லக்கிமேன்,Luckyman
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - தின்க் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பாலாஜி வேணுகோபால்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - யோகிபாபு, ரெய்ச்சல் ரெபேக்கா, வீரா
வெளியான தேதி - 1 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

வாழ்க்கையில் 'லக்' என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனுக்கு திடீரென ஒரு 'லக்' அடித்து பின் அதுவும் 'பக்' ஆகிப் போனால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த 'லக்கிமேன்'. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் யதார்த்தம் கலந்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் யோகிபாபு. ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் கமிஷன் ஏஜன்ட்டாக வேலை பார்க்கிறார். மனைவி, ஒரு மகன் என வாழ்க்கை சுமாராகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சீட்டு கம்பெனியில் அவருக்கு குலுக்கலில் ஒரு கார் பரிசாக விழுகிறது. அந்த காரை வைத்து ரியல் எஸ்டேட்டில் கூடுதலாக சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில் அந்தக் கார் திடீரெனக் காணாமல் போகிறது. யோகிபாபுவுடனான ஒரு மோதலில் இன்ஸ்பெக்டரான வீரா அந்தக் காரை எடுத்து மறைத்து வைத்துக் கொள்கிறார். காணாமல் போன கார் யோகிபாபுவுக்குக் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'மண்டேலா' படத்திற்குப் பிறகு யோகிபாபுவின் நடிப்பை அழுத்தமாய் வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரம். பொறுப்பான கணவனாக, அப்பாவாக தனது கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார் யோகிபாபு. அவருக்குள் காமெடி உணர்வுகளையும் மீறி குணச்சித்திர உணர்வுகள் நிறைய ஒளிந்து கிடக்கிறது என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது மேலும் புரிகிறது.

யோகிபாபுவின் மனைவியாக ரெய்ச்சல் ரெபேக்கா, சினிமாத்தனமில்லாத ஒரு மனைவி கதாபாத்திரம். கணவனை நன்றாக புரிந்து வைத்திருப்பவர் ஒரு கட்டத்தில் அவரை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் ஏற்புடையதாக இல்லை. யோகிபாபுவின் மகனாக நடித்திருக்கும் சிறுவனும் நிறைவாய் நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் யோகிபாபுவுடனேயே இருக்கும் நண்பன் கதாபாத்திரத்தில் அப்துல் லீ. சுகதுக்கங்களில் எப்போதும் பங்கெடுக்கும் இது மாதிரியான நண்பர்கள்தான் பலரது வாழ்க்கையில் தூணாக இருக்கிறது. வில்லன் போன்ற குணாதிசயத்தில் வீரா. யோகிபாபுவை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பவர்.

ஷான் ரோல்டன் இசையமைப்பில் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு காட்சிகளுக்குரிய யதார்த்தத்தை அருமையாய் பதிவு செய்திருக்கிறது.

இடைவேளை வரை சுவாரசியமாக நகரும் படம், அதன் பின் கொஞ்சம் தடுமாறுகிறது. காரைத் தேடி யோகிபாபு அலைவதும், அவரை வீரா வெறுப்பேற்ற நினைப்பதும் என காட்சிகள் 'ரிபீட்' ஆவது போன்ற உணர்வுதான் வருகிறது. அதைச் சரி செய்திருந்தால் 'லக்கிமேன்', கொஞ்சம் 'சூப்பர்மேன்' ஆக மாறியிருப்பார்.

லக்கி மேன் - ஓகே மேன்

 

பட குழுவினர்

லக்கிமேன்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓