தினமலர் விமர்சனம் » ஆயுதப்போராட்டம்
தினமலர் விமர்சனம்
வளர்ந்து வரும் நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று இன்னும் சில அவதாரங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "ஆயுதப்போராட்டம்". ஆனால் அவரது நடிப்பு அளவிற்கு கூட புதிய அவதாரங்களான எழுத்து, இயக்கம், தயாரிப்பு உள்ளிட்டவைகள் தரமானதாக இல்லாததுதான் ஏமாற்றம்...!
ஒரு நாட்டில் உள்நாட்டு போரில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டு வரும் போராளிகளை ஒழிக்க, மற்றொரு நாட்டின் ஆயுத சப்ளை நிறுவனம் ஆயுதம் வழங்குகிறது. இதனால் பாதிப்பிற்குள்ளாகும் போராளிகள், தங்கள் நாட்டிற்கு வரும் ஆயுத சப்ளை ஊழியர்கள் சிலரை காலி பண்ண களம் இறங்குகின்றனர். வென்றது போராளிகளா...? உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆயுதசப்ளை நிறுவன ஊழியர்களா...? என்பது க்ளைமாக்ஸ்! இந்த கதையுடன் காதல், காமநெடி, காமெடி எல்லாவற்றையும் கலந்துகட்டி கலக்கலாக கதை சொல்ல முயன்று, படு லோக்கலாக படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெய் ஆகாஷ்! ரசிகர்கள் தான் பாவம்!!
போராளித்தலைவனாகவும், ஆயுதசப்ளை நிறுவன ஊழியர்களில் ஒருவராகவும் ஹீரோ ஜெய் ஆகாஷ், இதில் டபுள் ஆக்ட் வேறு கொடுத்து வெறுப்பேற்றியிருக்கிறார். ஆனால் அவரது எழுத்து, இயக்கம், இத்யாதி, இத்யாதிகளுக்கு நடிப்பு பெட்டர் என்பது ஆறுதல்! படத்திற்கு "ஆயுதப்போராட்டம்" எனப்பெயர் வைத்துவிட்ட காரணத்தால், பாடல்காட்சிகளில் (மட்டும்) எல்லாம் துப்பாக்கியும் கையுமாக ஜெய், போஸ் கொடுப்பது செம காமெடி!
கதாநாயகிகள் ப்ரீத்தி மீனாள், அனிதாரெட்டி இருவருக்கும் நடிப்பை விட அவிழ்ப்பு(துணி)க்கு வாய்ப்பு அதிகம்! அதை இருவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஜெய்யின் அட்டகாசங்களில் இருந்து ரசிகர்களை காபந்து செய்வது ஆறுதல்! தீப்பெட்டி கணேஷ், சாய்கிரன், அதித் சீனிவாஸ், நீரஜ் புரோகித், சித்திரம் பாஷா உள்ளிட்டவர்கள் ஜெய்க்கு பக்கபலமாக இருந்து ரசிகர்களை மேலும் பாடாய்படுத்தி விடுகின்றனர்.
சாய்சதீஷின் ஒளிப்பதிவு, நந்தன் ராஜின் இசை எல்லாம் நன்றாக இருந்தும், கதையும், களமும், இயக்கமும் சரியில்லாதது வருத்தம்! ஓபனிங் ஃபைட் சீனும், பாடல் காட்சிகளும் பிரமாதம்! பிரமாண்டம்!! க்ளைமாக்ஸில் நடிகர்சங்க போராட்டம் வலிய திணிக்கப்பட்டிருப்பது நாடகம்!
மொத்தத்தில் இலங்கை போராளிகளை கவுரவப்படுத்துகிறேன் பேர்வழி... என களமிறங்கி, இலங்கை இராணுவத்தை காட்டிலும் கொச்சைபடுத்தி இருக்கிறார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜெய் ஆகாஷ்!
"ஆயுதப்போராட்டம்", ஆகாஷின் "போர்" ஆட்டம்!