தினமலர் விமர்சனம் » காதலர் குடியிருப்பு
தினமலர் விமர்சனம்
எதிரும், புதிருமான ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் எதிரும், புதிருமான இரு சமுதாயங்களுக்கிடையே ஏற்படும் பெரும் கலவரத்தின் போது காதல் பூக்கிறது! அது காய்த்து கணிந்து மகிழ்ந்ததா? அல்லது கல்லடி, சொல்லடிபட்டு கருகி கலவரமானதா...? என்பதை சுவாரஸ்யமாகவும், சூப்பராகவும் சொல்லி இருக்கும் படம்தான் "காதலர் குடியிருப்பு!"
காவலர் குடியிருப்பு ஒன்றில் பூக்கும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது "காதலர் குடியிருப்பு". அம்மாவுக்கு அடங்காத பிள்ளையாக புதுமுக நாயகர் அனீஷ், அசத்தலாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக புதுமுகம் ஸ்ருதியும் கவர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் பஞ்சம் வைக்காமல் நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார்.
ஏற்கனவே ஒருத்தரை காதலித்து வந்தாலும் அவனது கையாலாகாத தனத்தால் ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஹீரோயின் எதிரியாக பாவிக்கும் ஹீரோவுக்குமிடையில் பூக்கும் காதல் ரொம்பவும் யதார்த்தமாகவும், இனிமையாகவும் படமாக்கப்பட்டிருப்பதுதான் காதலர் குடியிருப்பு படத்தின் பெரியபலம்.
அதேமாதிரி அம்மாவுக்கு அடங்காமல் ஹீரோ அனீஷ் பண்ணும் சேட்டைகளும், அப்பா இல்லாத பிள்ளையான அவரது அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் மகனை பற்றிய கவலையிலேயே உயிரை மாய்த்து கொள்வதும் உருக்கம்! அதேமாதிரி கணவர்தர்மா இறந்தபின்பும், அவரது நப்புக்கும் நண்பர் அவினாஷூக்கும் சரண்யா தரும் மரியாதை போற்றுதலுக்குரியது!
ஜேம்ஸவசந்தனின் இசையும், துவராக நாத்தின் ஒளிப்பதிவும், ஏ.எம்.ஆர்.ரமேஷின் இயக்கத்தில் காதலர் குடியிருப்பை காஸ்ட்லி குடியிருப்பாக காட்டுகின்றனர்! பேஷ், பேஷ்!!
மொத்தத்தில் "காதலர் குடியிருப்பு", "கலக்கல் குடியிருப்பு!!"