தினமலர் விமர்சனம்
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் மந்திரப்புன்னகை. அவரே இயக்கவும் செய்திருக்கும் இப்படத்தில் தமிழ்சினிமா பேசத்தயங்குகிற விஷயங்களை உரத்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மற்ற தமிழ்படங்களில் இருந்து சற்றே மாறுதலான படம் இது என்பது ஆறுதல்.
கதைப்படி, கைநிறைய சம்பளம், குடி, நடத்தி என ஊரே வியக்கும் உல்லாச வாழ்க்கை வாழும் கட்டிடகலை நிபுணர் ஹீரோ கரு.பழனியப்பன். எந்த ஒரு விஷயத்தையும் வித்தியசாமாக அணுகும் ஹீரோ பழனியப்பனை முதல் பார்வையிலேயே பிடித்துபோகிறது நடிகை மீனாட்சிக்கு! அதேமாதிரி ஆண் நண்பர்களுக்கு பீர் பாட்டிலை பல்லாலேயே திறந்து பார்ட்டி தரும் ஹீரோயின் மீனாட்சியையும் முதல் பார்வையிலேயே பிடித்து போகிறது நாயகர் கரு.பழனியப்பனுக்கு! அப்புறம், அப்புறமென்ன யதேச்சையாக இப்படி பார்த்து கொள்ளும் இவர்கள், தொழில்நிமித்தமாகவும் சந்திக்க அதனால் ஏற்படும் நட்பு காதலாகிறது. அந்த காதல் பூத்து, காய்த்து, கனியாகும் தருவாயில், கரு.பழனியப்பனுக்கு மீனாட்சி மீது சந்தேகம். அந்த சந்தேகம் வலுத்து நாயகர் நாயகியை கொலை செய்யவும் துணிகிறார். நாயகர் காதலியை கொன்றாரா? நாயகி காதலில் வென்றாரா..? என்பதை வித்யாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார்கள் மீதிக்கதையில்!
கதையி்ன் நாயகராக கரு.பழனியப்பன் சரியாகவே பொருந்துகிறார். சோடாபுட்டி கண்ணாடி, அடர்ந்ததாடி, அடிக்கடி, மது, மாது என தமிழ்சினிமா கதாநாயகர்களின் இலக்கணங்களை மாறியிருந்தாலும் தலைக்கணம் இல்லாமல் நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். இந்த டைரக்டர் கம் ஹீரோ! பேஷ், பேஷ்!
சொகுசுகார் சேல்ஸ் கேர்ளாக மீனாட்சி நடிப்பில் நன்கு தேறி இருக்கிறார். ஆனால் உடம்பை ஸ்லிம் ஆக்குகிறேன் பேர்வழி என ஏதோ இரத்த சோகை நோயாளி மாதிரி சில சீன்களில் பரிதாபமாக காட்சி அளிக்கறார் பாவம்.
ஹீரோவின் நண்பர்களாக சந்தானமும், தம்பி ராமையாவும் அடிக்கும் இரட்டை அர்த்த கூத்துகள் சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. ஹீரோவின் அப்பா நகுலன் பொன்னுசாமி, விலைமாது மகேஸ்வரி, ரிஷி, ரம்யா, மனோஜ் கிருஷ்ணா, மாஸ்டர் தருண் என அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!
காண்டம்(ஆணுறை) வாங்க தயங்குவதில் தொடங்கி கள்ள தொடர்புகளால் ஏற்படும் பாதிப்புகள் வரை சகலத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன், அம்மா சென்டிமென்ட்டுகளுக்கு தரும் விளக்கம் மட்டும் சற்றே ஓவர் எனத் தோன்றுகிறது. இதுமாதிரி சில இடங்களில் இயக்குநர் அடக்கி வாசித்திருந்தால் மந்திர புன்னகையை காண தாய்குலங்களின் வரவும் இன்னும் சற்றே கூடுதலாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இயக்குநருக்கு ரொம்பதான் துணிச்சல்!
வித்யாசாகரின் இசையில் அறிவுமதி, யுகபாரதி இருவரது பாடல் வரிகளும், ராமநாத் ஷெட்டியின் ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் படத்தொகுப்பும் படத்திற்கு பெரும்பலம். சந்தேகப்பேர்வழிகளும், மனநோயாளிகளும், உருவாகும் விதத்தை அலசி ஆராய்ந்துள்ள மந்திரப்புன்னகை, மந்தகாசப்புன்னகை.
---------------------------
குமுதம் விமர்சனம்
குடிகாரன். பெண்பித்தன். தனிமை விரும்பி. இப்படி சரமாரியாக முத்திரை குத்தப்படும் ஒருவனின் மர்மச் சிரிப்புதான் மந்திரப்புன்னகை
எந்த நேரம் எந்த மூடில் இருப்பானோ என சுற்றியுள்ளவர்களை யோசிக்க வைக்கிற ஆர்க்கிடெக்ட் கதிர் கேரக்டர் கரு.பழனியப்பனுக்குக் கனகச்சிதம்.
கதிரின் காதலுக்கும் மோதலுக்கும் சிரித்துக் கொண்டே ஈடுகொடுக்கிற நந்தினியாய் மீனாட்சி. அழகும் கவர்ச்சியும் கலந்த காக்டெயிலாய் வசீகரிக்கிறார். பாரில் பீர் பாட்டில் மூடியை பல்லால் மீனாட்சி கடித்துத் திறந்ததையும் மெடிக்கல் ஷாப்பில் ஆணுறையை பழனியப்பன் கூச்சப்படாமல் உரக்கக் கேட்டு வாங்குவதையும் ஒருவருக்கொருவர் சொல்லி அறிமுகமாவது இளமை துள்ளும் சுவாரஸ்யம்.
காதல் மோதலாகி, பழனியப்பன் மீனாட்சியை அடித்துக் கொன்றுவிட, இறுதியில் நடக்கிற தலைகீழ் திருப்பத்தில் சஸ்பென்ஸை விட, சைக்காலஜியின் துணையுடன் இயக்குநர் துõக்கிப் போடும் சீட்டு நம்மை அசர வைக்கிறது.
கரு.பழனியப்பனுக்குப் பின்னாலேயே சின்ன இன்ஜினீயராக வலம் வரும் சந்தானம், பழனியப்பனின் பேச்சிலர் வாழ்க்கைக்கு கம்பெனி கொடுக்கும் தம்பி ராமையா ஆகியோர் கலகலப்புக்கு முட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசாகர், அறிவுமதி கூட்டணியில் டைட்டில் சாங் காதுக்கு விருந்து. நிஜம் பேசும் ஸ்கிரிப்ட்டுக்கு ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு நம்பத்தகுந்த வழித்துணை.
சினிமாவில் இதுவரை போற்றிப்பாடப்பட்டு வந்த அம்மா சென்ட்டிமெண்ட்டை இயக்குநராகத் திருப்பிப் பிடித்திருக்கிறார் பழனியப்பன். துணிச்சலான முயற்சி. ஆனால் பழனியப்பனின் பிரச்னை தெரிந்த பிறகு ஆம்புலன்ஸ் வேகமெடுக்க வேண்டிய திரைக்கதை தள்ளிவிட ஆள் இல்லாத ஸ்ட்ரெட்ச்சராகத் தடுமாறுகிறது. இன்னும் யோசித்திருந்தால் மந்திரப்புன்னகை மிரட்டியிருக்கும்.