விமர்சனம்
தயாரிப்பு - ரவுடி பிக்சர்ஸ்
இயக்கம் - அஸ்வின் சரவணன்
இசை - பிரித்வி சந்திரசேகர்
நடிப்பு - நயன்தாரா, ஹனியா நபீசா, சத்யராஜ்
வெளியான தேதி - 22 டிசம்பர் 2022
நேரம் - 99 நிமிடங்கள்
ரேட்டிங் - 2.5/5
தியேட்டர்களில் இடைவேளை இல்லாமல் வெளியாகி இருக்கும் படம். 99 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்தப் படத்தை இடைவேளை இல்லாமல் ரசித்தால்தான் அதன் 'த்ரில்லிங்' புரியும் என்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். இடைவேளை இல்லாமல் ரசிக்க வைக்கக் கூடிய அளவிற்குக் காட்சிகளை பரபரப்பாக நகர்த்தியிருக்கிறார்.
கொரானோ பரவல் ஆரம்பமான கால கட்டத்தில் நடக்கும் ஒரு கதை. நயன்தாரா, அவரது கணவர் டாக்டர் வினய், பதினைந்து வயதில் ஒரு மகள் என இனிமையான குடும்பம். கொரானோ காலத்தில் மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரிகிறார் வினய். அதனால், அவருக்கும் தொற்று ஏற்பட்டு மரணம் அடைகிறார். அப்பா மீது அதிக பாசம் வைத்துள்ள மகள் ஹனியா நபீசா, அப்பாவின் ஆவியை வரவழைத்துப் பேச முயற்சிக்கிறார். அனால், அப்பாவின் ஆவிக்கு பதில் வேறொரு துர் ஆவி வீட்டுக்குள் வந்துவிடுகிறது. அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார் ஹனியா. மகளின் நிலையைக் கண்டு அவளை மீட்கும் முயற்சியில் அப்பா சத்யராஜ் உதவியுடன் இறங்குகிறார் நயன்தாரா. ஹனியாவைப் பிடித்த ஆவி விரட்டப்பட்டதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்தில் நயன்தாராவின் அழகான குடும்பம் எப்படிப்பட்டது என ஒரே ஒரு காட்சியை வைத்து நம்மை உணர வைக்கிறார் இயக்குனர். அது போல நயன்தாராவின் மகள் ஹனியாவை ஏதோ ஒரு துர் ஆவி ஏன் வந்து பிடிக்கிறது என்பதற்கான அழுத்தமான ஒரு காரணம் இருந்திருந்திருந்தால் இன்னும் ஈடுபாட்டுடன் ரசித்திருக்க முடியும். ஹனியா மீது நமக்கு அனுதாபம் வர வேண்டும், ஆனால், அப்படி எதுவும் வராமல் போவது படத்தின் மைனஸ் பாயின்ட்.
படம் முழுவதும் வீடியோ காலிங் முறையிலேயே கதாபாத்திரங்கள் ஒருவருக்கொரவர் பேசிக் கொள்கிறார்கள். கொரானோ கால கட்டத்தில் பலரும் அப்படித்தான் பேசிக் கொண்டோம். சினிமாவில் கேமராவைப் பார்த்து நடிக்கக் கூடாது என்பார்கள், ஆனால், இந்தப் படத்தில் கேமராவைப் பார்த்து மட்டுமே நடித்திருக்கிறார்கள்.
படத்தில் பதினைந்து வயது மகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் நயன்தாரா. அந்த நடுத்தர வயதுக்குரிய தோற்றத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். உடல் இளைத்து அந்த வயதுக்குரிய ஒரு நிதானத்துடன் பேசுவது, நடந்து கொள்வது என சூசன் கதாபாத்திரத்தில் தன்னை அடக்கிக் கொண்டுள்ளார். நயன்தாராவின் பேய் பிடித்த மகளாக ஹனியா நபீசா. அப்பா மீதான பாசம், அம்மா மீது ஒரு வெறுப்பு என ஆரம்பக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். அதன்பின் அவர் மீது பேய் வந்துவிட்டதால் அவரை இருட்டிலேயே காட்டுகிறார்கள். நயன்தாராவின் அப்பாவாக சத்யராஜ், பேய் ஓட்டும் பாதிரியாராக அனுபம் கேர் அனுபவ முத்திரையை பதித்திருக்கிறார்கள். வினய் சில காட்சிகளில் வந்து போகிறார்.
மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் அறைகளுக்குள் செய்யப்பட்டுள்ள லைட்டிங் அனைத்துமே அற்புதமாக உள்ளது. சவுண்ட் டிசைன் செய்துள்ள சச்சின் சுதாகரன், ஹரிஹரன், சவுண்ட் மிக்ஸ் செய்துள்ள ராஜகிருஷ்ணன், பின்னணி இசை அமைத்துள்ள பிரித்வி சந்திரசேகர், படத் தொகுப்பு செய்துள்ள ரிச்சர்ட் கெவின் அவர்களது தொழில்நுட்பத் திறமைகளை ஒரு சேரக் கொடுத்து அவர்கள் பணியை படத்துடன் 'கனெக்ட்' செய்துள்ளார்கள்.
டெக்னிக்கலாக படம் ரசிக்க வைக்கும் அளவிற்கு, கதை இன்னும் வலுவாக, அழுத்தமாக அமைந்திருந்தால் படத்துடன் இன்னும் 'கனெக்ட்' செய்திருக்க முடியும். படம் முழுவதும் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்வது போல காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வை மீறி சில நேரம் ஏதோ கிறிஸ்துவப் பிரார்த்தனைக்குள் நுழைந்துவிட்டோமோ என்ற உணர்வே ஏற்படுகிறது.
கனெக்ட் - நாட் ரீச்சபிள்
கனெக்ட் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கனெக்ட்
- நடிகை
- இயக்குனர்