யானை முகத்தான்,Yaanai Mugathaan
Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - த கிரேட் இந்தியன் சினிமாஸ்
இயக்கம் - ரெஜிஷ் மிதிலா
இசை - பரத் சங்கர்
நடிப்பு - ரமேஷ் திலக், யோகி பாபு, கருணாகரன்
வெளியான தேதி - 21 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களை விட்டு அவ்வப்போது விலகி வரும். அறிமுக நடிகர்கள் கதாநாயகர்களாக அறிமுகமாவது கூட நடந்து விடும். நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக மாறுவது கூட நடந்து விடும். ஆனால், இந்தப் படத்தில் பல படங்களில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ரமேஷ் திலக்கை கதாநாயகனாக்கி படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் ரெஜிஷ் மிதிலா, அவர் கதை மீதுள்ள நம்பிக்கையிலும், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மீதுள்ள நம்பிக்கையிலும் இந்தப் படத்தைக் கொடுத்திருப்பார் என்று தெரிகிறது.

படத்தின் நாயகனாக ரமேஷ் திலக், ஆட்டோ ஓட்டுபவர். அவரது ஆட்டோவின் உரிமையாளரான ஊர்வசிக்கு ஆட்டோ வாடகையும் தராமல் வீட்டு வாடகையும் தராமல் சில பல வருடங்களாக ஏமாற்றிக் கொண்டிருப்பவர். ஏமாற்றுவது அவர் கூடவே பிறந்தது போல நடந்து கொள்பவர். இருந்தாலும் விநாயகர் மீது அதிக பக்தி உள்ளவர். அப்படிப்பட்டவர் முன் விநாயகர், யோகி பாபு ரூபத்தில் நேரில் வருகிறார். ஒரு நாள் யாரையும் ஏமாற்றாமல், நேர்மையாக வாழ வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி நடக்க ஆரம்பிக்கிறார் ரமேஷ். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அறிமுகமான காலத்திலிருந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் திரும்பிப் பார்க்க வைத்தவர் ரமேஷ் திலக். நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இந்தப் படத்தில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு. வழக்கம் போலவே அவர் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

படத்தின் ஆரம்பத்திலும், அதன் பின் இடைவேளைக்குப் பிறகும் தான் படத்தில் யோகி பாபு இடம் பெறுகிறார். நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் வாழ்க்கையின் அர்த்தங்கள் சிலவற்றை இந்தக் கதாபாத்திரம் மூலம் உணர்த்துகிறார் இயக்குனர்.

படத்தில் கதாநாயகி என யாரும் கிடையாது என்பது ஆச்சரியமான விஷயம். ரமேஷ் திலக் நண்பனாக கருணாகரன், வீடு, ஆட்டோ உரிமையாளராக ஊர்வசி இருவர் மட்டுமே மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வேண்டியவர்கள். படத்தின் கிளைமாக்சுக்கு முன்பாக வரும் காட்சிகள் இதற்கு முன்பு வெளியான சில பல படங்களை ஞாபகப்படுத்துகின்றன.

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது. இசை பரவாயில்லை ரகம் கூட இல்லை.

“கடவுள், அறை எண் 305ல் கடவுள், ஓ மை கடவுளே” வரிசையில் வந்துள்ள மற்றுமொரு படம் இது. படத்தை சுவாரசியமான விதத்தில் சொல்லும்படியான ஒரு கதையைத் தேர்வு செய்த இயக்குனர், அதற்குரிய திரைக்கதையையும், காட்சிகளையும் அமைக்கத் தவறிவிட்டார். ரமேஷ் திலக், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் என நட்சத்திரங்களைத் தேர்வு செய்தும் அவர்களுக்குரிய காட்சிகளை சரியாக அமைக்கவில்லை. ஸ்கிரிப்ட்டில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். யார் கடவுள் ?, என்பதற்கு 'அன்பே சிவம்' பாணியில் ஒரு கிளைமாக்ஸை வைத்திருக்கிறார் இயக்குனர்.

யானை முகத்தான் - பக்திமான்

 

யானை முகத்தான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

யானை முகத்தான்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓