ரெபல்,Rebel

ரெபல் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - நிகேஷ் ஆர்எஸ்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், மமிதா பைஜு
வெளியான தேதி - 22 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

மலையாள சினிமாவான 'மஞ்சுமேல் பாய்ஸ்' படத்தை தமிழ் ரசிகர்கள் கடந்த ஒரு மாத காலமாக கொண்டாடி வரும் போது, தமிழர்களை கொடுமைப்படுத்தும் மலையாளிகள் பற்றிய படமாக இந்த 'ரெபல்' படம் வந்திருக்கிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் படத்தில் உள்ள சில விஷயங்களை நம்ப வேண்டியிருக்கிறது. சில விஷயங்களை சினிமாவுக்காக மிகைப்படுத்தியும் காட்டியிருக்கிறார் இயக்குனர் நிகேஷ். அவரது உறவினர் ஒருவருக்கு நடந்தவைதான் இந்தப் படத்தின் கதை.

1980 காலகட்டங்களில் நடக்கும் கதை. தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரளாவின் மலைப் பிரதேசமான மூணாரில் இருந்து பாலக்காடு சென்று அரசுக் கல்லூரியில் ஜிவி பிரகாஷ், ஆதித்யா ஆகியோர் படிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆதித்யாவை அந்தக் கல்லூரியில் உள்ள அரசியல் பின்னணி கொண்ட கல்லூரி சேர்மன், மலையாள மாணவர் வெங்கிடேஷ் ராகிங் என்ற பெயரில் அசிங்கப்படுத்துகிறார். அந்தக் கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களை இரு அரசியல் கட்சிகளின் ஆதரவில் இருக்கும் மலையாள மாணவர்கள் எப்போதுமே தரக்குறைவாக நடத்துவதே வழக்கம். ஒரு கட்டத்தில் வெங்கிடேஷால் ஆதித்யா கொல்லப்படுகிறார். அதன்பின் ஜிவி பிரகாஷ் தலைமையில் கொதித்தெழும் தமிழ் மாணவர்கள் கல்லூரியின் மாணவர் பேரவை தேர்தலில் இரு அரசியல் கட்சிகளின் மாணவர்களை எதிர்த்து நிற்கிறார்கள். அதில் வெற்றி பெற்றார்களா, தமிழ் மாணவர்களுக்கு அக்கல்லூரியில் சம உரிமையும், அங்கீகாரமும் கிடைத்ததா என்பதுதான் மீதிக் கதை.

சில மலையாளப் படங்களில் தமிழ் கதாபாத்திரங்களை வில்லன்களாகக் காட்டுவது வழக்கம். இந்தப் படத்தில் பதிலுக்கு மலையாள மாணவர்களை, மலையாள அரசியல்வாதிகளை, கேரளா போலீசை வில்லன்களாகக் காட்டியிருக்கிறார். முள் மீதும், கத்தியின் மீதும் நடக்கும்படியான ஒரு திரைக்கதை. பல காட்சிகளை வெளிப்படையாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர் நிகேஷ்.

மூணார் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவனாக ஜிவி பிரகாஷ்குமார். சில படங்களில் அந்தக் கதாபாத்திரத்துடன் தன்னை பொருத்திக் கொள்வதில் ஜிவியும் நிறையவே உழைக்கிறார். இந்தப் படத்திலும் அப்படியே. கதிர் கதாபாத்திரத்தில் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் தைரியசாலியாக நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் காதலனாகவும், அதன்பின் தமிழர்களின் காப்பாளனாகவும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் இது ஒரு காதல் படமோ என யோசிக்க வைக்கிறது. பார்த்த முதல் பார்வையிலேயே மமிதா பைஜுவைப் பார்த்து காதலில் விழுகிறார் ஜிவி பிரகாஷ். பதிலுக்கு மமிதாவும் காதல் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டாலும் இருவரும் காதலை வெளிப்படுத்தாமலேயே காதலிக்கிறார்கள். காதல் பார்வையுடன் மமிதாவின் வேலை முடிந்து போய்விட்டது. அடுத்து அவர் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு உரக்கக் குரல் கொடுத்தாலும் நம் மனதை விட்டு மறைந்து போவதோடு, படத்திலும் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறார்.

ஜிவி பிரகாஷ், ஆதித்யா, ஆண்டனி உள்ளிட்ட தமிழ் மாணவர்களைப் பார்த்தாலே கடுப்பாகவும், கோபமாகவும், ஆவேசமாகவும் நடந்து கொள்ளும் வில்லனாக வெங்கிடேஷ். மலையாள மாணவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ என பயமுறுத்துகிறார். மற்றொரு மலையாள மாணவராக ஷாலு ரஹிம், குறைவான காட்சிகள் என்றாலும் தமிழ்ப் பெண்ணின் ஆடையை அவிழ்க்கும், கம்யூனிஸ்ட் கட்சி மாணவராக நடந்து கொள்கிறார். இந்த இரண்டு மாணவ வில்லன் கதாபாத்திரங்களை காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் என நீலம் எதிர்ப்பு, சிவப்பு எதிர்ப்பு குறியீடுகளுடன் காட்டியிருக்கிறார் இயக்குனர் நிகேஷ்.

மற்ற கதாபாத்திரங்களில் குறைவாக வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார் ஆதித்யா. ஜிவியின் நண்பனாக கூடவே இருக்கும் கல்லூரி வினோத், ஜிவியின் அப்பாவாக சுப்பிரமணிய சிவா நிறைவாக நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் பேராசியராக இருக்கும் தமிழர் கருணாஸ், தமிழ் மாணவர்களுக்கு உதவுபவராக நடித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் உயிரோட்டமாய் உள்ளது. கல்லூரி, ஹாஸ்டல் என இரண்டு இடங்களில்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. அவற்றை பல கோணங்களில் படமாக்கியிருக்கிறார் அருண் ராதாகிருஷ்ணன். வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் முன்பு வரை படம் மெதுவாகவே நகர்கிறது. முக்கிய கதைக்குள் தாமதமாகவே நுழைகிறார் இயக்குனர். அதன்பின் கல்லூரி தேர்தல் என்ற ஒன்றே படத்தை ஆக்கிரமித்துவிடுகிறது. கடைசி இருபது நிமிடங்கள்தான் படத்தின் ஹைலைட்.

ரெபல் - கடைசியில் மட்டுமே கலகம்…

 

ரெபல் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ரெபல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓