நேற்று இந்த நேரம்,Netru indha neram
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கிளாப்பின் பிலிமொடெயின்மென்ட்
இயக்கம் - கேஆர் நவீன்குமார்
இசை - கெவின்
நடிப்பு - ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா, திவாகர் குமார்
வெளியான தேதி - 29 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

ஒரே ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கிரைம் திரில்லர். பொதுவாக ஒரே இடம், ஒரே பங்களா என்றால் பேய்ப் படங்களைத்தான் எடுப்பார்கள். இந்தப் படத்தில் கொஞ்சம் மாற்றி கிரைம் திரில்லர் எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் சாய் ரோஷன் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். அந்த விறுவிறுப்பை கிளைமாக்சில் மட்டுமே சேர்த்திருக்கிறார்.

ஷாரிக் ஹாசன், ஹரிதா இருவரும் காதலர்கள். அவர்களது காதலின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் மோனிகா, காவ்யா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் செல்கா ஆகியோருடன் ஊட்டிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குகிறார்கள். ஒரு நாள் காலையில் ஷாரிக்கைக் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் ரிசார்ட்டிற்கு வந்து நண்பர்களை ஒவ்வொருவராக விசாரிக்கிறார். அங்கு நடந்தவற்றை ஒவ்வொருவரும் கூறுகிறார்கள். மொத்த சந்தேகமும் வேறொரு நண்பரிடம் செல்கிறது. ஆனால், அவரும் அடுத்த நாள் காணாமல் போகிறார். இரண்டு நண்பர்களின் நிலை என்ன, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விசாரணை, பிளாஷ்பேக், விசாரணை, பிளாஷ்பேக் என மாறி மாறி காட்சிகள் நகர்கின்றன. இது ஒரு பக்கம் சுவாரசியமாக இருந்தாலும், அதிக அறிமுகமில்லாத நடிகர்கள், நடிகைகள் என்பதால் திரைக்கதையைத் தொடர்வதில் சிக்கல் உள்ளது. ஒவ்வொருவரது விளக்கத்தில் காட்சிகள் நகர்கிறது.

ஷாரிக் தவிர மற்றவர்கள் நமக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள். அவர்களது நிஜ வாழ்க்கை வயதுக்குரிய கதாபாத்திரங்கள் என்பதால் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். நண்பர்களுக்குள் நடக்கும் மோதல் குறிப்பாக போதைப் பொருளுக்கான அடிப்படையாக இருப்பது அதிர்ச்சியானது. சமீப காலங்களில் இப்படி போதைப் பொருட்களை மையமாக வைத்தே பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது தவறான ஒரு போக்கு, இதை யார் மாற்றப் போகிறார்கள், தடுக்கப் போகிறார்கள் என்பதே கேள்வி.

இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ரிசார்ட்டில் ஒரே இடத்தில் மாற்றி மாற்றி நண்பர்களை விசாரிப்பது டிராமத்தனமாக உள்ளது. அவரும் காக்கிச்சட்டை அணியாமல் விசாரிக்கிறார், போதைப் பொருள் பயன்படுத்துவதற்காக அவர்கள் மீது நடவடிக்கை கூட எடுக்காமல் பரிதாபம் காட்டுகிறார்.

ஊட்டியில் நடக்கும் கதையில் ஊட்டியை அதிகம் காட்டாமல் ரிசார்ட் வரவேற்பறை, ரிசார்ட்டின் தோட்டப் பகுதி என சிலவற்றைக் காட்டி படத்தை முடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் கெவின், ஒளிப்பதிவாளர் விஷால் ஆகியோரை விட படத்தொகுப்பாளர் கோவிந்த்துக்குத்தான் அதிக வேலை. முழு ஸ்கிரிப்ட்டையும் வைத்துக் கொண்டு ரசிகர்களை குழப்பக் கூடாது என எடிட் செய்திருப்பார்.

கிளைமாக்சில் மட்டும் சில பல டுவிஸ்ட்டுகளை வைத்து எதிர்பார்க்காத திருப்பத்தையும், முடிவையும் கொடுத்திருக்கிறார்கள்.

நேற்று இந்த நேரம் - காலம் செய்த கோலம்…

 

பட குழுவினர்

நேற்று இந்த நேரம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓