Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

தூங்காநகரம்

தூங்காநகரம்,thoonga nagaram
17 பிப், 2011 - 22:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தூங்காநகரம்

 

தினமலர் விமர்சனம்

நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்... என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் சொல்லியிருக்கும் படம்தான் தூங்கா நகரம்!

திண்டுக்கல், விருதுநகர் என ஆளுக்கொரு ஊரில் இருந்து கிளம்பி வந்து மதுரையில் தங்கி ஆளாளுக்கொரு பிழைப்பை பார்த்து வருபவர்கள் களவாணி விமல், நாடோடிகள் பரணி, ரேணிகுண்டா நிஷாந்த் மற்றும் தூங்கா நகரம் படத்தின் அறிமுக இயக்குனர் கவுரவ் நால்வரும். இவர்கள் நான்கு பேரும் குடிக்க வந்த இடத்தில் ஒரு ஓசி குடிகாரனை உதைப்பதற்காக ஒயின்ஷாப்பில் நண்பர்களான நல்லவர்கள்!

அதே ஒயின்ஷாப்பில் அடுத்தடுத்த நாட்களில் ஒரு பெரியவரின் பிரச்னையை கேட்டு அடிதடியின் இறங்கும் நால்வரும், தாங்கள் கை வைத்த இடம் பெரிய இடம் என தெரிந்ததும், பிய்த்துக் கொண்டு ஓடுகின்றனர். விதி வலியது அல்லவா? விடாமல் துரத்துகிறது! வென்றது இந்த நால்வருமா? பெரிய மனிதரா? என்பதை தூங்கா நகரம் படத்தின் மீதிக்கதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விளக்குகிறது. அதனூடே விமல் - அஞ்சலியின் சின்ன வயது ப்ளாஷ்பேக் நட்பு - பெரிய வயது காதல், பரணியின் பிள்ளைதாச்சி மனைவி மற்றும் குடும்பம், ஊமை நிஷாந்தின் உழைப்பால் ஊரில் படிக்கும் தம்பிகள், மின் மயானத்தில் பிணம் எரிக்கும் கவுரவின் செத்துப்போன மனசு, ஊர் பெரிய மனிதரின் வாரிசு செய்யும் ஜவுளிக்கடை டிரஸ்ஸிங் ரூம் செக்ஸ் டார்ச்சர்கள், அவரது அப்பா பண்ணும் கொடூர கொலைகள் என சகலத்தையும் ஜனரஞ்சகமாக கலந்து கட்டி தூங்கா நகரத்தை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆக‌ வேண்டும்.

வீடியோகிராபர் கண்ணனாக விழா வேத்திகள் ஆர்டர் பிடிக்க விமலும், அவரது அசிஸ்டெண்டும் பண்ணும் அலப்பறைகள் ஒரு பக்கம் காமெடி என்றால், விமல் - அஞ்சலியின் சின்ன வயது நட்பு ப்ளாஷ்பேக்கும், காதலும் கலக்கல் வெடி. விமல் வீடியோகிராபர் கண்ணனாகவே வாழந்திருக்கிறார். பரணி, நிஷாந்த், இயக்குனர் கவுரவ் உள்ளிட்டவர்களும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களாகவே பளிச்சிட்டிருக்கின்றனர்.

தெரு த்ரிஷாவாக கேபிள் டிவி தொகுப்பாளினியாக பந்தா பண்ணும் அஞ்சலியும், கொலைக்களமாக தெரியும் தூங்கா நகரத்தை கலைக்களமாக்க ரொம்பவே மெனக்கெட்டு ரசிகர்களை காதல் வயப்படுத்துகிறார். பேஷ்! பேஷ்...!!.

வில்லன் பெரிய தப்பட்டையாக கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரமும், அவரது தம்பியாக பு‌ரொடக்ஷன் மேனேஜர் கே.பாலகிருஷ்ணனும், மதுரையை மட்டுமல்ல... மதுரை மேல் ரசிகர்களுக்கு இருக்கும் மரியாதையை மேலும் மிளர வைக்கின்றனர். சிங்கம்புலி - பாண்டு உள்ளிட்டவர்களின் காமெடி ஆறுதல்!

சுந்தர் சி. பாபுவின் இசையில் மதுரையின் புகழ்பாடும் பாடல்களும் சரி, மற்ற பாடல்களும் சரி.. தாளம் போட வைக்கின்றன. அதேமாதிரி கே.விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் மதுரைக்கும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் போய் வந்த திருப்தி தரும் பிரமாண்டம்.

மொத்தத்தில் புதியவர் கவுரவ்வின் எழுத்திலும், இயக்கத்திலும் தூங்கா நகரம் ரசிகர்களை தூங்காமல் வைத்திருக்கும் அளவு வித்தைகள் நிறைந்த துள்ளல் நகரம்!.





----------------------------------------



குமுதம் சினிமா விமர்சனம்




மதுரை ஹேங் ஓவரில் எடுக்கப்பட்ட இன்னொரு படமோ என்ற யோசனையோடு தியேட்டருக்குள் போனால்... அட, படம் முழுக்க சின்னதாய், சுவாரஸ்யமாய் நிறைய ஆச்சரியங்கள்.

"தளபதி ரேஞ்சுக்கு கைகோர்த்துத் திரிகிற நாலு பாசக்காரப் பயல்களின் வாழ்க்கையில் ஒரு திடீர் பிரச்னை- அம்ரீஷ்பூரி மாதிரி வந்து பயம் காட்டும்போது என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை.

விமலிடம் கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் பொறுப்பு என இயல்பான நடிப்பு . உள்ளூர் டி.வி.சேனல் தொகுப்பாளினியாக வரும் அஞ்சலி ஏமாறவில்லை. விபத்துக்குள்ளான நண்பனுக்கத் தன்னால் ரத்தம் கொடுக்க முடியாதபோது, விமல் அஞ்சலியை இழுத்து வருவது ரொமான்ஸை எல்லாம் தாண்டி மனதில் நிற்கிறது. வாய்பேச இயலாதவராக வருகிற நிஷாந்த், கர்ப்பிணி மனைவிக்காக எப்போதும் உருகுகிற பரணி, மின் மயான ஊழியராக வருகிற இயக்குநர் கௌரவ் ஆகிய மற்ற நண்பர்களும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள். நண்பர்களில் ஒருவரையே விமலுக்கு எதிராகக் காட்டிவிட்டு, அப்புறம் ஒவ்வொன்றாக அவிழும் சஸ்பென்ஸ் முடிச்சுகள் பளிச்.

விமல் கூடவே வருகிற அந்த அசிஸ்டெண்ட் பைன் "லைவ் ஆன காமெடியைத் தந்திருக்கிறான். கொலைக்குக் கொஞ்சமும் அஞ்சாத வில்லன் கேரக்டருக்கு பிரபல தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் சில இடங்களில் ப்ளஸ். "கல்யாணம் கல்யாணம் ரீமிக்ஸ் பாடலில் இசையமைப்பாளர் சுந்தர்.சி. பாபுவை விட, ஒரிஜினலுக்குச் சொந்தக்காரரான சந்திரபாபுவே தெரிகிறார். தீப்பெட்டியில் குச்சி உரசுவதை எல்லாம் டைட் க்ளோஸப்பில் காட்டுவது கேமரா பூச்சாண்டி. மற்றபடி... கூட்டமும் கொண்டாட்டமும் கும்மியடிக்கிற மதுரை வாழ்க்கையை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன்.

நினைத்த நேரத்தில் எதிரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முடிகிற வில்லன், விமலைப் போட்டுத்தள்ள ஏன் இவ்வளவு சிரமப்படணும்? "பார் புகழும் காட்சிகள் படத்தில் எத்தனை என தனி போட்டியே வைக்கலாம். ஆரம்பத்தில் போதையில் தள்ளாடும் நண்பர்கள் மிக தாமதமாகத்தான் சீரியஸ் டிராக்குக்கு மாறுகிறார்கள்.

சினிமாத்தனமான கதையில் யதார்த்தமான கேரக்டர்களையும் சம்பவங்களையும் சாதுர்யமாக கலந்து கவனத்தை ஈர்த்துவிடுகிறார் அறிமுக இயக்குநர் கௌரவ்.

தூங்காநகரம் - சுறுசுறுப்பு...!

குமுதம் ரேட்டிங் -(ஓகே)



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in