காவல்துறை உங்கள் நண்பன்,kavalthurai ungal nanban

காவல்துறை உங்கள் நண்பன் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி
தயாரிப்பு - பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், வைட் மூன் டாக்கீஸ்
இயக்கம் - ஆர்டிஎம்
இசை - ஆதித்யா - சூர்யா
வெளியான தேதி - 27 நவம்பர் 2020
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் களங்களில் ஒன்று காவல்துறை. வெளிவரும் படங்களில் ஒரு காட்சியாவது காவல் நிலையத்தில் இல்லாமல் இருக்காது.

காவல்துறையைப் பெருமைப்படுத்தி பல படங்கள் வந்திருக்கின்றன. அதே சமயம், காவல்துறையை சிறுமைப்படுத்தியும் சில படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இந்தப் படம் காவல்துறையை களங்கப்படுத்தி வந்திருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் எத்தனையோ காவல்துறையினர் மக்களுக்காக சேவை ஆற்றி தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். இந்த சமயத்தில் இப்படி ஒரு படம் வருவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றது.

காவல்துறை, அரசுத்துறை ஆகியவற்றைப் பற்றிய படங்கள் என்றால் அதில் உண்மையும், யதார்த்தமும் இருக்க வேண்டும். கற்பனையான காட்சிகளை வைக்க முடியாது. கமர்ஷியல் படமாகப் போய்விட்டால் யாரும் கேள்வி கேட்டார்கள், லாஜிக் பார்க்க மாட்டார்கள். இந்தப் படத்தை ஒரு யதார்த்தப் படம் போல ஆரம்பித்துவிட்டு, பல இடங்களில் முக்கியமான லாஜிக்குகளை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கோட்டை விட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் வேண்டுமென்றே செய்யப்பட்டது போன்றே இருக்கிறது. இயக்குனர் ஆர்எம்டி-க்கு காவல்துறை மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை.

உணவு டெலிவரி செய்பவராக இருக்கிறார் சுரேஷ் ரவி. மனைவி ரவீனாவை எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டவர். ஒரு நாள் இரவு வெளியில் சென்றுவிட்டு வரும் போது வாகன பரிசோதனையின் போது இன்ஸ்பெக்டரான மைம் கோபியுடன் கோபத்தில் வாக்குவாதம் செய்கிறார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று உட்கார வைக்கிறார் இன்ஸ்பெக்டர் மைம் கோபி. மறுநாள் சுரேஷ் ரவியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தொடர்ந்து அலைய வைக்கிறார். ஒரு கட்டத்தில் சுரேஷ்ரவியை கட்டி வைத்து அடிஅடியென்று அடிக்கிறார். அந்த வீடியோ டிவிக்களிலும் ஒளிபரப்பாகிறது. அவமானம் தாங்காத சுரேஷ் ரவி வெகுண்டெழுகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு சராசரி வாழ்க்கை வாழும் இளைஞனாக சுரேஷ் ரவி. அவருடைய கதாபாத்திரம் இதுதான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால், சில காட்சிகளில் அவரை கோபக்காரனாகக் காட்டிவிட்டு, அதன்பின் அவரை எந்தக் காட்சியிலுமே வெகுண்டெழாமல் அடக்கி வைத்துவிட்டார் இயக்குனர். ஆரம்பத்தில் இன்ஸ்பெக்டர் மைம் கோபியைப் பார்த்து ஆவேசமாகப் பேசும் சுரேஷ் ரவியிடம் அந்த ஆவேசம் பின்னர் காணாமல் போய்விடுகிறது. எந்த ஒரு காட்சியிலாவது பழிக்குப் பழி வாங்குவார் என்று எதிர்பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றமே.

அப்பாவி (?) கணவன் சுரேஷ் ரவிக்கு ஒரு அப்பாவி மனைவி ரவீனா. ஐ.டி கம்பெனியில் வேலை செய்பவர் போல இவரைக் காட்டுகிறார்கள். ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு அடிக்கடி தனியாகத்தான் செல்கிறார். முதலிலேயே ஒரு வக்கீலுடன் செல்ல வேண்டும் என்ற அடிப்படை விவரம் கூடத் தெரியாத அப்பாவியாக இருக்கிறார். பின்னர் அவர் அழைத்துச் செல்லும் வக்கீலும் அதன்பின் வராமலேயே போய்விடுகிறார். திரும்பவும் அவரை அழைத்துப் போக மாட்டார்களா அல்லது ஆலோசனை கேட்க மாட்டார்களா ?.

இன்ஸ்பெக்டராக மைம் கோபி. ஏற்கெனவே இவர் மீது துறை ரீதியாக சில புகார்கள் இருக்கிறதாம். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னை எதிர்ப்பவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வாராம். அவரைப் பார்த்து அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ. முதல் சாதாரண காவலர் வரை அப்படி பயப்படுகிறார்கள். அவரே சுரேஷ் ரவியை அடிப்பதை வீடியோ எடுப்பாராம், அவரே செய்தி சேனலுக்கும் அனுப்புவாராம், பிறகு அவரே நேரலையில் வந்து அந்த வீடியோ பற்றி பேசுவாராம்.

ஒரு விசாரணைக் கைதியை போலீசார் கொடுமைப்படுத்துவது டிவியில் ஒளிபரப்பாவதை ஒரு கமிஷனர், ஒரு ஐஜி, ஒரு எம்எல்ஏ, ஒரு அமைச்சர், ஒரு எதிர்க்கட்சித் தலைவர், அட ஒரு வார்டு உறுப்பினர் கூடவா பார்த்திருக்க மாட்டார். அவர் மீது துறை ரீதியாகக் கூட எதுவுமே கேட்க மாட்டார்களா, தொடர்ந்து இன்ஸ்பெக்டராக பதவியில் இருக்கிறார் மைம் கோபி. அதோடு, சீருடை அணியாத சில காவலர்கள் வந்து லாக்கப்பில் இருந்து சுரேஷ் ரவியை எங்கோ தூக்கிச் செல்கிறார்கள்.

இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் ஒரு சாத்தான்குளம் விவகாரத்துக்கே எவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது என்பதை இன்னும் நாம் மறந்திருக்க மாட்டோமே.

ஒரு ஸ்டேஷனில் ஒரு நல்லவர் கூடவா இருக்க மாட்டார் எனப் பார்த்தால் சூப்பர்குட் சுப்பிரமணியை ஒரு நல்ல காவலராகக் காட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால், அவரும் கடைசியில் கைவிரித்துவிட்டுப் போய்விடுகிறார்.

ஆதித்யா, சூர்யா பின்னணி இசை, விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு படத்தின் கருவிக்கேற்ப காட்சிகளின் தன்மையைப் புரிந்து கொண்டு பக்கபலமாக அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை உங்கள் நண்பன் எனப் பெயர் வைத்துவிட்டு தீவிர எதிரி ஆகவே காட்டியிருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும் நேர்மையான, பொறுப்பான காவல்துறையினருக்கு கடும் கோபம் வர வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு படத்தில் நேர்மையில்லை.

காவல்துறை உங்கள் நண்பன் - களங்கம்

 

பட குழுவினர்

காவல்துறை உங்கள் நண்பன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓