தினமலர் விமர்சனம் » முதல் இடம்
தினமலர் விமர்சனம்
ஏ.வி.எம்., நிறுவனம் சற்று பெரிய இடைவெளிக்குப்பின் தயாரித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான், "முதல்இடம்". இது "மைனா" விதார்த் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் மூன்றாவது படமும் கூட!
கதைப்படி தஞ்சாவூர் பகுதி காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் கிரிமினல் லிஸ்ட் போர்ட்டில், முதல் இடத்தை பிடிக்கத்துடிக்கும் லோக்கல் ரவுடி எமகுஞ்சு எனும் விதார்த். மகேஸ், மகேஸ்வரன் எனும் பெற்றோர் வைத்த பெயரே மறந்து போகும் அளவில், எக்குதப்பான காரியங்களில் இறங்கி எமகுஞ்சாக பில்-டப் ஆகும் விதார்த்துக்கு, பள்ளிக்கூட மாணவி மைதிலி எனும் அறிமுகநாயகி கவிதா நாயர் மீது அப்படியொரு காதல்! ஆனால் அதற்கு மைதிலியின் பஸ் கண்டக்டர் அப்பா, இளவரசு தடை போடுகிறார். தடையை தாண்டி விதார்த்தின் காதலும், முதல் இட லட்சியமும் நிறைவேறியதா...? இல்லையா...? என்பதுதான் "முதல்இடம்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
மகேஸ் அலைஸ் எமகுஞ்சுவாக ஹீரோ விதார்த்தின், நீதிமன்ற எண்ட்ரியாகும் முதல் சில காட்சிகளே, எமகுஞ்சு கேரக்டரின் ஹீரோ இமேஜை கூட்டி எதிர்பார்ப்பை உண்டு பண்ணுவதால், அடுத்தடுத்த காட்சிகளில் அவர் பண்ணும் அலப்பறைகள் ஓவராக தெரியவில்லை. என்னதான் எமகுஞ்சு என்றாலும், உள்ளுக்குள் இருக்கும் ஒருவித அப்பாவி தனத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்துவதை திறம்பட செய்திருக்கும் விதார்த், தான் திறமையான நடிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார். அதிலும் காதல் காட்சிகளிலும், காதலுக்காக வாதாடும் காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்திருக்கும் மனிதருக்கு, தமிழ்சினிமாவில் நிச்சயம் "முதல் இடம்" காத்திருக்கிறதென்றே சொல்லலாம்!
பள்ளி மாணவி மைதிலியாக பாத்திரத்திற்கேற்ற தேர்வு புதுமுகம் கவிதாநாயர். படத்தின் பின்பாதியில் வரும் சில குளக்கரை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், சுறுசுறுப்பாகவும், சூப்பராகவும், இளமையாகவும், இனிமையாகவும் தெரியும் கவிதா, ஆரம்ப காட்சிகளில் சற்றே வயதானவராகவும், சோர்வாகவும் தெரிவதற்கு காரணம் யாரோ...? எவரோ...? எனக்கேட்குமளவு முற்பாதி படத்தில் டல்லடிக்கும் புதுமுகம் கவிதா, பிற்பாதியில் டாலடிக்கிறார் பேஷ், பேஷ்!!
ஆண்ட்டி ஹீரோ எனும் அளவிற்கு கலக்கலான கருப்பு பாலுவாக வரும் கிஷோர், ரவுடியாக, தாதாவாக துடிக்கும் சில முன்கோபி, இளைஞர்களுக்கு தன் பாத்திரம் மூலம் சரியான பாட புகட்டியிருக்கிறார். மயில்சாமி மாமா(ஹீரோவின்...) வந்தாலே சிரிப்பும் வருகிறது. ஆரம்பகாட்சியில் நீதிபதியாக வரும் பெருதுளசி பழனிவேலில் தொடங்கி, ஹீரோயின் கண்டக்டர் தந்தை இளவரசு வரை சகலரும் தங்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் சிங்கப்பூரராக வரும் அப்புக்குட்டி, கிஷோரின் தம்பி எம்.சி.,யாக வரும் திருமுருகன், சேர்மன் கம் வில்லனாக வரும் நமோ நாராயணன், ஆளுங்கட்சியின் ஏரியா தலைவராக வரும் மதுரை செல்வம், ஒத்தகை லட்சுமணனாக வரும் குமரேசன், கிஷோர்-திருமுருகன் பிரதர்ஸின் அட்வைஸராக வரும் சித்தர் தேவராஜ், அஸிஸ்டண்ட் கமிஷனர் முரளி மச்சான், நாயகியின் அண்ணனாக சோடபுட்டி கண்ணாடியும், சிரித்த முகமாக வரும் கிஷான் உள்ளிட்ட எல்லோரும் முதல் இடத்தை முதல் இடத்திற்கு எடுத்து செல்ல முக்கிய பங்காற்றி இருக்கின்றனர்.
"ஊரு ஊரு தஞ்சாவூரு... எனத் தொடங்கித் தொடரும் ஒத்தப்பாடலுக்கு ஆடும் கீர்த்தி சாவ்லா, ஜொள் பிரியர்களின் வாயில் எச்சில் ஊற வைத்து விடுகிறார். ஆமாம் மேடம் எப்போ இம்மாம் பெரிசானீங்க...?! "மைனா"விற்குப்பின் டி.இமானின் இசை, இந்தப்படத்திலும் பேசப்படும் அளவில் பெரிதாய் இருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ரகத்திலும் பலே, பலே சொல்ல வைக்கின்றன. பி.செல்லதுரையின் ஒளிப்பதிவு, ரவிவர்மனின் ஓவியப்பதிவு, வி.டி.விஜயனின் படத்தொகுப்பு, கத்தரிப்பதிலும் முத்திரை பதித்துள்ளது என்றால் மிகையல்ல!!
காதலி எழுதிய ஆங்கில கடிதத்தை அவரது அண்ணனையே படிக்க சொல்லி அர்த்தம் தெரிந்து கொள்வதிலும், கால்பிடி வைத்தியத்திலும், "புருஷன் 6 மணிக்கு திரும்பி வருவானா, 9 மணிக்கு திரும்பி வருவானா என ஒரு பொண்டாட்டி காத்திருக்கலாம் தப்பில்லை. திரும்பிவருவானா, மாட்டானா என பயந்து வாசலை பார்த்திருப்பது கொடுமை" எனும் வசனக்காட்சிகளிலும் திரும்பி பார்க்க வைக்கும் அறிமுக இயக்குநர் குமரன், மொத்தத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தி விடுகிறார்.
அப்படி, இப்படி என ஆக மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால், கமர்ஷியலாக ஏ.வி.எம்.மின், "முதல் இடம்" எல்லோரது மனதிலும் "நீங்கா இடம்" பிடிக்கும் "திரைப்படம்!"