தினமலர் விமர்சனம்
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் டானி பாயல் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள 127 ஹவர்ஸ் படத்தின் பை-லைனில் எவ்ரி செகண்ட் கவுண்ட்ஸ், எவ்று கூறுவது முற்றிலும் உண்மை என சொல்லும் அளவுக்கு படம் பரபரப்பாக நகர்கிறது.
அமெரிக்காவில் அபாயகரமான செங்குத்தான மலைப்பகுதிகளில் மலை ஏறும் துணிச்சலான ஆரன் என்ற இளைஞரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் இது. மலைப்பகுதியில் பாறைகள் மீது சைக்கிளில் ஆபத்தான வேகத்தில் ஆரன் செல்லுபவர். சைக்கிளை நிறுத்திவிட்டு செங்குத்தான பாறைகளின் மீது ஏறுகிறார். அப்போது முற்றிலும் எதிர்பாராத வகையாக, பாறையில் இறங்கும்போது ஆரனின் வலது கை மீது பெரிய பாறாங்கல் விழுந்து, கை சிக்கிக் கொள்கிறது. எவ்வளவு முயன்றும் கையை எடுக்க முடியவில்லை. அடுத்து 127 மணி நேரம் என்ன நடக்கிறது, ஆரன் எப்படி வெளிவருகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை. படத்தின் பெரும்பகுதி தனக்குத்தானே பேசிக் கொள்வது போல அமைந்துள்ளது. ஆனாலும் படத்தின் விறுவிறுப்பு தொடர்கிறது.
எதிர்பாராத விபத்து ஏற்படும்போது, முதலில் செய்ய வேண்டியது பதட்டப்படாமல் இனி என்ன செய்ய வேண்டும், விபத்தில் இருந்து எப்படி வெளியேற வேண்டும் என்று யோசிப்பதுதான். எல்லாமே முடிந்து விட்டது என்ற விரக்தி நிலைக்கு வரக்கூடாது என்று ஆரன் சொல்கிறார். தன்னிடம் உள்ள மூவி காமிரா மூலம் தன்னைத்தானே படம் எடுக்கிறார். தன் நிலைமை பற்றி தன் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த காமிராவில் பேசுகிறார். இந்த காசெட்டை மட்டும் என் பெற்றோரிடம் கொடுத்து விட்டு, காமிராவை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். தன்னிடம் இருக்கும் தண்ணீர் பாட்டலில் தண்ணீரை அளந்து குடிக்கிறார். அவரது வாழ்க்கையில் பல சம்பவங்கள் அவருக்கு ப்ளாஷ் பேக் ஆக வருகின்றன. பெற்றோருடன் நடந்த பல சம்பவங்கள் முதல், இந்த பாறையில் அகப்பட்டுக் கொள்ளுவதற்கு முன்பு சந்தித்து உதவி செய்த இரு இளம்பெண்கள் வரை யோசித்துப் பார்க்கிறார். தப்பிக்க இதைவிட்டால் வேறுவழி இல்லை என்று ஆரன் ஒரு முடிவு செய்கிறார். பாறையின் அடியில் சிக்கிய வலது கையை தன்னிடமிருக்கும் சிறிய க்தியால் குத்தி குத்தி, மிகுந்த வலியோடு வெட்டிக் கொள்கிறார். பிறகு அங்கிருந்து வெளியே வந்து, மீட்க வரும் ஹெலிகாப்டரில் ஏறி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுகிறார். ஆரனாக நடிக்கும்
ஜேம்ஸ் பிராங்கோ படம் முடிந்த பின்னரும் நம் மனதில் நிற்கிறார். சண்டை, மசாலா, செக்ஸ், வன்முறை என்று ஏதுமில்லாமல் வித்தியாசமான நல்ல படத்தை அளித்த டானி பாயல் பாராட்டுக்குரியவர். ஆங்கில படத்திற்கு பொருத்தமான முற்றிலும் மாறுபட்ட வகையில் இசை அமைத்திருக்கும் ரஹ்மானுக்கு இந்த படம் ஒரு மைல் கல்.
ஸ்லம் டாக் போலவே இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் ரஹ்மானுக்கும், டைரக்டர் டானி பாயலுக்கும் இந்த முறை ஆஸ்கார் விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ரஹ்மான், டானி பாயல் இருவருக்கும் ஆஸ்கார் கிடைக்குமா? என்பது பிப்ரவரி 27ம்தேதி தெரிந்து விடும்.
-எஸ்.ரஜத் -