தீர்க்கதரிசி,Theerkadarishi
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்ரீ சரவணா பிலிம்ஸ்
இயக்கம் - பி.ஜி.மோகன் - எல்.ஆர்.சுந்தரபாண்டி
இசை - பாலசுப்ரமணியன்
நடிப்பு - அஜ்மல், சத்யராஜ்
வெளியான தேதி - 5 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

காவல்துறையை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால், காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை மையமாக வைத்து இதுவரையில் அதிகமான படங்கள் வந்ததில்லை. இந்தப் படத்தை அப்படிப்பட்ட பின்னணியில் பரபரப்பான க்ரைம் த்ரில்லராகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர்கள்.

காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் அடிக்கடி போன் செய்து சென்னை மாநகரில் சில குற்றங்கள் நடக்கப் போகிறது என்று தகவல் தெரிவிக்கிறார். அதன்படி சில குற்றங்கள் நடந்துவிடுகிறது. ஒரு சில தடுக்கப்படுகிறது. அதைப் பற்றி விசாரிக்க டெபுடி கமிஷனர் அஜ்மலுக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது. அடிக்கடி போன் செய்யும் அந்த நபர் யார், அவர் சொல்வது போல எப்படி நடக்கிறது என்பதைத் தனது குழுவினருடன் கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

ஒரு பரபரப்புடனேயே ஆரம்பமாகிறது கதை. அந்த பரபரப்பு அடுத்தடுத்த சில குற்றங்கள் சொன்னபடியே நடப்பதால் மேலும் பரபரப்பாகிறது. நம்மாலும் எந்த ஒரு யூகத்திற்கும் வர முடியாத அளவிற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், இரண்டாவது பாதியில் மெயின் கதையை விட்டு கொஞ்சம் விலகி, பின்னர்தான் மெயின் கதைக்கு வருகிறார்கள். அது வேகத் தடையாக அமைந்துவிடுகிறது. சில தேவையற்ற காட்சிகள் படத்தில் இருக்கிறது. அவற்றையெல்லாம் நீக்கியிருந்தால் பரபரப்பான த்ரில்லர் படம் பார்த்த முழு உணர்வைக் கொடுத்திருக்கும். படத்தில் கதாநாயகியே இல்லாமல் இருப்பது ஆச்சரியம்.

தமிழில் திடீரென நடிக்க வந்து திடீரென காணாமல் போய்விடும் அஜ்மல் தான் படத்தின் கதாநாயகன். நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். டெபுடி கமிஷனர் கதாபாத்திரத்தில் 'பிட்' ஆக நடித்திருக்கிறார். கிளைமாக்சில் அவர் யார் என்று தெரிந்த பின் நமக்கு அவரது தோற்றம் குறித்து சந்தேகம் வந்துவிடக் கூடாதென 'ஆடுகளம்' நரேன் பேசும் ஒரு வசனத்தை வைத்து சமாளித்திருக்கிறார்கள்.

சத்யராஜ் கதாபாத்திரம் இடைவேளைக்குப் பிறகாவது வரும் என்று எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றம். காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பாளராக ஸ்ரீமன், அஜ்மல் டீமில் இருக்கும் அதிகாரிகளாக துஷ்யந்த், ஜெய்வந்த் நடித்திருக்கிறார்கள்.

பாலசுப்பிரமணியத்தின் பின்னணி இசை பரபரப்பைக் கூடுதலாக்குகிறது. லட்சுமண் ஒளிப்பதிவு சிறப்பான லைட்டிங்குடன் உள்ளது. பி.ஜி.மோகன், எல்.ஆர்.சுந்தரபாண்டி இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

ஒரு பரபரப்பான க்ரைம் திரில்லராக மட்டுமே படம் நகரும் என்று நினைத்திருந்தால் கிளைமாக்ஸ் முன்பாக வேறு ஒரு டுவிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். திண்டிவனம், சாதி மாறிய திருமணம், ரயிலில் மோதவிட்டு கொல்லப்படும் காதலன் என ஒரு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்கள்.

தீர்க்கதரிசி - முயற்சி

 

தீர்க்கதரிசி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தீர்க்கதரிசி

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓