தினமலர் விமர்சனம் » ஏதோ செய்தாய் என்னை
தினமலர் விமர்சனம்
ஒரு நல்ல படத்துல சில குறைகள் தெரிஞ்சா, அந்த படத்தோட இயக்குனர் மேல கோபம் வரும். படம் முழுக்க குறைகளாகவே இருந்தா... டிக்கெட் வாங்கின நம்ம மேலேயே நமக்கு கோபம் வரும். இதுல ரெண்டாவது வகை கோபத்தை “கன்னாபின்னா’ன்னு கிளறிவிடற படம்(!) ஏதோ செய்தாய் என்னை.
பொறியியல் கல்லூரி மாணவர் அர்ஜுனுக்கு(ஷக்தி), தன்னோட கல்லூரியில படிக்கிற ஷாலினியை(லியாஸ்ரீ) பார்த்த உடனே, பெட்ரோல் டேங்க்ல வத்திக்குச்சி கொளுத்தி போட்ட மாதிரி “குப்’ன்னு கொழுந்து விட்டு எரியுது காதல். உருப்படியா ஒரு காரணமும் இல்லாம, “பொசுக்’னு வர்ற இந்த காதல் ஜெயிக்குதா? இல்லையா?ங்கறதை தான் 137 நிமிஷம் 8 நொடிக்கு படமா எடுத்து படுத்தியிருக்காங்க. “காதல்’னா அதுக்கு ஒரு வில்லன் இருக்கணுமே! ஷாலினியோட தாய்மாமா நம்பி(ஆனந்த்) தான் அந்த வில்லன். நம்பிக்கு, வாழ்ந்து கெட்ட தாதா வீரு(ஆனந்த்பாபு), உள்ளூர் எம்.எல்.ஏ.(இளவரசன்), “இவரால தான் நம்பியை போட முடியும்’னு நம்பப்படுற குமாரு(ஜான் விஜய்)ன்னு மொத்தம் மூணு வில்லன்கள். இவங்க மூணு பேரும் சேர்ந்து நம்பியை கொல்ல திட்டம் போடுறாங்க. இவங்களை வைச்சே அர்ஜுனை போட்டுத்தள்ள திட்டம் போடுறாரு நம்பி. இப்படி இவங்க மாத்தி மாத்தி போடுற டுபாக்கூர் திட்டங்களால பாதிக்கப்படுறது என்னவோ ரசிகர்கள்தான்!
தலைப்பை மட்டும் கவித்துவமா வைச்ச இயக்குனர், படத்துல ஒரு காதல் காட்சியையாவது அப்படி வைச்சிருக்கலாம். படம் முடியுறத்துக்கு பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் “பில்ட் அப்’ மட்டுமே கொடுக்கற வில்லன்கள்... கடைசி பத்து நிமிஷத்துல, திடீர்னு “வீரம்’ வர்ற ஹீரோகிட்டே உதை வாங்கி உயிரைவிடுறதும், திருந்துறதும்... ம்ஹூம்! ஷக்தியோட நண்பன் கதாபாத்திரத்தில நடிச்சிருக்கிற ஸ்ரீநாத்தோட நகைச்சுவை அங்கங்கே சிரிக்க வைச்சாலும், ரெட்டை அர்த்தம் நெடி மூக்கை துளைக்குது! ஆக மொத்தம் “காதல், ஆக்ஷன், காமெடின்னு எதுவுமே ரசிக்கும்படியா இருக்கக்கூடாது!’ங்கறதுல ரொம்ப தெளிவா இருந்திருக்காங்க!
ஏதோ செய்தாய் என்னை - கடுப்பேத்தறாங்க மைலாட்
ரசிகன் குரல் - ஸ்கிரீன்ல ரொம்ப நேரமா ஏதோ ஓடுது... படம் போடுங்கப்பா!