கிடா,Kida
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்ரீ ஷ்ரவந்தி மூவிஸ்
இயக்கம் - ரா வெங்கட்
இசை - தீசன்
நடிப்பு - பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன்
வெளியான தேதி - 11 நவம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களின் வாழ்க்கையை இயல்புடன் படம் பிடித்துக் காட்டும் படங்கள் இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லை. தமிழ் சினிமாவை சிலர் ஏதோ ஒரு கட்டாயத்துடன் வேறு ஒரு திசையில் இழுத்துக் கொண்டிருக்க, ஒரு சிலர் மட்டுமே நமது வாழ்வியல் சார்ந்த படங்களைக் கொடுத்து அது வேறு பக்கம் செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீபாவளிப் பண்டிகையை உலகம் முழுவதும் இப்போது கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தின் கொண்டாட்டம் எப்படி திண்டாட்டமாய் இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட்.

பெற்றோரை இழந்த மகன் மாஸ்டர் தீபனை தாத்தா பூ ராமு, பாட்டி பாண்டியம்மாள் பாசத்துடன் வளர்த்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை வருதையொட்டி பேரன் கேட்டபடி அவனுக்கு புதுத் துணி எடுத்து கொடுக்க ஆசைப்படுகிறார் பூ ராமு. ஆனால், கையில் பணமில்லை, கடன் கேட்டாலும் யாரும் கொடுக்கவில்லை. எனவே, கோயிலுக்காக நேர்ந்துவிட்டா கிடாவை விற்க முடிவு செய்கிறார். தனக்கு உற்ற நண்பனாய் இருக்கும் அந்த கிடாவை விற்க மாஸ்டர் தீபனுக்கு மனமில்லை. இந்நிலையில் அந்த கிடாவை யாரோ திருடிச் சென்று விடுகிறார்கள். அந்த கிடா கிடைத்ததா, அதை விற்று பணத்தைப் பெற்று பேரனுக்கு புதுத் துணியை பூ ராமு எடுத்துக் கொடுத்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருக்கும் பூ ராமுவின் குடிசை, அந்த கிராமத்தின் சில தெருக்கள் என அவற்றை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள், அதற்கான ஒளிப்பதிவு அனைத்துமே அவ்வளவு இயல்பாய் கதையுடன் பொருந்திப் போவதே இந்தப் படத்தை அதிகம் ரசிக்கக் காரணமாகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பாசிட்டிவ்வான முடிவை வைத்து நெகிழ வைத்துவிட்டார் இயக்குனர்.

மறைந்த நடிகர் பூ ராமு, அந்த தாத்தா கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார். பேரனுக்கு ஒரு துணியைக் கூட எடுத்துக் கொடுக்க முடியவில்லையே என்ற அந்த ஏக்கம், தவிப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அவரது பேரனாக மாஸ்டர் தீபன், ஒரு பக்கம் புதுத் துணியும் வேண்டும், மறு பக்கம் அந்த கிடாவையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசைக்கும், பாசத்துக்கும் இடையில் தவித்துப் போகிறார். முதலாளி மகன் திட்டிவிட்டார் என்ற காரணத்துக்காக போட்டியாக ஒரு கறிக் கடை போடுகிறேன் என அலைந்து திரியும் காளி வெங்கட்டும் ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் பாட்டியாக நடித்துள்ள பாண்டியம்மா, காளி வெங்கட் மகனாக நடித்துள்ள பாண்டி, அவரது காதலியாக நடித்துள்ள ஜோதி, காளி வெங்கட் மனைவியாக நடித்துள்ள லெட்சுமி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

தீசன் இசையில் படத்துடனும், கதாபாத்திரங்களுடனும் சேர்ந்து உயிர்ப்பாய் பயணிக்கிறது. ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு கதையை மீறாமல் என்ன வேண்டுமோ அந்த வரம்புக்குள் மட்டும் யதார்த்தமாய் பயணிக்கிறது.

ஆர்பாட்டமான, பிரம்மாண்டமான படங்களுக்கு மத்தியில் இம்மாதிரியான உணர்வுபூர்வமான சிறிய படங்களும் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்பட வேண்டும்.

கிடா - விருந்து

 

கிடா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கிடா

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓