2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஆர்கே செல்லுலாயிட்ஸ்
இயக்கம் - சூர்ய கதிர் காக்கள்ளார், கார்த்திகேயன்
இசை - சத்யா
நடிப்பு - விஜய் கனிஷ்கா, சரத்குமார்
வெளியான தேதி - 31 மே 2024
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கொரோனா வந்த அந்த 2020ம் ஆண்டு காலகட்டம். பல துயர சம்பவங்கள் பலரது வீடுகளில் நடந்தது. தங்களது குடும்பங்களில் சிலரையும், உறவினர்கள், நண்பர்களில் சிலரையும் பறி கொடுத்து தவித்தவர்கள் பலர். அப்படியான ஒரு கொடுமையான கால கட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலரும் அந்த நோயின் தாக்கத்தால் மரணம் அடைந்தனர். அப்படி மரணம் அடைந்த ஒரு பெண் டாக்டரை மையமாக வைத்து கற்பனை கலந்த திரில்லர் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர் விஜய் கனிஷ்கா. அம்மா சித்தாரா, தங்கை அபி நட்சத்திரா என சிறிய குடும்பம் அவருடையது. ஒரு நாள் அம்மாவையும், தங்கையையும் யாரோ கடத்தி விடுகிறார்கள். கடத்தியவன் முகமூடி அணிந்து விஜய் கனிஷ்காவை தொடர்பு கொண்டு பிரபல ரவுடி ஒருவரைக் கொலை செய்யச் சொல்கிறான். ஒரு உயிருக்குக் கூட தீங்கு நினைக்காத விஜய் கனிஷ்கா, அந்த ரவுடியைக் கொல்கிறார். ஆனால், முகமூடி மனிதன் அதோடு நிற்கவில்லை. அடுத்தும் ஒரு கொலையை செய்யச் சொல்கிறான். தனது அம்மாவையும், தங்கையையும் காப்பாற்ற விஜய் இரண்டாவது கொலையையும் செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அறிமுக நாயகனாக இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. முதல் பட நடிகர் போலத் தெரியவில்லை. அனுபவ நடிகர் போலவே நடித்திருக்கிறார். அம்மாவையும், தங்கையையும் காப்பாற்றத் துடியாய்த் துடிக்கிறார். எந்த உயிரையும் கொல்லக் கூடாது என நினைப்பவரிடம், அந்த முகமூடி மனிதன் ஒரு சேவலைக் கொல்ல வேண்டும் என்று சொல்வதற்கே அவ்வளவு தயங்கும் ஒரு கதாபாத்திரம். ஒரு ரவுடியை அவனது இடத்திற்கே சென்று தனியாகக் கொல்வதெல்லாம் தனி ரகம். அறிமுகப் படம் என்றால் காதல், ஜோடி என நடிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் விஜய் கனிஷ்காவுக்கு ஜோடியும் இல்லை, காதலும் இல்லை.

டெபுடி கமிஷனராக சரத்குமார். விஜய் கனிஷ்காவை முகமூடி மனிதன் மிரட்டுவதால் அவருக்குத் துணையாக இருந்து காப்பாற்ற நினைக்கிறார். சரத்குமாருக்கு பழக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், அதனால் ஈஸியாகவே நடித்திருக்கிறார்.

இவர்தான் படத்தின் வில்லனோ என ஆரம்பத்தில் மிரட்டுகிறார் ராமச்சந்திரா ராஜு. ஆனால், சில காட்சிகளிலேயே அவரை போட்டுத் தள்ளிவிடுகிறார் விஜய் கனிஷ்கா. இடைவேளைக்குப் பின் டாக்டர் ஆக கவுதம் மேனன், கொஞ்சம் வில்லத்தனம் செய்கிறார்.

பிளாஷ்பேக் காட்சிகளில் சென்டிமென்ட் மழையில் நனைய வைக்கிறார் ஸ்மிருதி வெங்கட். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் டாக்டராக மனதில் இடம் பிடிக்கிறார்.

சத்யாவின் பின்னணி இசை திரில்லர் காட்சிகளில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

படத்தில் உள்ள சஸ்பென்சை கடைசி வரை காப்பாற்றியிருக்கிறார்கள். பிளாஷ்பேக் காட்சிதான் படத்தில் அழுத்தமாக அமைந்திருக்கிறது. முகமூடி மனிதன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடைவேளை வரை ஆக்கிரமித்துவிட்டது. கிளைமாக்ஸ் முன்பாக சஸ்பென்ஸ் ஒவ்வொன்றாக உடைவது எதிர்பாராததாக அமைந்துள்ளது. அந்த கவனத்தை படத்தின் முன்பாதியில் அழுத்தமான காட்சிகளுடன் வைத்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். சில தேவையற்ற காட்சிகள் முன்பாதியை சோதிக்க வைக்கிறது.

ஹிட் லிஸ்ட் - லிஸ்ட்டில் புதிய ஹீரோ

 

பட குழுவினர்

ஹிட் லிஸ்ட்(2024)

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓