போகுமிடம் வெகு தூரமில்லை,Pogumidam vegu thooramillai

போகுமிடம் வெகு தூரமில்லை - சினி விழா ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஷார்க் பிக்சர்ஸ்
இயக்கம் - மைக்கேல் கே ராஜா
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - விமல், கருணாஸ்
வெளியான தேதி - 23 ஆகஸ்ட் 2024
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
மனித நேயம் மிக்க கதைகளுடன் கூடிய சில படங்கள் அவ்வப்போது வருவது ஆறுதலான ஒரு விஷயம். இந்தப் படத்தின் இயக்குனரும் அப்படியான ஒரு கதையைக் கொடுத்திருக்கிறார். 'அயோத்தி' படம் போன்று ரசிகர்களைக் கவரலாம் என முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்னையில் 'மார்ச்சுவரி' வேன் ஓட்டுபவர் விமல். நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்காக தனியார் மருத்துமனையில் சேர்த்துள்ளவர். அதற்குத் தேவையாண பணத்திற்காக, ஒரு 'பிணத்தை' ஏற்றிக் கொண்டு தன்னுடைய வேனில் திருநெல்வேலி செல்கிறார். வழியில் லிப்ட் கேட்டு ஏறிக் கொள்கிறார் கருணாஸ். விமல் வேனில் பிணமாக இருப்பவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகனான ஆடுகளம் நரேன் தன் உரிமையை விட்டுத்த ராமல் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் நினைக்கிறார்.

ஆனால், அவருக்கு அந்த உரிமையைக் கொடுக்கக் கூடாது என வேறு ஒரு ஊரில் இருக்கும் இரண்டாவது மனைவியின் மகன் பவன் துடிக்கிறார். கடைசி காலத்தில் அப்பாவைப் பார்த்துக் கொண்டவர் பவன். சென்னையில் புறப்பட்ட விமல் வழியில் 'காதல் ஜோடி' ஒன்றிற்கும் லிப்ட் தருகிறார். ஒரு இடத்தில் சற்றே இளைப்பாறும் போது வேனில் இருந்த பிணம் காணாமல் போகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சென்னைத் தமிழ் பேசும் வேன் டிரைவராக விமல். மதுரைத் தமிழ் பேசியே பல படங்களில் நடித்தவர், அவருக்கு வராத சென்னைத் தமிழை எப்படியோ தட்டுத் தடுமாறிப் பேசி சமாளிக்கிறார். சென்னையில் பிரசவத்திற்காக மனைவியை மருத்துவமனையில் சேர்த்து அதற்கான செலவுகள் தரும் அழுத்தம் ஒரு பக்கம், தன் வேனைத் தள்ளுவதற்கு உதவியாக இருக்கட்டுமே என கருணாஸை ஏற்றிக் கொண்டதால் அவர் தரும் தொந்தரவுகள் மறு பக்கம், திடீரென பிணம் காணாமல் போக எப்படி சமாளிப்பது என தவிப்பது இன்னொரு பக்கம் என அவர் மீது ஒரு அனுதாபம் ஏற்படும்படி நடித்திருக்கிறார்.

முன்னாள் தெருக்கூத்து கலைஞராக கருணாஸ். கூத்துக் கலை வாழ வேண்டும், அதைப் பலரும் ரசிக்க வேண்டும் என்று நினைப்பவர். விமலுக்கு அவ்வப்போது தொந்தரவு செய்தாலும் கிராமத்து மனிதர்கள் வெள்ளந்தியான மனிதர்கள் எனவும் காட்டுகிறார். காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுக்க விமலிடம் வற்புறுத்தும் போது அவருக்குள் இருக்கும் ஈரம் வெளிப்படுகிறது. ஆனால், அந்த ஈரம் எப்படிப்பட்டது என்பது கிளைமாக்சில் தெரிய வரும் போது மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. இப்படியெல்லாம் கூட ஒரு மனிதன் செய்ய முடியுமா என்பது சினிமாத்தனமாக இருப்பதால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது.

ஒரு பக்கம் விமல், கருணாஸின் வேன் பயணம் திரைக்கதையில் பயணித்துக் கொண்டிருக்க, கூடவே அண்ணன் ஆடுகளம் நரேன், தம்பி பவன் ஆகியோருக்கிடையேயான பகையும், அப்பா மீதான பாசமும் பயணிக்கிறது. நரேனுக்குக் குறைவான காட்சிகள்தான் என்றாலும் பவன் காட்சிகள் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் அவரது நடிப்புக்கும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
காதல் ஜோடிகளை மன்னித்து விடு என்று அம்மா காலில் விழுந்து கேட்டதும் கலங்கும் அருள்தாஸ், அப்பாவுக்கு செய்யும் சடங்கை விட்டுத்தர முடியாது என தம்பி பவனுக்கு ஆதரவாய் இருக்கும் தீபா சங்கரும் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். விமல் மனைவியாக மேரி ரிக்கெட்ஸ் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.
பயணக் கதைகளில் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை இருக்கும். பல்வேறு கோணங்களில் அந்தப் பயணத்தைக் காட்ட வேண்டியிருக்கும். அதை சிறப்பாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். என்ஆர் ரகுநந்தனின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுடன் சேர்ந்தே பயணிக்கிறது.

திரைக்கதையில் மட்டும் சில 'பட்டி, டிங்கரிங்' வேலைகளைப் பார்த்திருந்தால் பயணத்தில் வேகத் தடைகள் இல்லாமல் இருந்திருக்கும். அடுத்தவருக்கு உதவும் குணம் பற்றிய ஒரு கருத்தை அதிக மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர். வழக்கமான கதைகளிலிருந்து இப்படியான மாறுபட்ட கதைகள் வருவதும் ஆரோக்கியமானது.

போகுமிடம் வெகு தூரமில்லை - உணர்வுப் பயணம்…

 

பட குழுவினர்

போகுமிடம் வெகு தூரமில்லை

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓