Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மாத்தியோசி

மாத்தியோசி,
23 மார், 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மாத்தியோசி

தினமலர் விமர்சனம்

ம..ம...ம...ம..மாத்தியோசி என இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை ஒரே பல்லவியையும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பாட்டையும் இசையமைப்பாளரிடம் கேட்டு வாங்கி போட்டிருக்கும் இயக்குனர், மாத்தி மட்டுமல்ல... யோசிக்கவே மறந்திருக்கும் படம் மாத்தியோசி என்றால் மிகையல்ல!

சேரிக்குள் கோவில் தேரை இழுத்து வந்து விட்டு குதூகலிப்பது... காலனி பெண்ணை கல்யாணம் கட்டிக் கொள்வதாக கூறி கற்பழித்து கொலை செய்யும் உயர்சாதி ஊர் பெரிய மனிதரின் மகனை போட்டுத்தள்ளுவது உள்ளிட்ட இன்னும் பல மாத்தியோசி(?) சமாச்சாரங்களை செய்யும் மதுரைப் பக்கத்து தாழ்ந்த சாதி இளைஞர்கள் நால்வர், இதையெல்லாம் உயர்சாதி திமிரோடு தட்டிக் கேட்கும் இன்ஸ்பெக்டரைகடத்தி, அவருக்கு மொட்டை அடித்துவிட்டு சென்னை சிட்டிக்கு வந்து, இதே மாதிரியான திமிர்தண்டி காரியங்களை செய்து பிழைப்பு நடத்துவதும், அவர்களை நம்பி வந்த பெண்ணுக்கு அடைக்கலம் தருவதும், அதையெல்லாம் கண்டும் காணாமலும் போகும் போலீஸ் ஆபீஸருக்காக ரவுடி ஒருவரை போட்டுத் தள்ளுவதும் அதனால் போய்ச் சேருவதும்தான் மாத்தியோசி படத்தி்ன் மொத்த கதையும்!

ஹரீஷ், கோபால், அலெக்ஸ், லோகேஷ் என நான்கு புதுமுகங்கள் பாவம் இப்படி ஒரு கதைக்கு உயிரை கொடுத்து நடித்திருக்கின்றனர். கதாநாயகி ஷம்மு முந்தைய படங்களைக் காட்டிலும் அழகாக வந்து போகிறார். அரவாணி புரோக்கராக ரவிமரியா அட்டகாசம். பொன்வண்ணன், ஜி.எம்.குமார் உள்ளிட்டவர்களும் இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் கஷ்டங்களை சொல்கிறேன் பேர்வழி... என காட்சிக்கு காட்சி அவர்களை தரம் தாழ்த்தி காட்டுவது, ரவுடி - போலீஸ் அதிகாரியை பழிவாங்க அவரது மனைவியை கடத்தி வந்து கட்டிப்போட்டு, அவரது கண் எதிரே தன் சின்ன வீட்டோஐ குரூரமாக சல்லாபம் செய்வது... அதனால் அந்த போலீஸ் அதிகாரியின் மனைவி தூக்கில் தொங்குவது... என நிறையவே(!) மாத்தி யோசித்திருக்கும் இயக்குனர் நந்தா பெரியசாமிக்கு, புதியவர் குரு கல்யாணத்தின் இசையும், விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவும் பெரியபலன்!

மாத்தியோசி : மாத்தியோசிக்க வேண்டியது தயாரிப்பாளர்தான்!

---------------------------

விகடன் விமர்சனம்

தான் தோன்றித் தனமாகத் திரியும் நாலுபேர் மாத்தி யோசிப்பதாக நினைத்து மாட்டிக் கொள்ளும் கதை!

மாங்கா, மாரி, பாண்டி, ஓணான் என்கிற நான்கு பேரும் மதுரைப் பக்கத்துக் கிராமத்தில் காலனி வாழ் சண்டியர்கள். உடும்பு பிடிப்பது, ஓணான் அடிப்பது, திருடுவது எனச் சில்லறை சேட்டைகள் செய்கிறார்கள்.

கிராமத்து ஆதிக்கச் சாதி தலைவரோடு உரசல் வர, ஒரு கொலை, ஒரு பழிவாங்கல் செய்து விட்டு சென்னைக்கு எகிறுகிறார்கள். தன்னை விலைபேசும் "மாமா'' ரவிமரியாவிடம்  இருந்து தப்பி, நால்வரிடம் அடைக்கலம் சேர்கிறார் ஷம்மு. ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் வில்லன்கள் துரத்த ஐந்து பேரும் என்ன ஆனார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

முரட்டு இளைஞர்களின் இருட்டுப் பக்கங்களை பதிவு பண்ண நினைத்திருக்கிறார் யக்குனர் நந்தா பெரியசாமி.  அதற்கு அவர் பிடித்த கதைக் களமும் ஓ.கே. ஆனால், இலக்கு இல்லாமல் அலைபாயும் திரைக்கதைதான் அல்லாட வைக்கிறது.  தேரைத் துடைத்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை, ஆதிக்க சாதியினர் அடித்து விரட்டுகிறார்கள்.  பதிலுக்கு நான்கு பேரும் சேர்ந்து அந்தத் தேரையே சேரிக்குள் இழுத்து வந்து நிறுத்துகிறபோது மட்டும் யோசித்திருக்கிறார் இயக்குனர். மற்ற இடங்களில் "மச்சான்... மாத்தி யோசி'' என்று தீம் பாடல் ஒலிப்பதோடு சரி.

நால்வரில் பளிச் சென்று பார்க்க வைப்பது பாண்டியாக வரும் ஹரீஷ். காதலில் விழுவதும், மோதலில் எழுவதுமாக பாண்டி கேரக்டருக்கு பாந்தமாக இருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் அழுத்தமாக உட்காருகிறார் ரவிமரியா. நடை, உடை, பாவனையில் "ஒரு மாதிரி'' வந்து "வாம்மா செல்லம்'' என்று கெஞ்சுவதும், முகம் மாறி, முஷ்டி முறுக்கி மிஞ்சுவதுமாக அசத்துகிறார்.  அழுக்கு பக்கத்துக்கு அழகு சேர்ப்பது ஷம்முவின் வேலை.  காப்பாற்றினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக நால்வரோடும் சென்னை முழுக்க அலைந்து திரிவது என்ன லாஜிக்கோ?

பாம்பை வைத்து அரிவாள் ரவுடியை மடக்குவது, மரத்தில் இருந்தபடியே லாரியில் குதித்து ரகசிய ட்ரிப் அடிப்பது, அயன் பண்ணுகிற கடையில் அட்ரஸ் கேட்டபடியே  துணிகள் திருடுவது என ஆங்காங்கே சில ஐடியாக்கள் பிடித்திருக்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் சாதிய அடக்குமுறை, ஆதிக்கச் சாதிக்கும் காவல் துறைக்கும் இருக்கும் தொடர்பு இவற்றைக் கையாண்ட விதத்துக்காக இயக்குனரைப் பாராட்டலாம். ஆனால், ஊரில் நடக்கும் எல்லாத் தப்புக்களுக்கும் காரணமாக இருக்கும் நான்கு பேர், கடைசியில் சமூக சமநிலைப் பற்றிப் பேசுவது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? தன்னிடம் திருட முயற்சிப்பவனை விசிட்டிங் கார்டு கொடுத்து "வீட்டுக்கு வரச் சொல்லும்'' பெண்ணை மேல் தட்டுப் பெண்ணாகக் காட்டியிருப்பதும் அழுக்கு சிந்தனை. துப்பாக்கி இருக்கிறது என்பதற்காக நான்கு பேரும் வரிசையாக போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். சென்னைப் போலீஸ் வந்து அள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. மற்றபடி மருந்துக்குக்கூட விசாரணை இல்லை.

படத்தில் சீரியஸான காட்சிகள் சடாரென்று திசை மாறி காமெடியாக முடிகின்றன. காமெடியான காட்சிகள் சீரியஸாக முடிகின்றன. இதனாலேயே "நால்வரும் என்ன ஆவார்களோ?'' என்று நமக்கு வர வேண்டிய பதற்றம் கடைசி வரை மிஸ்ஸிங். கதைக்கு ஏற்ப கிராமங்களின் காடு மேடு, சென்னையின் சந்து பொந்துகளில்
நுழைந்து வெளியேறுகிறது விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா.

அழகான தலைப்பு பிடித்த ரசனையை காட்சிகளில் காட்டியிருக்கலாம். முதலில் உட்கார்ந்து யோசித்து இருக்கலாம். அப்புறம் மாத்தி யோசித்து இருக்கலாம்!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in