கள (மலையாளம்),Kala
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு ; டொவினோ தாமஸ் புரொடக்சன்ஸ்
டைரக்சன் ; ரோஹித் வி.எஸ்
ஒளிப்பதிவு ; அகில் ஜார்ஜ்
நடிப்பு ; டொவினோ தாமஸ், திவ்யா பிள்ளை, லால், சுமேஷ் மூர் மற்றும் பலர்
வெளியான தேதி ; 25 மார்ச் 2021
நேரம் ; 2 மணி 10 நிமிடங்கள்
ரேட்டிங் ; 3.25/5

(கள ; பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை என்று அர்த்தம்)

தந்தை, மனைவி, மகன் என சிம்பிளான ஆனால் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் டொவினோ தாமஸ். பிசினஸ் செய்கிறேன் என பணத்தை கோட்டை விட்டதால், தந்தைக்கு அடங்கி தோட்ட பணிகளை பார்த்து வருகிறார். ஒருநாள் தந்தை, மனைவி, மகன் வெளியே சென்றிருக்கும் சமயத்தில், தோட்ட வேலைக்காக வரும் வேலையாட்களில் ஒருவரான சுமேஷ் மூர், டொவினோ தாமஸை எதிர்பாராத விதமாக தாக்க முயற்சிக்கிறார்..

ஆரம்பத்தில் தன்னை தாக்கும் நபர் யார் என்றே தெரியாமல் குழம்பும் டொவினோ தாமஸுக்கு, ஒருகட்டத்தில், தான் வேட்டைக்கு போன சமயத்தில் வைத்த வெடியில் நாய் ஒன்று சிக்கி இறந்ததும் அதன் சொந்தக்காரரான உமேஷ் மூர் என்பவர் தான், தன்னை பழிவாங்கவும் பதிலுக்கு தனது நாயை கொல்லவும் தேடி வந்திருப்பது தெரிகிறது. அந்த முயற்சியை தடுக்க முயலும் டொவினோ தாமஸ், பதிலுக்கு தானும் திருப்பித்தாக்க முயற்சிக்கிறார்.. இவர்களுக்கு இடையேயான இந்த சண்டையில் யார் ஜெயித்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.

கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ரொம்ப சிம்பிளான கதையாக இருக்கிறதே, ஒரு நாய்க்காக சண்டையா, இதை எப்படி 2 மணி 10 நிமிடங்கள் ஓடும் அளவுக்கு படமாக எடுத்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா..? ஹீரோவும் அவரது எதிரியும் மோதும் சண்டை காட்சி இருக்கிறதே, அது ஐந்து நிமிடம் பத்து நிமிடம் அல்ல, கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரம், அதாவது இடைவேளைக்கு முன்பு ஆரம்பித்து, படத்தின் என்ட் கார்டு போடும்வரை, நீள்கிறது. அந்தவகையில் மலையாள சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில், ஏன் உலக சினிமாவிலேயே இவ்வளவு நீளமான சண்டைக்காட்சி இடம்பெற்ற படம் இதுவாகத்தான் இருக்கும்.

இந்தக்கதை பிடித்துப்போனதால், தானே தயாரிப்பாளராக மாறி இந்தப்படத்தை தயாரித்து நடித்துள்ளார் டொவினோ தாமஸ். சும்மா சொல்லக்கூடாது, ரத்தமும் சதையுமாக எதிரியுடன் டொவினோ தாமஸ் மோதும் சண்டைக்காட்சிகளில், இந்த மனிதர் எதற்காக இப்படி ஒரு விபரீத முயற்சியில் இறங்கினார் என நினைக்கும் அளவுக்கு அவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார்.

அவர் மட்டுமா, ஏதோ சாதாரண தோட்ட வேலைக்காரன் போல வரும் சுமேஷ் மூரிடமும் இவ்வளவு மூர்க்கத்தனம் இருக்கும் என யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு டொவினோ தாமஸுக்கு ஈடு கொடுத்து சண்டைகாட்சிகளில் மிரட்டி இருக்கிறார். ஹீரோவை விட இவரது கையே க்ளைமாக்ஸ் வரை ஓங்கியிருப்பதாக சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருப்பதும், அதற்கு ஹீரோ டொவினோ தாமசே பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டிருப்பதும் ஆச்சர்யம் தான்.

சண்டை ஆரம்பித்த பத்து நிமிடம் கழித்து, என்னடா இது, இப்படி நீண்டுகொண்டே போகிறதே என ஒரு அலுப்பு ஏற்பட்டாலும், அடுத்த சில நிமிடங்களில், இது எதுவரை தான் போகிறது பார்ப்போமே என்கிற ஆர்வம் படம் பார்ப்பவர்களை தொற்றிக்கொள்கிறது. ஆனால் அந்த சண்டை கிட்டத்த ஒன்றேகால் மணி நேரம் நீளும் என யாராலும் யூகிக்கவே முடியாது. ஆனாலும் அவ்வளவு நேரம் நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு. அதற்கு திணை நிற்கிறது அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு.

இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது தான், வயிற்றில் எக்குத்தப்பாக அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று, சில வாரங்கள் கழித்து மீண்டு(ம்) வந்து இந்தப்படத்தில் நடித்தார் டொவினோ தாமஸ். அது ஏன் என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது.

மகனும் மருமகளும் பயம் கலந்த மரியாதையுடன் அணுகும் அளவுக்கு டொவினோ தாமஸின் கண்டிப்பு மிகுந்த தந்தையாக லால் வழக்கம்போல சிறப்பான நடிப்பு. டொவினோ தாமசின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா பிள்ளை, அச்சு அசலாக நடிகை விமலா ராமனின் ஜெராக்ஸ் காப்பி போலவே இருக்கிறார். நடிப்பும் யதார்த்தம்.

இயக்குனர் வி.எஸ்.ரோஹித் வளர்ப்பு நாய்க்காக பழிவாங்குதல் என்கிற மனிதர்களின் ஈகோ மோதலை, இன்னொரு கோணத்தில் யோசித்து, மற்ற யாரும் எடுக்க தயங்கும் முழு நீள சண்டைப்படத்தை எடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். தொடர் சண்டைக்காட்சி என்பதால் பல இடங்களில் லாஜிக் இடிக்கவே செய்கிறது. குறிப்பாக, உயிர்போகும் அளவுக்கு இருவரும் தாக்கி கொள்வதும், மீண்டும் வீறுகொண்டு எழுந்து வருவதும் சரியான சினிமாத்தனம். அதேசமயம் கிளைமாக்ஸில் இருவருக்குமான நியாயத்தை சரியாக செட்டில் செய்து டச்சிங் ஆக படத்தை முடித்திருப்பது சிறப்பு.

ஆக்சன் பட பிரியர்களுக்கு, குறிப்பாக ரியலிஸ்டிக்கான சண்டை காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை இந்தப்படம் தரும்.

கள ; நான் ஸ்டாப் ஆக்சன்

 

பட குழுவினர்

கள (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓