நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்,Naai Sekar Returns

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சுராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - வடிவேலு, ஆனந்தராஜ், ராவ் ரமேஷ்
வெளியான தேதி - 9 டிசம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பாக அரசியல் களத்தில் இறங்கி அதன் மூலம் பின்னடைவசைச் சந்தித்தவர். அப்போதே நடித்தால் கதாநாயகனாக நடிப்பது என்ற முடிவையும் எடுத்தவர். அவர் கதாநாயகனாக நடித்து இதுவரை வெளிவந்த நான்கைந்து படங்களில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தைத் தவிர வேறு எந்தப் படமும் ரசிக்க வைக்கவில்லை, குறிப்பாக சிரிக்க வைக்கவில்லை. அந்த வரிசையில் இந்த 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படமும் சேர்கிறது.

தான் இயக்கிய படங்களில் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக நடிக்க வைத்து அந்தப் படங்களின் நகைச்சுவையை இன்னும் ரசிக்கும்படியாகக் கொடுத்தவர் இயக்குனர் சுராஜ். ஒரு முழு படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கும் போது அந்த நகைச்சுவை டபுள் பிளஸ் ஆகப் போக வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் டபுள் மைனஸ் ஆகப் போய் இருக்கிறது.

வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்களைக் கடத்திக் கொண்டு வந்து, அவற்றைத் திருப்பித் தர பணம் கேட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்பவர். ஒரு கட்டத்தில் வடிவேலுவின் பாட்டி அவர்களது குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறார். அவர்களது குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்பட்ட 'அதிர்ஷ்ட' நாயை வீட்டு வேலைக்காரர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டதால்தான் தங்களது குடும்பம் இப்படி ஆகிவிட்டது என்கிறார். அந்த நாய் இருக்குமிடமான ஐதராபாத் சென்று அதை மீட்டு வர முயற்சிக்கிறார் வடிவேலு. அதைச் செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தன் முந்தைய படங்களில் போட்ட பல கெட்டப்புகளை இந்தப் படத்தில் மீண்டும் 'ரிட்டர்ன்' செய்திருக்கிறார். அவருடைய உடல்மொழி, பேச்சு அனைத்தும் அப்படியே. சரி, ஏதாவது ஒரு காட்சியிலாவது வடிவேலு நம்மை சிரிக்க வைத்துவிட மாட்டாரா என்று ஏங்கி, ஏங்கி கடைசி வரை ஏமாந்து போனதுதான் மிச்சம்.

நல்ல வேளையாக படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி என யாரும் வைக்கவில்லை. இல்லையென்றால் இரண்டு, மூன்று டூயட் பாடல்களையாவது வைத்திருப்பார்கள். ஆனாலும், அவரே சில 'சோலோ' பாடல்களைப் பாடி நடித்திருக்கிறார். அவருடைய உதவியாளர்களாக ரெடின் கிங்ஸ்லி, பிரசாந்த், ஷிவாங்கி நடித்திருக்கிறார்கள். ரெடின் மட்டும் படம் முழுவதும் வருகிறார். பிரசாந்த்தையும், ஷிவாங்கியையும் பாதி படத்திற்குப் பிறகு காணாமல் செய்துவிட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக மாறன் புதிய கூட்டாளியாகச் சேர்கிறார். படம் முழுவதும் 'நாடகம்' போல பேசிக் கொண்டே இருக்கிறார்களே தவிர சிரிக்க மட்டும் வைக்கவில்லை.

வில்லன்களாக ஆனந்தராஜ், ராவ் ரமேஷ். ஆனந்தராஜ் மட்டுமே ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அது யானைப் பசிக்கு சோளப் பொறியாகவே இருக்கிறது. ராவ் ரமேஷின் தங்கையாக ஷிவானி இடைவேளைக்குப் பின் ஒரு சில காட்சிகளில் வந்து கொஞ்சம் 'கிளாமரை' இறக்கியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் 'அப்பத்தா, டீசண்டான ஆளு' பாடல்கள் கொஞ்சம் பரவாயில்லை. பின்னணி இசையில் சமாளித்திருக்கிறார். மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, சுத்திக் கொடுத்தது போலவே இருக்கிறது.

லண்டன் வரை சென்று பாடல்களுக்கான கம்போசிங் செய்துள்ளார்கள். அப்படியே ஒரு நல்ல கதை, நகைச்சுவைக் காட்சிகளை யோசித்திருக்கலாம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு 'ரிட்டர்ன்ஸ்' எதுக்கு எனக் கேட்க வைக்கிறார் வடிவேலு ?.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் - நகைச்சுவையே இல்லாமல்…

 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

வடிவேலு

நடிகர், காமெடியன்ல பாடகர் என பல பரிமாணங்களுடன் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வரும் வடிவேலு, மதுரையைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்த வடிவேலு, பின்னர் கவுண்டமணி-செந்தில் ஜோடியுடன் இணைந்து காமெடி வேடங்களில் நடித்து வந்தார். 1994ம் ஆண்டு காதலன் படத்திற்கு பின் முன்னணி காமெடியனாக உருவெடுத்தார். பிரண்ட்ஸ், பாரதி கண்ணம்மா, வெற்றி கொடிகட்டு, வின்னர், கிரி, தலைநகரம், சந்திரமுகி உள்ளிட்ட படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வடிவேலு, 5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார்.s

மேலும் விமர்சனம் ↓