பம்பர்,Bumper

பம்பர் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வேதா பிக்சர்ஸ்
இயக்கம் - செல்வகுமார்
இசை - கோவிந்த் வசந்தா, கிருஷ்ணா
நடிப்பு - வெற்றி, ஹரிஷ் பெரடி, ஷிவானி நாராயணன்
வெளியான தேதி - 7 ஜுலை 2023
நேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்
ரேட்டிங் - 3/5

நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள், இன்னும் கதைகளாக சொல்லப்படாமல் இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் படம். தமிழகத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த 'லாட்டரி சீட்டு' பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாது. 20 வருடங்களுக்கு முன்பு 2003ம் ஆண்டில் தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. ஆனால், பக்கத்து மாநிலமான கேரளாவில் மாநில அரசாங்கமே லாட்டரி சீட்டை நடத்துகிறது. பெரிய தொகையை பரிசாக வைத்து நடத்தப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு 'பம்பர்' லாட்டரி எனப் பெயர் உண்டு. அப்படி 10 கோடி ரூபாய் 'பம்பர்' லாட்டரியில் பரிசு பெற்ற கதாநாயகனைப் பற்றிய கதைதான் இந்தப் படம்.

அறிமுக இயக்குனர் செல்வகுமார் தமிழகத்தையும், கேரளாவையும் இணைத்து ஒரு கதை சொல்லியதோடு மட்டுமல்லாமல், மதப் பாகுபாட்டை விட மனிதமே தேவை என வலியுறுத்தி இந்தப் படத்தை நெகிழ்ச்சியுடன் கொடுத்திருக்கிறார். படத்தின் சில பல காட்சிகளில் கண் கலங்கவும் வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் இப்படித்தான் போய் முடியும் என எந்த இடத்திலும் நம்மை யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்து கொண்டு போய் இருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

தூத்துக்குடியில் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சிறு சிறு திருட்டு வேலைகளைச் செய்து வருபவர் வெற்றி. புதிய எஸ்பி வந்ததால் அவரையும், நண்பர்களையும் கைது செய்ய முடிவெடுக்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க சபரிமலைக்கு மாலை போடுகிறார்கள் நண்பர்கள். சபரிமலை சென்ற போது ஒரு முஸ்லிம் பெரியவரான ஹரிஷ் பெரடியிடம் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறார். ஆனால், வாங்கிய இடத்திலேயே அதைத் தொலைத்துவிடுகிறார். அந்த லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுகிறது. அதை எடுத்து வைத்திருந்த ஹரிஷ் பெரடி, தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலையும் மீறி லாட்டரி சீட்டை உரியவரிடம் சேர்ப்பதுதான் முறை என்கிறார். வெற்றியைத் தேடி தூத்துக்குடி செல்கிறார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாத நிலையில் அவரைக் கண்டுபிடித்தாரா, பரிசு விழுந்த லாட்டரி சீட்டைக் கொடுத்தாரா, அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தூத்துக்குடியை கதைக்களமாகக் கொண்ட கதையில் தூத்துக்குடித் தமிழை இயல்பாகப் பேசி நடித்திருக்கிறார் வெற்றி. எந்த வேலைக்கும் செல்லாமல் திருடுவது, சண்டை போடுவது என நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் கதாபாத்திரம். ஊதாரித்தனமாகத் திரிபவருக்கு மாமா மகள் ஷிவானி மீது ஒரு காதல் உண்டு. இருந்தாலும் அவரைப் பார்த்தாலே அமைதியாகிவிடுவார். லாட்டரியில் பத்து கோடி பரிசு விழுந்தது தெரிந்த பின் கொஞ்சம் மாறிப் போகிறார். பொருத்தமான கதை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தாலே ஒரு கதாநாயகனுக்கு பாதி வெற்றி கிடைத்துவிடும். மீதி பாதியில் கொஞ்சமாக நடித்தாலே போதும், கதாபாத்திரம் பேசப்பட்டுவிடும். இந்தப் படத்தில் கொஞ்சமாக இல்லாமல் நிறைவாகவும் நடித்திருக்கிறார் வெற்றி.

வெற்றியின் முறைப் பெண்ணாக ஷிவானி நாராயணன். ஆரம்பத்தில் வெற்றியைப் பார்த்து முறைத்துக் கொண்டு செல்பவர், பின் காதலிக்க ஆரம்பிக்கிறார். காதல் காட்சிகள் எல்லாம் வைத்து போரடிக்காமல் கதைக்கு எந்த அளவு தேவையோ அதற்கான காட்சிகளில் இருக்கிறார் ஷிவானி. 'மாஸ்டர்' படத்தில் வந்து தலை காட்டிச் சென்றவர், தனி கதாநாயகியாக இயல்பாய் நடித்திருக்கிறார்.

ஏழை முஸ்லிம் பெரியவராக ஹரிஷ் பெரடி. படத்தில் இவரை இரண்டாவது கதாநாயகன் என்று கூட சொல்லலாம். தமிழில் இதற்கு முன்பு பல படங்களில் மலையாளம் கலந்த தமிழைப் பேசி கொஞ்சம் எரிச்சலையும் ஏற்படுத்துவார். இந்தப் படத்தில் அவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். அந்த வயதுக்குரிய பொறுமை, நிதானம், நடை, நேர்மையாக மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் அவரது கதாபாத்திரத்தை எங்கோ கொண்டு போய்விடுகிறது. அதிலும் கிளைமாக்சில் அவர் குடும்பத்தினரைப் பார்த்து கைகளாலும், கண்களாலும் தன் எண்ணங்களை வெளிப்படுத்திவிட்டுச் செல்லும் காட்சி கண்ணீரை வரவழைத்துவிடுகிறது.

வெற்றியையும் அவரது நண்பர்களையும் வைத்து பணம் சம்பாதிக்கும் போலீஸ்காரராக கவிதாபாரதி, மற்றும் வெற்றியின் நண்பர்களாக நடித்திருக்கும் தங்கதுரை உள்ளிட்டவர்கள் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். ஜிபி முத்துவை வைத்து நகைச்சுவைக் காட்சிகள் என நம்மை சோதித்துப் பார்க்கிறார்கள்.

தூத்துக்குடி, கேரளாவின் புனலூர் ஆகிய இடங்களை யதார்த்தமாய் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி. சிலரது வாழ்க்கையைப் படமாகப் பார்க்கிறோம் என்பதை படத்தொகுப்பின் மூலம் உணர்த்துகிறார் படத்தொகுப்பாளர் காசிவிஸ்வநாதன். கிருஷ்ணாவின் பின்னணி இசையும் குறிப்பிட வேண்டிய ஒன்று. பாடல்களுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

இடைவேளை வரையில் வெற்றியைச் சுற்றி நகரும் கதை, பின்னர் ஹரிஷ் பெரடியைச் சுற்றி நகர்கிறது. இடைவேளைக்கு முன்பாக நகைச்சுவை என்ற பெயரில் சில காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் இந்தக் கதைக்குத் தேவையில்லாத ஒன்று. மற்றவரின் பணத்தைத் திருடிப் பிழைக்கும் கதாநாயகன், மற்றவரின் பணத்தை அவரிடமே சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு முதியவர் என இரு குணாதிசயம் கொண்டவர்களை வைத்து ஒரு பாடத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

பம்பர் - பணமா, பாசமா…

 

பம்பர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பம்பர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓