Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ஒஸ்தி

ஒஸ்தி,osthi
21 டிச, 2011 - 10:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஒஸ்தி

   

தினமலர் விமர்சனம்



இந்தி "தபாங்"கின் தமிழ் ரீ-மேக் தான் "ஒஸ்தி". ஆனால் தமிழுக்காவும், ஹீரோ எஸ்.டி.ஆர். அலைஸ் சிம்புவுக்காவும் எக்கச்சக்க மாற்றங்கள்... அதில் சில ஒஸ்தியாகவும், சில குஸ்தியாகவும், சில ரசிகர்களுக்கு அசதியை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதுதான் "ஒஸ்தி" திரைப்படத்தின் ப்ளஸ், மைனஸ் எல்லாமுமாக இருக்கிறது!

கதைப்படி சிம்புவும், "ஜித்தன்" ரமேஷூம் ஒரே அம்மாவுக்கும், இரண்டு அப்பாக்களுக்கும் பிறந்த அண்ணன்-தம்பிகள்(எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல்ல...?!). அம்மா செல்லமாக வளரும் சிம்புவுக்கும், அப்பா செல்லமாக வளரும் ரமேஷூக்குமிடையில் சின்ன வயதில் இருந்தே ஏழாம் பொருத்தம்! இந்நிலையில் சிம்பு, அம்மா ரேவதி எதிர்பார்த்ததற்கும் மேலாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிவிடுகிறார். "ஜித்தன்" ரமேஷ் அப்பா எதிர்பார்த்ததைவிட கீழாக அப்பா நாசரின் எண்ணெய் மில்லிலேயே புண்ணாக்கும் கையுமாக, அப்பாவுக்கு துணையாக இருக்கிறார்.

சின்ன வயது முதலே யாருக்கும் கட்டுப்படாத காளையாக திரியும், எஸ்.டி.ஆர். அலைஸ் சிம்பு, தாதா சோனுசூட்டின் அரசியலில் மண் அள்ளிப்போடும் விதமாக, சட்டத்திற்கு உட்பட்டும், சட்டத்திற்கு புறம்பாகவும் சில காரியங்களில் இறங்குகிறார். இதனால் வெகுண்டெழும் சோனு, சிம்புவின்-தம்பி ரமேஷை வைத்தே அண்ணனை தீர்த்து கட்ட முயற்சிக்கிறார். வில்லன் சோனுவின் முயற்சி பலித்ததா...? அண்ணன் சிம்பு, தப்பி பிழைத்தாரா...? அல்லது தம்பி ரமேஷ் அவரை கொன்றாரா...? வென்றாரா...? என்பது "ஒஸ்தி" படத்தின் குஸ்தியும், கும்மாளமுமான மீதிக்கதை! இதனூடே சிம்பு-ரிச்சாவின் காதல்-கல்யாணம், ரமேஷ்-சரண்யா மோகனின் காதல்-கலாட்டா, நாசர்-ரேவதி தம்பதிகளின் பிளாஷ்பேக் பிள்ளைகள் சென்டிமெண்ட், சிம்பு-ரமேஷ் சகோதரர்களது பெற்றோர் சென்டிமெண்ட், இத்யாதி, இத்யாதிகளை கலந்து கட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் தரணி!

இளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சிம்புவின் காக்கி சட்டை அவதாரம் தான் "ஒஸ்தி" படம் மொத்தமும்! எஸ்.டி.ஆராக பெயரை மாற்றிக்கொண்டு விட்ட சிம்பு, பன்ச் டயலாக்குகளை மட்டும் விடுவதாக இல்லை போலும். படம் முழுக்க "சிவாஜி"ன்னா பாஸ், "ஒஸ்தி"ன்னா மாஸ்... என்றும், "நான் கண்ணாடி மாதிரி...",  "நீ எப்படி தெரியிறியோ நானும் அப்படியே பிரதிபலிப்பேன் என்றும்..." பக்கம் பக்கமாய் பன்ச் டயலாக் பேசுவது சில இடங்களில் குருவிதலையில் பனங்காயை வைத்த கதையாகிவிடுவது போன்று தெரிவதை தவிர்த்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும்! அதே சிம்பு லாஜிக்குடன் உயிருக்கு போராடும்‌ அப்பா நாசரிடம் உரிமையுடன் பேசும், உருகும்... டயலாக்குகளில் நம்மையும் சேர்த்து உருக வைக்கிறார், மருக செய்கிறார் பலே, பலே... பறந்து பறந்து அடிப்பதிலும், துப்பாக்கி சண்டைகளிலும் கூட இளம் இன்ஸாக எக்கச்சக்கமாக ரசிக்க வைக்கிறார் சிம்பு என்றால் மிகையல்ல!

நாயகி ரிச்சா ஒதுங்கிய தாவணி, முந்தியும், உசுப்பேற்றும் பாவாடை, ஜாக்கெட்டுமாக சிம்புவை மட்டுமல்ல, எக்கச்சக்கமான இளம் ரசிகர்களையும் படம் முழுக்க கிறக்கடித்திருக்கிறார். குடிகார அப்பனுடன் அம்மணி கிடந்து படும் அவஸ்தைகள் ரிச்சாவின் பாத்திரத்தை அனுதாபத்தை அள்ளும் பாத்திரமாக்கி விடுகிறது.

அழகான பொண்ணுங்களைப் பெத்த எல்லா அப்பனுங்களும் குரங்குமாதிரி தான் இருக்காங்க... என காமெடி பன்ச் டயலாக் பேசியபடி சந்தானம் பண்ணும் சேட்டைகள் செம கலக்கல்! படத்தின் பெரும் பலமே இன்ஸ் சிம்புவுடன் காமெடி கான்ஸ்டபிள்களாக வலம் வரும் சந்தானம், மயில்சாமி, தம்பி ராமையா அண்ட் கோவினரின் கலக்கல் காமெடிகள் தான்! அப்பாவி தம்பி ஜித்தன் ரமேஷ், யதார்த்தமான அம்மா ரேவதி, முரட்டுத்தனமான அப்பா நாசர், ரிச்சாவின் குடிகார அப்பாவாக வி.டி.வி.க‌ணேஷ், வையாபுரி, அழகம்பெருமாள், பாலாசிங், நரேன், ஜான் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

தமனின் இசையில் பாடல்கள் அத்தனையும் பஞ்சாமிர்தம். எஸ்.கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்புக்கு மேலும் பரபரப்பு கூட்டியிருக்கிறது.

இதுநாள்வரை காமெடி கான்ஸ்டபிள்களையும், கடுகடு கதாநாயக காவல் அதிகாரிகளையும் பார்த்து சலித்த தமிழ்சினிமா ரசிகர்களுக்கு, தரணியின் இயக்கத்தில் காவல் அதிகாரியாக வரும் கதாநாயகரே காமெடி பண்ணுவது புதுசு! ஆனாலும் லாஜிக்-மேஜிக் உள்ளிட்ட சமாச்சாரங்களை எந்த விதத்திலும் கருத்தில் கொள்ளாத "ஒஸ்தி" கொஞ்சம் "ஜாஸ்தி"!



----------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்


போலீஸ் கேரக்டரில் நடிப்பது நம்மூர் ஹீரோக்கள் விரும்பும் புரமோஷன். சிம்புக்கு அந்த வாய்ப்பை இந்தியில் சக்கைபோடு போட்ட "தபாங் கொடுத்திருக்கிறது.

ரேவதியின் மகன் சிம்பு. கணவர் இறந்துவிடுவதால் ரேவதி, நாசரை மறுமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப் பிறக்கும் மகன் "ஜித்தன் ரமேஷ். புத்தியுள்ள பிள்ளையான சிம்பு, இன்ஸ்பெக்டர் ஆகிறார். விளையாட்டுப்பிள்ளை ரமேஷ் எண்ணெய் மில்லில் அப்பாவுக்கு எடுபிடி ஆகிறார். ஒருபக்கம் தம்பியோடு சண்டை, இன்னொருபக்கம் தேர்தலில் நிற்கும் கிரிமினல் சோனுவுடன் மோதல் என சிம்பு பண்ணும் இரட்டைக் குதிரை சவாரிதான் "ஒஸ்தி.

சிக்ஸ்பேக் உடம்பு, திருநெல்வேலி தெனாவெட்டு என போலீஸ் கேரக்டருக்கு சிம்பு நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். சிம்பு அடிக்கடித் தனக்குத் தானே கொடுத்துக்கொள்ளும் பில்டப்தான் எரிச்சலைக் கிளப்புகிறது. என்னதான் எகிறி அடித்தாலும் ஓங்கிப் பேசினாலும் காக்கிச்சட்டைக் கெட்டப் சிம்புவுக்கு டூமச்தான்.

சேட்டு வீட்டுக் கல்யாண ஊர்வலத்துக்கு வந்த பெண் போலிருக்கும் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்யாயாவுக்கு பானை செய்யும் ஏழைப்பெண் கேரக்டர். போலீஸ் கதையில் போலீஸ் ஸ்டேஷனை விட அடிக்கடி காட்டப்படும் இடம் ரிச்சாவின் வழவழ இடுப்புதான்.

படத்தில் எதிர்பாராத ஆச்சரியம், ஜித்தன் ரமேஷின் துள்ளலான நடிப்பு. கான்ஸ்டபிள் சந்தானம் தன் கூட்டாளிகளை எப்போதும் அதட்டிக்கொண்டே இருக்கிறார். இரு மகன்களிடமும் அல்லல்படும் அம்மாவாக வரும் ரேவதியிடம் சீனியரின் பக்குவம்.

இசையமைப்பாளர் தமனின் பாடல்களில் மசாலா சப்ஜெக்ட்டுக்கேற்ற பாஸ்ட்ஃபுட் மியூசிக். டி.ஆர். குரலில் ஒலிக்கும் "மாமே ஒஸ்தி மாமே ஹம்மிங் முணுமுணுக்க வைக்கிறது.

சமூக விரோதிகளிடம் பறித்த பணத்தை சிம்பு வீட்டில் பதுக்கிவைப்பது, போலீஸ் படையுடன் போய் தம்பியின் திருமணத்தை நிறுத்துவது, "என்ன நடந்தால் எனக்கென்ன? என்ற எக்ஸ்ப்ரஷன்களுடனேயே ரிச்சா வலம்வருவது என படத்தில் பல பூச்சுற்றல்கள், லாஜிக் இடறல்கள். இயக்குநர் தரணியை இதற்குப் பொறுப்பாக முடியாது. ஒரிஜினலான "தபாங்கில் அப்படித்தானே இருக்கிறது?

ஒஸ்தி - சவுண்ட் பார்ட்டி

குமுதம் ரேட்டிங் - ஓகே



----------------------------------------------------


கல்கி விமர்சனம்



இந்தி தபாங் தான் தமிழின் ஒஸ்தி. எஸ்.டி.ஆர். (அதாங்க சிம்பு இப்போ இப்படித்தான் பேரை மாத்திக்கிட்டார்) செய்யும் ஜாஸ்தியான அங்க சேஷ்டைகளும், காதல் அலப்பறைகளும், வில்லனோடு போடும் குஸ்திகளும் தான் கதை. ஏற்கனவே தில், தூள், கில்லி... என  டப்பிங் ரீமேக் மசாலா கொடுத்து, ஜெயித்த இயக்குனர் தரணி, ஒஸ்தி மூலம் மீசையில மண் ஒட்டலை என்று சொல்லிக் கொள்ளலாம். எனினும் அப்படியே டப் அடிக்காமல் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி இருப்பதால் ரசிக்கலாம்.

எப்போதும் போல எஸ்.டி.ஆரின் ஹீரோயிஸம் தூக்கலோ, தூக்கல். எனினும் துருத்தல் இல்லாததால் இளமையான  இன்ஸாக (படம் முழுக்க இன்ஸ்பெக்டர் சிம்புவை இன்ஸ் என்று தான் அழைக்கிறார் சந்தானம்) வசீகரிக்கிறார். கஞ்சி போட்ட சட்டை போல விறைப்பு காட்டும் கோடம்பாக்க போலீஸ் போல இல்லாமல், காமெடியும் காதலும் செய்யும் போலீஸ் சிம்பு என்பதால் அவரது சிக்ஸ் பேக் அவதாரத்தையும் தாண்டி நடிப்பு மனசில நிற்கிறது. தம்பி ஜித்தன் ரமேஷ், பாத்திரம் அறிந்து நடிப்பு போட்டிருக்கிறார்.

பாட்டுக்கு டான்ஸ் ஆடவும் கதைக்கு கிளு கிளுப்பு சேர்க்கவும் தான் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்யாய். படம் முழுக்க தொப்புள் தெரிய தாவணி கட்ட வேணடும் என்று கண்டிஷனோடு தான் தரணி இவரை களமிறக்கி இருப்பார் போல. மகளுக்காக வி.டி.வி. கணேஷ் தற்கொலை செய்து கொள்ளும்போது அச்சச்சோ பரிதாபம்.
ரேவதியும், நாசரும் நடிப்பில் சீனியர் என்பது அவர்கள் உருகும்போதும், மருகும்போதும் தெரிகிறது. சோனு சூட், இன்னும் கொஞ்சம் கான்சென்டரேட் பண்ணினால்  இன்னொரு பிரகாஷ்ராஜாக தமிழில் வலம் வரலாம்.

அவ்வப்போது நொண்டும் திரைக்கதையை டைமிங் கவுண்டரில் தூக்கி நிறுத்துவது சந்தானமும் மயில்சாமியும் தான். சந்தானம், நிறைய படத்துக்கு அந்த வேலையை பார்த்திருக்கிறார். இருந்தாலும் எதுக்கு சந்தானம் ஸார் டபுள் மீனிங் டயலாக்?

தமனின் இசையில் அத்தனைபாடல்களும் அசத்தல். அதிலும் கலசலா பாடல் படத்தின் ப்ராண்ட் அம்பாஸிடர். சிவாஜி த பாஸ். ஒஸ்தி த மாஸ் என்று அடிக்கடி சிம்பு பஞ்ச் டயலாக்  அடிக்கையில் ஒஸ்திக்கு  இது கொஞ்சம் ஜாஸ்தி என்று தோன்றுகிறது.

ஒஸ்தி - கலசலா



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in