சூ மந்திரக்காளி,Choo Mandhirakaali
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - அன்னம் மீடியாஸ்
இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை
இசை - சதீஷ் ரகுநாதன், நவிப் முருகன்
நடிப்பு - கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி
வெளியான தேதி - 24 செப்டம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

முன்னணி நடிகர்களை நம்பாமல் தங்களது கதைகளை நம்பி, அறிமுக நடிகர்களாக இருந்தாலும் பரவாயில்லை சொல்ல வரும் விஷயத்தை சரியாகச் சொல்ல முயற்சிப்போம் என சிலர் படங்களைக் கொடுத்து கவனிக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் வந்துள்ள படம்தான் இந்த சூ மந்திரக்காளி.

ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர் தேவ் என அறிமுகக் கலைஞர்களின் படைப்புதான் இந்தப் படம். படத்தை களவாணி இயக்குனர் சற்குணம் வழங்கியிருக்கிறார் என்ற காரணத்திற்காக படத்தைப் பார்த்தால் யாரும் நம்மை ஏமாற்றவில்லை. ஒரு சுவாரசியமான கதையை ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார்கள்.

பங்காளியூர் என்ற கிராமத்தில் முழுவதும் பங்காளிகளாகவே வசிக்கிறார்கள். ஒருவர் நன்றாக இருந்தால் அது மற்றவர்களுக்குப் பிடிக்காது. அவரது வளர்ச்சியைத் தடுக்க சூனியம் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் அந்த ஊர் மக்கள். அப்படிப்பட்ட ஊர் மக்களை திருத்த வேண்டும், மாற்ற வேண்டும் என நினைக்கிறார் கார்த்திகேயன் வேலு. அதற்காக பில்லி, சூனியம் வைப்பதில் சிறந்த ஒருவரைக் கொண்டு வந்து தனது ஊரை மாற்ற நினைக்கிறார். அதற்காக கொல்லிமலைப் பகுதியில் சூனியம் வைப்பர்கள் மட்டுமே வசிக்கும் சிங்கப்பூர் என்ற கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு பெண் சூனியக்காரியான படத்தின் கதாநாயகி சஞ்னா புர்லியைச் சந்திக்கிறார். அவரைக் காதலித்து தனது ஊருக்கு அழைத்து வர நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இப்படியெல்லாம் கூட ஒரு கிராமம் இருக்குமா என பங்காளியூர் கிராமத்தையும், சிங்கப்பூர் மலைக் கிராமத்தையும் மிதமிஞ்சிய கற்பனையுடன் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஈஸ்வர். ஆனால், அதுவே சுவாரசியமாக இருக்கிறது. பங்காளியூர் மக்கள் கலகலப்பாகவும், சிங்கப்பூர் மக்கள் வித்தைக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

கதைக்குப் பொருத்தமான கதையின் நாயகனாக கார்த்திகேயன் வேலு. கிராமத்தில் நாம் பார்க்கும் சராசரி இளைஞனாக நடித்திருக்கிறார். தனது கிராமத்தினர் இப்படி போட்டி, பொறாமையுடன் சண்டை போட்டுக் கொள்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் என்னென்னமோ செய்கிறார்.

நண்பனின் நல்லெண்ணம் நிறைவேறுவதற்காக அவரது மனைவி போல பெண் வேடமிட்டு சிங்கப்பூர் மலைக் கிராமத்திற்கு கூடச் செல்பவராக கிஷோர் தேவ். படம் முழுவதும் பெண் வேடத்திலேயே வருகிறார்.

சிங்கப்பூர் கிராமத்திலேயே சக்தி வாய்ந்த சூனியக்காரியாக கதாநாயகி சஞ்சனா புர்லி. பார்க்க பொம்மை போல அழகாக இருக்கிறார். அவர் நடித்திருக்கிறாரோ இல்லையோ அவருடைய கண்கள் நன்றாக வசீகரிக்கின்றன. அது அவரது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவன் இவ்வளவு அழகான பெண்ணைக் காதலிப்பதா என பங்காளியூர் பங்காளிகள் இவர்களது காதலுக்காகப் பொறாமைப்பட்டுச் செய்யும் விஷயங்கள் அனைத்துமே சுவாரசியமானவை.

சிங்கப்பூர் கிராமத்து மக்கள் சிலரும், பங்காளியூர் கிராமத்து மக்கள் சிலருமாக நடித்திருப்பவர்கள் அவரவர் கதாபாத்திரங்களில் சிரிக்க வைக்கிறார்கள். நம் கூட இருப்பவர்கள் நன்றாக இருந்தாலே பலருக்குப் பிடிக்காது. ஆனால், வெளியில் பிடித்தவர்கள் போல நடிப்பார்கள். அப்படியான சில பொறாமை பிடித்த கதாபாத்திரங்களை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள், எல்லாமே நிஜம்தான்.

படத்தில் பாடல்களும், மேக்கிங்கும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்திருந்தால் அது இந்தப் படத்திற்கு பெரும் உதவியாக இருந்திருக்கும். ஏதாவது மந்திரம் போட்டாவது அதை சிறப்பாக செய்ய வைத்திருக்கலாம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று யோசிக்க வைக்கும் கற்பனையை மிஞ்சிய கதை. அதனால், படத்தில் லாஜிக் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

எதைப் பற்றியும் யோசிக்காமல் கலகலப்பாக ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்தால் இப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.

சூ...மந்திரக்காளி - கெட்ட எண்ணங்களை அழிக்க...

 

பட குழுவினர்

சூ மந்திரக்காளி

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓