கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் (மலையாளம்),Kilometers and Kilometers
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : டொவினோ தாமஸ், இண்டியா ஜார்விஸ், சித்தார்த் சிவா, ஜோஜூ ஜார்ஜ், பஷில் ஜோசப், மாலா பார்வதி மற்றும் பலர்
ஒளிப்பதிவு : சினு சித்தார்த்
இசை : சூரஜ் எஸ்.குறூப் / சுஷின் ஷியாம்
டைரக்சன் : ஜியோ பேபி
ரேட்டிங் : 2.5 / 5

கடந்த மார்ச் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்த படம் இது.. தற்போது எல்லோரும் ஓடிடியில் தங்களது படத்தை ரிலீஸ் செய்துவரும் நிலையில், இந்தபடம் நேரடியாக ஆசியாநெட் டிவி சேனலிலேயே வெளியாகியுள்ளது.

மெக்கானிக், பெயிண்டர் என கிடைத்த வேலையை செய்து, அம்மாவையும் தங்கையயும் காப்பாற்றும் டொவினோ தாமஸுக்கு, தனது பைக் தான் உயிர். இறந்துபோன தனது தந்தையையே அந்த பைக் வடிவில் பார்க்கிறார். வீட்டுக்கடனை அடைக்க சொல்லி வங்கி நெருக்கடி கொடுக்க, வேறு வழியின்றி பைக்கை விற்றாவது ஓரளவு கடனை அடைத்து பிரச்சனையை தள்ளிப்போட முடிவெடுக்கிறார் டொவினோ.

அந்த சமயத்தில் டொவினோவின் நண்பர் ஜோஜூ ஜார்ஜுவின் ரிசார்ட்டில் வந்து தங்கும் அமெரிக்க பெண்ணான இண்டியா ஜார்விஸ், பைக்கிலேயே இந்தியா முழுதும் சுற்றிக்காட்டும் ஒரு நபர் தேவைப்படுவதாக கூறுகிறார். அவர் கொடுக்கும் கணிசமான அட்வான்ஸ் தொகையை வாங்கிக்கொண்டு, பைக் விற்கும் யோசனையை தள்ளிவைத்து விட்டு, அவருடன் நாடு சுற்ற கிளம்புகிறார் டொவினோ.

ஆரம்ப நாட்களில் இருவருக்குமான பாஷை தகராறு, இண்டியா ஜார்விஸின் நடவடிக்கைகளால் கடுப்பு என டொவினோ, வேண்டா வெறுப்பாக தனது பணியை செய்கிறார். ஒருகட்டத்தில் ராஜஸ்தானில் பயணிக்கும்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரின் உடைமைகள் திருடு போகின்றன. அங்கிருக்கும் கேரளாவை சேர்ந்த கூலி தொழிலாளி சித்தார்த் சிவா, இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்கிறார்.

வெளிநாட்டு கலாச்சாரப்படி உறவுகளை விட்டு, தள்ளியே நின்று வாழ பழகியிருந்த இண்டியா ஜார்விஸ், இந்த சமயத்தில் உறவுகளின் மதிப்பை உணர்கிறார். இந்த சமயத்தில் எதிர்பாராமல் விபத்தில் சிக்கும் இண்டியா ஜார்விஸுக்கு, தனது பைக்கை விற்று சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கு புதிய பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்து அவரது நாட்டுக்கும் அனுப்பி வைக்கிறார். டொவினோ, அப்போதுதான், இண்டியா ஜார்விஸ் மீது தான் காதலில் விழுந்திருப்பதை உணர்கிறார் டொவினோ.. ஆசைப்பட்ட பைக்கும், ஆசைப்பட்ட காதலியும் பிரிந்துபோன நிலையில் டொவினோவின் வாழ்க்கை எந்தவிதமாக திசை மாறியது, ஏதேனும் அதிசயம், அற்புதம் நடந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் பயணம் சார்ந்தவை என்பதாலோ என்னவோ, படம் பார்க்கும் நமக்கு எந்தவித அலுப்பும் ஏற்படவில்லை.. ஒரு சராசரி குடும்பத்து இளைஞனின் கஷ்டங்கள், ஆசாபாசங்களை ஒவ்வொரு காட்சியிலும் அழகாக வெளிப்படுத்துகிறார் டொவினோ, அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு இண்டியா ஜார்விஸை அவர் சமாளிப்பது நல்ல காமெடி. கிளைமாக்சில் காதலியை பிரியும் காட்சியில் நம் கண்களையும் கலங்க வைத்து விடுகிறார் டொவினோ.

வெளிநாட்டு பெண் என்றாலும் இடைவேளை வரை ஒரு வழக்கமான வெளிநாட்டு டூரிஸ்ட்டாகவும், இடைவேளைக்கு பின் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்படும் பெண்ணாகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இண்டியா ஜார்விஸ். நியூயார்க்கில் பிறந்த இவரின் பெயர் கூட, இண்டியா ஜார்விஸ் என்பது ஆச்சர்யம் தான்.

படத்தின் மிக முக்கியமான இன்னொரு பாத்திரம் வடமாநிலத்தில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் சித்தார்த் சிவா.. இவர் தேசிய விருதுபெற்ற இயக்குனரும் கூட... காமெடி, சென்டிமென்ட் என இரண்டையும் கலந்து நம்மை அசத்துகிறார். முகம் தெரியாத நபர்களுக்கு உதவிசெய்ய, கர்ப்பிணி மனைவியின் நகையை அடமானம் வைக்கும் அளவுக்கு செல்லும் இவர், மனிதநேயத்தின் பிரதிபலிப்பாகவே தெரிகிறார். ஆரம்பகட்ட கிராமத்து காட்சிகளில் காமெடியில் கலகலப்பூட்டும் வேலையை பஷில் ஜோசப்பும், ஜோஜு ஜார்ஜும் செவ்வனே செய்துள்ளனர்.

பயணக்கதை என்றாலே வழக்கமாக ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.. அதற்கு பக்கபலமாக கூடவே பயணிக்கிறது சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு.. ராஜஸ்தான் மாநிலத்து பைக் கோவிலும், அதற்கு பின்னணியில் சொல்லப்படும் கதையும் சுவாரஸ்யம். கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க முடிந்தாலும், நம் மனதிற்கு சந்தோஷம் தரும் விதமாகவே இருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியே

மொத்தத்தில் இந்த கொரோனா ஊரடங்கில் கூட நாம் ஊர் சுற்றிய அனுபவத்தை தருகிறது இந்தப்படம்.

 

பட குழுவினர்

கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓