தினமலர் விமர்சனம் » ஆண்மை தவறேல்
தினமலர் விமர்சனம்
சர்வதேச அளவில் நடைபெறும் பெண் கடத்தல்களுக்கும், விபச்சாரத்திற்கும், பல ஆண்கள் ஆண்மை தவறுவது தான் காரணம் எனும் கருத்தை கருத்தாழ மிக்க காட்சிகள் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கும் படம் தான் "ஆண்மை தவறேல்".
புதுமுக கதாநாயகர் த்ருவாவின் காதலியும், நாயகியுமான ஸ்ருதி கடத்தப்படுவதில் தொடங்கி, ஒவ்வொரு காட்சியிலும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக பெப் ஏற்றி க்ளைமாக்ஸில் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடும் இயக்குநர் டி.குழந்தைவேலப்பன் விஷயாதி தான்!
அதேமாதிரி நாயகர் த்ருவா, ஆறடி உயரம், அசரடிக்கும் நிறம் என்பதால் அவரை எடுத்த எடுப்பிலேயே ஆக்ஷனில் இறக்கி, அதிரடியாய் நாயகியை காப்பாற்று என களத்தில் இறக்கி நம் காதில் பூ சுற்றாமல், கதையிலும், காட்சிகளிலும் ரியல் ஆக்ஷனை காட்டி இருப்பதிலும் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.கதாநாயகராக, காதலராக புதுமுகம் த்ருவா அறிமுகம் எனும் அளவில் இல்லாமல் அதற்கு மேலும் நடித்து ரசிகர்களை கவர்கிறார். கதாநாயகி ஸ்ருதி, கடத்தல் காட்சிகளில் மிரள்வதே கவர்ச்சியாக இருப்பது படத்தின் பலம்.
த்ருவாவுக்கு உதவும் சம்பத் சாவதும், பின் பிழைத்து வருவதும் போன்ற காட்சிகள் நம்பமுடியாத பலவீனம். சுப்பு பஞ்சு, தரன், நந்தா சரவணன், சித்ராலட்சுமணன், லட்சுமி ராமகிருஷ்ணன், உமாபத்மநாபன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதில் மகள் காணாமல் போனதும் கடத்தப்பட்டதும் லட்சுமி ராமகிருஷ்ணனின் வசன உச்சரிப்புகள் மட்டும் நான்சிங் எரிச்சல்... என்பது கொடுமை!
மரியாமனோகரின் இசை, பெண் கடத்தல் காட்சிகளில் பயமுறுத்துவதும், அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு அதனுடன் சேர்ந்து கொண்டு மேலும் உயிரோட்டமாய் மிரட்டுவதும், பெண் குழந்தைகளையும், வயது பெண்களையும் பெற்றவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது. இதுதான் "ஆண்மை தவறேல்" படத்தின் பெரிய ப்ளஸ்! இது, போய்க் கொண்டே இருக்கும் சேஸிங் காட்சிகள் கிளப்பி விடும் மைனஸ் பாயிண்டுகளையும், சரிகட்டி "ஆண்மை தவறேல்" படத்தை தூக்கி நிறுத்துகிறதென்றால் மிகையல்ல!
மொத்தத்தில் "ஆண்மை தவறேல்", "அழகு தவறேல்" "அம்சம் தவறேல்!"