பவர்சிவா உள்ளிட்டவர்களின் நடன அமைப்புகள், ப்ரியனின் படத்தொகுப்பு உள்ளிட்டவைகள், ஐயப்பன் மீது பக்தி இல்லாதவர்களுக்கும் பக்தியை உண்டாக்கும் அளவிற்கு சிறப்பாக உள்ளன!
மொத்தத்தில் "குருசாமி", ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமல்ல, எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் "ஜனரஞ்சகசாமி"!