தினமலர் விமர்சனம்
நான்கு பாட்டு, நான்கு ஃபைட்டு, ஹீரோயின் மட்டுமல்லாது அவரது அக்கா, தங்கைகள், அம்மா, அம்மம்மாக்கள், தோழிகள் உள்ளிட்ட படத்தில் இடம் பெறும் பேபி கேரக்டரில் தொடங்கி பேரன் பேத்தி எடுத்த பாட்டி கேரக்டர்கள் வரை சகல பெண்பால் பாத்திரங்களும் அழகாக இருக்க வேண்டும் எனும் விதிமுறையில் வரைமுறை இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை சற்றே, இல்லை., இல்லை.. சடாரென திரும்பி பார்க்க வைத்திருக்கும் உக்ரமான படம் தான் தா.
கதைப்படி கோவை பக்கத்து கிராமத்து இளைஞர் ஸ்ரீஹரி, பத்தாம் கிளாஸோடு படிப்பை நிறுத்திவிட்டு இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அவருக்கு, தன் நண்பர்கள் மாதிரி காதலியோ, காதலோ இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. இத்தருணத்தில் ஸ்ரீஹரிக்கு அவரது குடும்பம் தூரத்து உறவில் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்து முடிக்க அப்பெண்ணின் கல்லூரி படிப்பு முடியும் வரை கல்யாணத்தை தள்ளி வைத்து காத்திருக்கிறது இரண்டு குடும்பமும். அதுவரை காதலித்து பழகாத ஸ்ரீஹரி கட்டிக்கப்போகும் பெண்ணையே கல்யாணம் வரை காதலிக்கலாம் என களத்தில் இறங்குகிறார்.
ஆரம்பத்தில் இரும்பு தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஸ்ரீஹரியின் அழுக்கு உடம்பையும், முரட்டுக்குணத்தையும் கண்டு பயந்து விலகும் நாயகி நிஷா, அவரது உஜாலா ஒயிட் மனதை புரிந்து கொண்டதும் குஜாலாகி காதலிக்க தொடங்குகிறார். இந்த நேரத்தில் தனது படிப்பும் அழுக்கான தொழிலும் நிஷாவுக்கு நிகராக இல்லையே எனும் வருத்தத்தில் ஸ்ரீஹரிக்கு தாழ்வுமனப்பான்மையும் அதைத்தொடர்ந்து நிஷா மீது சந்தேகமும் வருகிறது. அந்த சந்தேகத்தின் விளைவு நிஷாவுடன் படிக்கும் மாணவனில் தொடங்கி, அவரது தாய்மாமன், தனது நண்பன் என சகலரையும் தாக்க தொடங்குகிறார். அதன் விளைவு ஸ்ரீஹரி-நிஷா திருமணம் நின்றுபோகிறது. நின்றுபோன அந்த திருமணம் நடந்ததா? இல்லையா..? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி யாரும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸை வைத்து ரசிகர்களை உறுக்கி எடுத்துவிடுவதன் தா படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றது.
அழுக்கு உடம்பு, முரட்டு சுபாவம் எனும் பாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தி நடித்திருக்கிறார் புதுமுகம் ஸ்ரீஹரி. பெண் பார்க்கும் படலத்தில் கூட அடர்ந்த தாடியும், மீசையுமாக திரியும் அளவிற்கு வித்தியாசமான மனிதராக வித்தியாசமாகவே நடித்திருக்கும் ஸ்ரீஹரி., அந்தப்பெண் தன்னை விரும்புகிறாள் எனத் தெரிந்ததும் மேக்கப்பிற்கும், தலைசீவலுக்கும் தரும் முக்கியத்துவம் செம காமெடி. முதல் படத்திலே முத்திரை பதித்திருக்கிறார் மனிதர் பேஷ்! பேஷ்!
கதாநாயகி நிஷாவும் புதுமுகம் தான். கல்லூரி மாணவியாகவும், ஸ்ரீஹரியின் காதலியாகவும் நன்றாகவே நடித்திருந்தாளும் தமிழுக்கு ஒத்துவராத இந்திமுகம் நிஷாவினுடையது என்பது மைனஸ்.
ஸ்ரீஹரி, நிஷா மாதிரியே கமல் கெட்-அப்பில் திரியும் கோவிந்தன் கருவாச்சி காதலியிடம் அடிக்கடி அவமானப்படும் சண்முகம், ஸ்டூடியோ வைத்துக்கொண்டு பெண்களை மயக்கிதிரியும் பெனிட்டோ, குடிக்க அலையும் மதன் என நண்பர்கள் கேரக்டரில் தொடங்கி தாய், தந்தை. தாய்மாமன் கேரக்டர் வரை சகலரும் சம்பந்தப்பட்ட பாத்திரமாகவே பளிச்சிட்டிருக்கிறார்கள். பலே! பலே! அதிலும் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாளும்... என கோவிந்தனின் அந்த கருவாச்சி காதலி ஆரம்பிக்கும் போதெல்லாம் தியேட்டரே ஆராவாரத்தில் அதிர்கிறது.
அதேபோன்று தனியாக காமெடி நடிகர்களை வைத்துக் கொண்டு காமெடி டிராக் எனும் பெயரில் கடித்து குதறும் இயக்குனர்களுக்கு மத்தியில் உடல் ஊருக்கு, உயிர் பாருக்கு... உள்ளிட்ட ஒருசில வரி காமெடிகளாலும் கருவாச்சி காதலி கேரக்டராலும் தா படத்தை தனித்துவப்படுத்தி இருக்கும் அறிமுக இயக்குனர் ஆர்.கே.சூர்ய பிரபாகருக்கு தமிழ் சினிமாவில் சரியான எதிர்காலம் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்!
வி.எஸ். தேவராஜின் ஒளிப்பதிவும், புதிய இசையமைப்பாளர் ஸ்ரீவிஜய்யின் யதார்த்தமான இசையும், ஆர்.கே.சூர்ய பிரபாகரின் இயக்கத்தில் தா படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இரண்டறக் கலந்து காட்டி இப்படத்தின் வித்தியாசத்திற்கு விறுவிறுப்புக்கும் மேலும் விலு சேர்கின்றன என்றால் மிகையல்ல!
வெட்டுகுத்து, குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் அழகான பெண்கள் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுற்றி வரும் தமிழ் சினிமாவை வெளியே வா என கையை பிடித்து அழைத்து வந்திருக்கிறது தா. மொத்தத்தில் தரமான தமிழ்படமான தாவுக்கு வெற்றியை தா என கடவுளை கேட்போம்!