தினமலர் விமர்சனம்
ஒரே கல்லூரியில் படிக்கும் மதுமிதாவுக்கும், விஷ்ணுப்ரியனுக்கும் காதல். இவர்களது காதலுக்கு வில்லனும், அரசியல்தாதாவும், மதுமிதாவின் அப்பாவுமான காதல் தண்டபானி, கூடவே கராத்தே ராஜா இந்த இருவரும் தான். இந்த இருவரது கண்ணிலும் மண்ணை தூவி விட்டு, விஷ்ணுப்ரியன் மதுமிதாவின் கரம்பிடித்தாரா? இல்லையா...? என்பது தான் "காதல் மெய்பட" படத்தின் மீதிக்கதை!
இந்த நாலுவரி கதையை நான்காயிரம் கிலோ மீட்டர் சுற்றி சுவாரஸ்யப்படுத்துகிறேன் பேர் வழி... என சொதப்பி சூடு கிளப்புவதற்கு பதில் ரசிகர்களுக்கு சூடுபோட்டு விடுகிறார்கள் பாவம். ஆரம்ப காட்சியிலேயே அங்கப்பிரதட்சணம் பண்ணுகிறேன் பேர்வழி என எதிர்திசையில் படுத்து உருண்படி வந்து, எதிரே உருண்டு வரும் பெண்கள் மேலே விழுந்து, புரண்டு போகச் சொல்லி அதில் சுகம் காணும் ஹீரோவுக்கு, நாயகி மதுமிதா மீது அப்படி ஒரு காதல்! எப்படி வந்தது? என்பதில் தொடங்கும் கேள்விக்குறி படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பரவி, விரவி, தொங்கி, தொக்கி தொடர்கிறது.
மகளின் காதலை அவரது அப்பா, தான் 2ம் கல்யாணம் கட்டிக்கொள்ள முயல்வது போன்று ட்ராமா போட்டு தடுக்க முயல்வதும், க்ளைமாக்ஸில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் காதலர்கள் சொல்லும் காரணமும் ஆறுதலான புதுசு என்றாலும், ரொம்பவே ஓவரான அதிரடி. அதற்காக இயக்குநர் ரவி ஆச்சார்யாவை பாராட்டலாம்.
அஜீத், விஜய்க்கு நிகராக சண்டைபோடும் விஷ்ணுப்ரியன், உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என... வெடவெட என பரிதாபமாக தெரியும் குடைக்குள் மழை மதுமிதா, கடிக்கும் கஞ்சாகருப்பு, காதல் சுகுமார் கோஷ்டி, புதியவர் முர்ஷக்கின் இசை, சிரஞ்சீவியின் ஒளிப்பதிவும், எல்லாவற்றையும் காட்டிலும் காதல் தண்டபாணி, கராத்தே ராஜாவின் வில்லத்தனம் கலக்கலான ஆறுதல்!
மொத்தத்தில் "காதல் மெய்பட" ஓடும் திரையரங்குகள், "காதலர்கள் தனிமையில் கூட" வசதியான இடம்! ம், நல்லபடம்!!