டாப் கன் : மேவ்ரிக்,Top gun maverick
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்கைடோன்ஸ் மீடியா, ஜெர்ரி ப்ரூக்ஹெய்மர் பிலிம்ஸ்
இயக்கம் - ஜோசப் கொசின்ஸ்கி
நடிப்பு - டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கான்னெலி
வெளியான தேதி - 27 மே 2022
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

டோனி ஸ்கார் இயக்கத்தில், டாம் க்ரூஸ், கெல்லி மெக்கில்ஸ், வால் கில்மர் மற்றும் பலர் நடித்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'டாப் கன்'. அப்படத்தின் தொடர்ச்சியாக 36 ஆண்டுகள் கழித்து வந்துள்ள படம் தான் 'டாப் கன் - மேவ்ரிக்'.

ஜோசப் கொசின்ஸ்கி இயக்க, டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கான்னெலி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சுமார் 170 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் உருவாகியுள்ள படம் இது.
டாம் க்ரூஸ் படம் என்றாலே அதிரடியான ஆக்ஷன் நிச்சயம் இருக்கும். இந்தப் படத்தில் இந்த ஆக்ஷன் அனைத்துமே அந்தரத்தில் இருக்கிறது. அதாவது வானில் போர் விமானங்களின் சாகசங்களாக இடம் பெற்றுள்ளது. இப்படத்திற்காக போர் விமானங்களை ஓட்டவும், கேமராக்களை வைத்து படமெடுக்கவும் டாம் க்ரூஸ் உள்ளிட்ட நடிகர்கள் சில மாதங்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். அதற்குப் பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க கடற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கும் விமானியான பீட் மேவ்ரிக் (டாம் க்ரூஸ்), ஒரு அதிரடி தாக்குதல் திட்டத்திற்காக இளம் திறமைசாலிகள் அடங்கிய போர் விமானிகள் குழுவுக்கு பயிற்சி அளிக்க அழைக்கப்படுகிறார். அங்கு அவரது நெருங்கிய நண்பரான மறைந்த கூஸ்--ன் மகன் பிராட்லி பிராட்ஷாவை (மைல்ஸ் டெல்லர்) சந்திக்கிறார். தாக்குதல் திட்டத்திற்கு பிராட்லியையும் சேர்க்க வேண்டுமா, வேண்டாமா என தடுமாறுகிறார் மேவ்ரிக். அதற்குக் காரணம் விமான விபத்தில் இறந்த நண்பன் கூஸ். இந்த சூழ்நிலையில் அவர் தாக்குதல் திட்டத்திற்கு யாரைத் தேர்ந்தெடுத்தார், தாக்குதல் வெற்றிகரமாக நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

30 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஹாலிவுட்டின் அட்டகாசமான ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக டாம் க்ரூஸ் இருக்கிறார் என்பதே அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த வயதிலும் 30 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி ஆக்ஷன்களில் அசத்தினாரோ அதே போலவே இந்தப் படத்திலும் அசத்தி இருக்கிறார். மிகவும் மாடர்ன் ஆன போர் விமானங்களைக் கையாள்வதில் ஒரு பக்கம் ஆக்ஷன் என்றால், மற்றொரு பக்கம் தனது மறைந்த நண்பனின் மகனை இத்திட்டத்தில் ஈடுபடுத்த வேண்டுமோ என்று சென்டிமென்ட்டாக யோசிப்பதில் ஆகட்டும், இன்னொரு பக்கம் முன்னாள் காதலி ஜெனிபர் கான்னெலியுடன் ரொமான்ஸ் செய்வதில் ஆகட்டும் டாம் க்ரூஸின் நடிப்பு 'டாப் நாட்ச்' சொல்ல வைக்கிறது.

டாம் க்ருஸ் நண்பனின் மகனாக மைல்ஸ் டெல்லர், மைல்ஸை சீண்டிப் பார்க்கும் சக விமானியாக கிளென் போவெல், அட்மிரலாக ஜான் ஹாம் ஆகியோரும் இப்படத்தில் குறிப்பிட வேண்டியவர்கள். முதல் பாகத்தில் நடித்த வால் கில்மர் இப்படத்தில் அட்மிரல் ஆக ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.

உலக நாடுகளின் பேச்சுக்களைக் கேட்காத ஒரு நாடு யுரேனியத்தை வைத்து செய்ய நினைக்கும் பரிசோதனைக் கூடத்தை அழிப்பதற்காக டாம் க்ரூஸ் அவர் பயிற்சி தரும் மாணவர்கள் செய்யும் விமானப் பயிற்சிகள் ஒவ்வொன்றும் எப்படி படமாக்கப்பட்டது என்ற ஆச்சரியம் ஒவ்வொரு காட்சியிலும் நமக்குத் தோன்றுகிறது. இப்படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் குறைவாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். பல காட்சிகள் உண்மையான ஆக்ஷன் காட்சிகளாகவே படமாக்கப்பட்டுள்ளது.

இடைவேளை வரை கொஞ்சம் சென்டிமென்ட், வசனக் காட்சிகள், ரொமான்ஸ் என நகரும் படம் இடைவேளைக்குப் பின்னர் பரபரப்பாகி, கிளைமாக்ஸுக்கு முன்பாக சீட்டின் நுனியில் அமர்ந்து ரசிக்க வைக்கிறது. ஹாலிவுட் ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.

டாப் கன் மேவ்ரிக் - சீற்றம்

 

பட குழுவினர்

டாப் கன் : மேவ்ரிக்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓