Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பொன்மாலைப் பொழுது

பொன்மாலைப் பொழுது,ponmaalai pozhudu
03 செப், 2013 - 13:07 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பொன்மாலைப் பொழுது

 

தினமலர் விமர்சனம்


அமரத்துவம் பெற்ற கவிஞர், கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம்தான் பொன்மாலைப் பொழுது. (இது வைரமுத்துவின் வரியாக்கும்!)

தன் அப்பாவின் அதிகப்படியான கண்டிப்பால் தான் படிப்பை பாதியில் விட்டு ‘பற்றாக்குறை வாழ்க்கை’ வாழ்வது மாதிரி, தன்மகனின் வாழ்க்கையை வீணடித்து விடக்கூடாது என்னும் வைராக்கியத்துடன் மகனை தட்டிக்கொடுத்து வாழும் அப்பா கிஷோர். அப்பாவின் தட்டிக்கொடுத்தலை தவறாகவும் பயன்படுத்தாமல், சரியாகவும் புரிந்துகொள்ளாமல்... பள்ளியில் உடன் படிக்கும் காயத்ரியுடன் காதலில் விழும் அப்பா(வி) பிள்ளையாக ஆதவ் கண்ணதாசன்! கண்டிப்பு என்னும் பெயரில் தன் சக பள்ளி மாணவனுடன் தோழமையுடன் பழகும் கதாநாயகி காயத்ரியை காதலில் விழாமல் காப்பாற்றுகிறேன் பேர்வழி... என வலிய காதலில் தள்ளும் வம்பு பிடித்த அப்பா அருள்தாஸ். எதற்கெடுத்தாலும் ‘என் வீட்டு கிடேரி பொல்லாதது... உன் வீட்டு காளையை அடக்கு...’ என்னும் ரீதியில் மகளின் நண்பனை வலிய அவளது காதலனாக்கி வரம்பு மீறும் அப்பா அருள்தாஸை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வீம்பாய் காதலில் குதிக்கும் ஆசைமகள் காயத்ரி! காயத்ரியின் அப்பா அருள்தாஸால் காதலர்கள் இருவரும் இணையாமல் போவார்கள் என எதிர்பார்த்தால், ஆதவின் அப்பா கிஷோரால் இருவரும் பிரிகிறார்கள்! அது எப்படி? இதுதான் ‘பொன்மாலைப் பொழுது’ படத்தின் புதுமையான மெஸேஜுடன் கூடிய க்ளைமாக்ஸ்!

ஆதவ் கண்ணதாசன் அறிமுகம் என்று சொல்லமுடியாத அளவிற்கு அர்ஜுன் பாத்திரத்தில் அப்பா(வி) பிள்ளையாக அசத்தியிருக்கிறார். காதலி காயத்ரியுடன் நிஜமான நெருக்கம் கிறக்கம் காட்டி நடித்திருக்கிறார். ‘கண்ணதாசன் வீட்டு கட்டுத்தரையும் காதல் பாடும்தானே!’ என நிரூபித்திருக்கிறார். பேஷ், பேஷ்!

காயத்ரி, திவ்யாவாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘16 வயசு’ படங்களைக் காட்டிலும் அம்மணியின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி! கீப் இட் அப் காயூ!

ஆதவ்வின் அப்பாவாக கிஷோர். தன் சிறு பிராய காதலையும் ப்ளாஷ்பேக்கில் நினைத்தபடி, மகனையும் அவனது காதலையும் முள்ளின் மீது பட்ட சேலையாக கையாளும் விதத்தில் ‘ஹேட்ஸ் ஆப் கிஷோர்’ சொல்ல வைக்கிறது. பழைய இரும்பு வியாபாரியாகவும் புதிய நாயகி காயத்ரியின் அப்பாவாகவும் அருள்தாஸ் அலற வைக்கிறார். அவர் கட்டுக்கட்டாக மேரிமாதா சிலைக்கு அடியில் உள்ள லாக்கரில் சேர்க்கும் பணத்திற்குதான் படத்தில் ஒரு சரியான தீர்வு சொல்லாதது வருத்தம்! அனுபமா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட அம்மா கேரக்டர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

காதல் படங்களுக்கு பாடல்கள்தான் பலம்! இதில் சத்யாவின் இசையில் அவைகள் பலவீனம்! ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு உண்மையாகவே அவரை ஒளிவீரன் என ஒப்புக்கொள்ள வைக்கும் பலம்!

‘ஹரிதாஸ்’. ‘நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,’ உள்ளிட்ட மருத்துவம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு படங்களை தயாரித்த, வெளியிட்ட டாக்டர் வீ.ராமதாஸ் வாங்கி வெளியிட, ஏ.சி.துரை எழுதி இயக்கி இருக்கும் பொன்மாலைப் பொழுது - இசை, பாடல்கள் மாதிரி ஒரு சில குறைகள் இருந்தாலும் பள்ளி மாணவப்பருவ காதல் விழிப்புணர்வு ப(பா)டமாகும்!

மொத்தத்தில் ‘பொன்மாலைப்பொழுது’ - ‘புலர்ந்தும் புலராத காதல் பொழுது’


----------------------------------------------------------------நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் பிளஸ் டூ படிக்கும் ஸ்டூடண்ட்ஸ், ரொம்ப அப்பாவிங்க. ஒரு டைம், எதார்த்தமா ஹீரோவோட சைக்கிள்ல முன்னால (சைக்கிளோட) ஹேண்ட்பார்ல உக்காந்துட்டு ஹீரோயின் மெயின் ரோட்ல போறதை பொண்ணோட அப்பா பார்த்துட்டு அப்பவே ஸ்கூல வந்து க்ளாஸ் ரூம்ல எல்லாருக்கும் முன்னால செருப்பாலயே 17 தடவை ஹீரோவை அடிச்சுடறாரு.18 வது தடவை அடிக்க ஓங்கும்போது ஹெச்.எம் வந்து தடுத்துடறாரு.

இந்த சம்பவத்தால அதுவரை எதார்த்தமா பழகிட்டு இருந்த 2 பேரும் பதார்த்தமா பழக் ஆரம்பிச்சுடறாங்க. ஹீரோவோட அப்பாவுக்கு  என்ன ஒரு ஷாக்னா தான் டீன் ஏஜ்ல என்னென்ன பண்ணினோமோ அதே மாதிரி தன் பையனும் பண்ணிட்டு இருக்கானே அப்டின்னு, அவருக்கும் ஒரு டீன் ஏஜ் லவ் உண்டு. தன் அப்பா தன்னை கண்டிச்சு ஹிட்லர் மாதிரி வளர்த்த மாதிரி தானும்  தன்  பையனை வளர்த்தக்கூடாதுன்னு தோள் மேல கை போட்டு நட்பா பழகறாரு. ஹீரோ, ஹீரோயின் லவ் பண்றாங்க. ஹீரோயின்  வீட்டு மொட்டை மாடிக்கே போய் மீட் பண்றாரு எப்படி இந்தக்காதலர்கள் ஒண்ணு சேர்ந்தாங்களா? பிளஸ் டூ பாஸ் பண்ணாங்களா? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

ஹீரோ, கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ். கண்ணே, கனியமுதே ரகுமான் மாதிரி முகச்சாயல், நடிப்பு சுமாரா வருது, காதல் நல்லாவே வருது. முதல் படம் என்ற வகையில் ஓகே.

ஹீரோயின் காயத்ரி. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் நாயகி. பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணாமலே இயற்கையாவே அழகிய புருவம். லிப்ஸ்டிக்கில் நம்பிக்கை இல்லாமல் இயற்கை அழகில் நம்பிக்கை வைத்த உதட்டழகி. கண்ணியமான நடிப்பில், உடை அமைப்பில் மட்டும் கவனமாக இல்லாமல் கோடம்பாக்கத்தின் தாராளமயமாக்கல் கொள்கைப்படி ஆங்காங்கே மின்னலாய் வந்து போகும்  சில கிளாமர்.

ஹீரோவின் அப்பாவாக வரும் கிஷோர், கண்ணியம் காக்கும் பொறுப்பான அப்பாவாக அழகான நடிப்பு. இவரது கம்பீரம்தான் இவருக்கு பிளஸ். கிஷோரின் மனைவியாக வரும் ஆண்ட்டியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. இருவரும் ரொமாண்டிக்காக வீட்டில் கொஞ்சிக்கொள்ளும் காட்சிகள் அழகு.

ஹீரோயின் அப்பாவாக வரும் அருள், செம வில்லன்.  ஆக்ரோஷமான நடிப்பு.


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. படத்துக்கான  போஸ்டர் டிசைன்கள், ஸ்டில்கள் எல்லாம் அழகு, ஒரு நல்ல காதல் கதைக்குத்தேவையான எல்லாமே  இருக்கு. பார்ப்பவர்களை தியேட்டருக்கு இழுத்து  வரும் வசீகரம் உண்டு, வெல்டன்!

2. படத்தின் முக்கியமான பிளஸ் நாயகி காயத்ரி, கிஷோர் இருவரும் தான். கச்சிதமான பங்களிப்பு.

3. தாமரை, மதன் கார்க்கி  இருவரின் பாடல் வரிகள் அழகு. குறிப்பாக  அடிக்கடி  முடி கலைத்திட அனுமதித்தாய் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பாடல் வரிகள் மனம்  கவர்ந்தது. வாரக்கடைசியில் வந்தாய் வா தோழா, ஃபேஸ்புக்கில் ஹச்சுன்னு தும்மினா 1000  லைக்ஸ்,  இரவுகளில் முதல் முறை என 4 பாடல்கள் கேட்கும் தரத்தில் இருக்கு. இசை-சத்யா. ஓக்கே ரகம்.

4. படத்தில் வரும் பெண் கேரக்டர்கள் எல்லாருமே மிக கண்ணியமாக உடை உடுத்தி வந்தது பெண்கள் ஆடியன்சை வசீகரிக்கும். ஆண்களை வசீகரிக்கவும் காட்சிகள் உண்டு

5. வழக்கமான சாதா காதல் கதையில் கிஷோர் கேரக்டர், க்ளைமாக்ஸ் மெசேஜ் பிளஸ்.

6. ஹீரோவின் நண்பனின் அப்பாவாக வரும் தினந்தோறும் இயக்குநர் நாகராஜ் கலகலப்பான காமெடி போர்ஷன்.


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்கில் ஹீரோ ஆதவ்வா, அவர் நண்பனா என குழப்பம் ஏற்படும் வகையில் எதுக்கு தேவையில்லாம அந்த நண்பன் கேரக்டருக்கு அதீத முக்கியத்துவம் தேவையே இல்லை. முதல் 20 நிமிட காட்சியில் ஹீரோ அறிமுகம் தெளிவாக இருக்க வேணாமா? அதுவும் ஹீரோ ஒரு  புதுமுகம், அவர் முகத்தை ஆடியன்ஸ் மனதில் தங்க வைக்க வேணாமா?

2. ஹாலில் நியூஸ் பேப்பர் இருக்கும் டீப்பாய் மேல் கால் வைத்து, அப்பாவின் முன்னிலையிலேயே ஹீரோ ஷூ போடும் காட்சி உறுத்துது. கண்டிப்பான அப்பா அதை கண்டிக்க மாட்டாரா?

3. ஹீரோ தன் வீட்டிலேயே ஃபோன் இருந்தும் ஏன் பி.பி.நெம்பர் தர்றார்? இந்தக்காலத்துல பொண்ணுங்களே வீட்டுக்கு பயப்படுவதில்லை. அப்பா கண்டிப்பானவர் இல்லை, அம்மா செம செல்லம், பின் ஏன் ஹீரோ பம்மனும் ?

4. ஹீரோயின் வீட்டு லேண்ட் லைன் நெம்பர் என்ன? என கேட்டு செல்போனில் ஹீரோவின் அப்பா கால் பண்றார். அப்போ எஸ்.டி.டி கோடு சேர்க்காமல் ஃபோன் நெம்பர் மட்டும் டயல் பண்றாரே? எப்படி?

5. இருமல் வந்தா வழக்கமா டானிக் தான் முதல் கட்டமா டாக்டரை கேட்காம குடுப்பாங்க. கிஷோர்  தன் பையனுக்கு ஏதோ ஒரு மாத்திரையை தர்றாரே?  அது எப்படி? டாக்டரை கன்சல்ட் பண்ணாம இவரா ஒரு டேப்லெட்டை தர்றாரே?

6. ஹீரோயின், ஹீரோ  2 பேர் கிட்டேயும் செல் ஃபோன் வந்த  பின்னால ஹீரோயின் அவசரமா  ஊருக்குப்போக வேண்டி வருது . 2 நாள் கழிச்சுத்தான் வர்றா. சொல்லாம போய்ட்டாளே என ஹீரோவுக்கு  கோபம். ஊடலில் ஏன் இப்படி சொல்லாம போய்ட்டே என்று கேட்டதும், ஹீரோயின் அர்ஜென்ட் ஒர்க் என்கிறார். ஓக்கே ஒரு எஸ்எம்எஸ் கூட பண்ண மாட்டாரா?  அதை ஏன் ஹீரோ கேட்கலை ?

7. மும்பை பாய் ஃபிரண்ட்டோட வரும் தோழி நண்பனிடம் எனக்கு ஒரு ரூம் அரேஞ்ச் பண்ணிக்குடுடா என கேட்பது  செம காமெடி. மும்பைல இருந்து வர்றவன் ஹோட்டல்ல ரூம் எடுக்கக்கூட தெரியாதவனாவா இருப்பான். அதுவுமில்லாமல் இந்தக்கால பொண்னுங்க இப்படித்தான் தம்பட்டம் அடிப்பாங்களா? ஏய், எல்லாரும், பார்த்துக்குங்க நான் என் பாய் ஃபிரண்ட்டோட ரூமுக்கு போறேன், ரூமுக்கு போறேன் என ரோட்டில் கத்தாதுதான் பாக்கி. என்ன தான் காமெடி சீன் என்றாலும் குறைந்த பட்ச லாஜிக்காவது வேண்டாமா?


மனம் கவர்ந்த வசனங்கள்

1. ஏங்க. நம்ம பையன் இப்பவெல்லாம் வீட்ல பால் குடிக்கறதே இல்லைங்க. பீர் குடிக்கறவன் எல்லாம் பால் குடிக்க மாட்டாண்டி.


2. சந்தர்ப்பம் கிடைச்சாலும் பழைய காதலியை இப்போ பார்க்கக்கூடாது. நரைமுடி, சுருக்க முகம், கொடுமை. 16 வயசு நினைவுகள் அப்டியே இருக்கணும்


3. அம்மா, அந்தாள் கிட்டே 100 ரூபா வாங்கிக்குடும்மா. டேய், அப்பான்னு சொன்னா குறைஞ்சுடுவியா?


4. வாடா வீட்டுக்கு, காப்பி சாப்ட்டுட்டு போலாம். உங்கப்பா எங்களைக்கழுவிக்கழுவி ஊத்துவாரு, அதை நாங்க குடிக்கணுமா?


5. அப்போ எங்கப்பா என்னை அடிச்சது , இப்போ என் பையன்க்கு 18 வயசு ஆனப்ப எனக்கு வலிக்குது.


6. பொண்ணு இருந்துட்டா போதும், ஆளாளுக்கு அங்க்கிள்னு கூப்பிட்டு வந்துடுவானுங்க.


7. புள்ளைங்க கிட்டே கொஞ்சம் சிரிச்சுப்பேசுனாத் தான் என்னவாம்? 30 பவுன் நகை போடறதா சொன்ன உங்கப்பா 27 பவுன் தான் போட்டாரு, மீதி 3 பவுனை வாங்கிட்டு வா முதல்ல, எல்லார் கிட்டேயும் சிரிச்சு பேசறேன்.

8. எதுக்குப்பா எனக்கு இவ்ளோவ் பணம்? உனக்கு சின்ன சின்ன தேவைகள் இருக்கும். எல்லாத்துக்கும் என்கிட்டே கேட்டுட்டு இருக்க முடியுமா?


9. ம்க்கும், எல்.கே.ஜி., பையன் கூட இப்போ ஏ.டி.எம்., கார்டோடதான் வெளியிலேயே வர்றான்.


10. அவன் வீட்டில்யே அவனை திருடன் ஆக்கிடக்கூடாது

11. இந்தக்காலத்துப்பசங்க கிட்டே வாயே குடுக்க முடியறதில்லை. சரி ஏன் குடுக்கறே?


12. உலகத்துல யாருமே பண்ணாத தப்பை நீ பண்ணலை. நான் சின்ன வயசுல பண்ணுனதை நீ இப்போ பண்றே.


13. இந்த வயசுல எங்கப்பா எனக்கு அட்வைஸ் பண்ணுனப்போ எனக்கு பிடிக்கலை, அதே அட்வைஸ் என் பையனுக்கு மட்டும் எப்படிப்பிடிக்கும்னு எதிர்பார்க்க முடியும்?


சி.பி.கமெண்ட்: சாதா காதல் கதை - காயத்ரி, கிஷோர் + திரைக்கதை - பி, சி சென்ட்டர்களில் சுமாரா போகும், முதலீட்டுக்கு மோசம் வைக்காது, போட்ட காசை எடுத்துடுவாங்க.வாசகர் கருத்து (1)

tamilmagan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25 செப், 2013 - 11:37 Report Abuse
tamilmagan என் அப்பாவை மறுபடி பார்த்த ஒரு உணர்வு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in