கடைசீல பிரியாணி
விமர்சனம்
தயாரிப்பு - ஒய்நாட் எக்ஸ், மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் புரொடக்ஷன்
இயக்கம் - நிஷாந்த் களிதிண்டி
இசை - ஜுடா பால் - நீல் செபாஸ்டியன்
நடிப்பு - வசந்த் செல்வன், ஹக்கீம் ஷாஜகான், விஜய் ராம் மற்றும் பலர்
வெளியான தேதி - 19 நவம்பர் 2021
நேரம் - 1 மணி நேரம் 55 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
திரைப்படச் சுருள்களில் இருந்து டிஜிட்டலுக்கு சினிமா மாறிய பிறகு சினிமா ஆசை உள்ள பலரும் படங்களை எடுக்க வந்துவிட்டார்கள். அவர்களில் பலரும் கோட்டை விடும் விஷயம் கதை.
படத்தை உருவாக்கத்தின் மூலம் மட்டுமே கொண்டு சேர்த்துவிட முடியும் என பலரும் தவறான கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள். உருவாக்கம் எப்படி இருந்தாலும் படத்தின் கதைதான் ஒரு படத்தை ரசிக்க வைக்கும் காரணியாக இருக்கும். இந்த கடைசீல பிரியாணி கதை இல்லாத சம்பவங்களின் தொகுப்பாய் அமைந்துள்ளது.
தங்களது அப்பாவைக் கொன்ற கேரள ரப்பர் எஸ்டேட் ஓனர் ஒருவரை தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மூன்று இளம் வயது மகன்கள் பழிக்குப் பழி வாங்க அவரைக் கொல்லச் செல்கிறார்கள். திட்டமிட்டபடி அவர்கள் கொன்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் இடைவேளை வரை அண்ணன், தம்பிகள் மூவரும் அந்த எஸ்டேட் ஓனரைத் தேடிப் போவதிலேயே படத்தைக் கடத்துகிறார்கள். அவரது எஸ்டேட் வீட்டுக்குள் நகர்ந்த பிறகு அந்த வீட்டையே சுற்றி வருகிறார்கள். அதன்பின் அந்த எஸ்டேட் ஓனர் கொல்லப்படுகிறார். கொலையைச் செய்து விட்டு தப்பி ஓடுபவர்களிடம் விதி விளையாடுகிறது. கடைசி தம்பி மட்டும் தப்பி காட்டுக்குள் செல்கிறார். தன் அப்பாவைக் கொன்றவர்களை போலீஸ் உதவியுடன் ஓனரின் தாதா மகன் பழி வாங்கத் துடிக்கிறார்.
இடைவேளை வரை கொஞ்சம் கஷ்டப்பட்டு பொறுமை காத்தால் இடைவேளைக்குப் பின் கொஞ்சம் சுவாரசியமான திரைக்கதையுடன் படம் நகர்கிறது. சில காட்சிகளில் கைதட்டல் வாங்கும் அளவிற்கும் ரசிக்க வைக்கிறார்கள்.
படத்தில் அண்ணன் தம்பிகளாக வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் நடித்துள்ளார்கள். இவர்களின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் வசந்த் செல்வம் இடைவேளை வரை தன்னுடைய பழி வாங்கல் உணர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். தினேஷ் மணிக்கு அதிக வேலையில்லை. காமிராவும் அவர் பக்கம் நகரவே இல்லை. இடைவேளைக்குப் பின் கடைசி தம்பி விஜய் ராம் தான் படத்தின் நாயகன். அப்பாவியானவர், ஓனரின் தாதா மகன் ஹக்கீம் ஷாஜகானிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் சுவாரசியம்.
ஹக்கீம் ஷாஜகான் தனது தெனாவெட்டான நடிப்பால் இடைவேளைக்குப் பின் அவரை கவனிக்க வைக்கிறார். அச்சு அசல் மலையாள முகம். போலீசை அவர் டீல் செய்யும் விதமெல்லாம் வேற லெவல். கேரள போலீசை இந்த அளவிற்கு மட்டம் தட்டுவதெல்லாம் ரொம்ப ஓவர்.
படத்தில் நடித்திருப்பவர்களை இதற்கு முன் தமிழ்ப் படங்களில் பார்த்திருப்போமோ என்பது சந்தேகம் தான். மூத்த அண்ணன் வசந்த் செல்வத்தை சில படங்களில் பார்த்த ஞாபகம்.
கதை முழுவதும் கேரளாவிலேயே நடப்பதாலும், வில்லன் ஹக்கீம் மலையாளமே பேசுவதாலும் ஒரு மலையாளப் படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது.
அந்த எஸ்டேட், காடு லொகேஷன் அவற்றைப் படமாக்கிய விதம் சிறப்பு. பிளாக் காமெடி என சொல்லிக் கொண்டு சில அபத்தங்களை, அசுத்தங்களை இந்தப் படத்திலும் செய்திருக்கிறார்கள்.
சிட்டி ரசிகர்களைத் தாண்டி இந்தப் படம் மற்ற ஊர் ரசிகர்களுக்குச் சென்று சேர வாய்ப்ப்ல்லை.
கடைசீல பிரியாணி - சுவை குறைவு
கடைசீல பிரியாணி தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கடைசீல பிரியாணி
- இயக்குனர்