ஒன்பது குழி சம்பத்,onbathu kuzhi sampath

ஒன்பது குழி சம்பத் - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பாலாஜி மகாராஜா, நிகிலா விமல்
தயாரிப்பு - 80-20 பிக்சர்ஸ்
இயக்கம் - ஜா. ரகுபதி
இசை - வி.ஏ. சார்லி
வெளியான தேதி - 14 ஆகஸ்ட் 2020 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

காதல் படங்கள் என்றாலே அதில் ஏதோ ஒரு விஷயம் மட்டும் உருக வைக்கும் அளவிற்கு இருந்தால் போதும் என சில இயக்குனர்கள் நினைக்கிறார்கள். அந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை. அப்படியான ஒரு படம்தான் இந்த 'ஒன்பது குழி சம்பத்'.

கிராமத்தில் அம்மாவிடம் கூட பல வருடங்களாகப் பேசாமல் பொறுப்பில்லாமல் 'ஒன்பது குழி' கோலி விளையாட்டை விளையாடிக் கொண்டுத் திரிபவர் பாலாஜி மகாராஜா. அதே ஊரில் இருக்கும் கல்லூரி மாணவி நிகிலா விமல் மீது ஒரு நாளில் திடீரெனக் காதல் கொள்கிறார். நிகிலா வீட்டிற்கே சென்று பெண் கேட்கிறார் பாலாஜி. நிகிலா குடும்பத்தினர் அதற்கு மறுக்க தனக்கு பாலாஜி மீது காதல் இல்லை என்பதை ஊர்த்திருவிழாவில் பாலாஜியை துடைப்பத்தால் அடித்துவிடுகிறார் நிகிலா. அதன்பின் சினிமா வழக்கப்படி பாலாஜியின் காதல் தீவிரத்தை உணர்ந்து நிகிலா அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஊதாரித்தனத்தை விட்டு வெளியூருக்கு வேலைக்குச் சென்று சம்பாதித்து பின் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் பாலாஜி. இரண்டு வருடம் கழித்து ஊருக்குத் திரும்பி வருபவரிடம் நிகிலா எங்கே என்று கேட்டு அதிர்ச்சி தருகிறார்கள் நிகிலா குடும்பத்தினர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் சம்பத் ஆக பாலாஜி மகாராஜா. சினிமாத்தனமில்லாத முகம். அந்தக் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். கிராமத்தில் ஊதாரித்தனமாக சுற்றித் திரியும் இளைஞன் ஒருவன் எப்படி இருப்பான் என்பதை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

நாயகி வசந்தி ஆக நிகிலா விமல். இதுதான் இவருக்கு அறிமுகப்படமாம். நடிப்பில் தடுமாறுகிறார். அவரே டப்பிங் பேசியிருப்பார் போலிருக்கிறது, பேச்சில் மலையாள வாடை அடிக்கிறது.

பாலாஜியின் நண்பனாக அப்புக்குட்டி, பாலாஜியினி அம்மாவாக நடித்திருப்பவர் ஆகியோர் அப்படியே அச்சு அசல் கிராமத்து மனிதர்களாகவே தெரிகிறார்கள். எந்தக் காட்சியிலும் நடிக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

திருச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்தக் கிராமத்துப் பின்னணியை மிக இயல்பாக தன் ஒளிப்பதிவின் மூலம் படத்துடன் ஒன்ற வைக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார். கிளைமாக்சுக்கு சற்று முன்பு அந்த முக்கியமான திருப்புமுனைக் காட்சிகளில் படத்தொகுப்பாளர் தீனா அவரைப் பற்றிப் பேச வைத்திருக்கிறார்.

வி.ஏ.சார்லியின் பின்னணி இசை எங்கெங்கு தேவையோ அந்த இடங்களில் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறது.

இயக்குனர் ரகுபதி கதைக்களம் நடக்கும் கிராமம், முக்கிய கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஆகியவற்றில் காட்டிய அக்கறையை திரைக்கதையிலும் இன்னும் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்.

பாலாஜி, நிகிலா இடையில் காதல் மலர்வதற்கான காட்சி மிக அழுத்தமாகப் பதியவில்லை. அது சரியாக இருந்திருந்தால் அது அடுத்தடுத்து வரும் காட்சிகளுக்கும் படத்திற்கும் பலத்தைக் கொடுத்திருக்கும். நாயகி சம்பந்தப்பட்ட அந்த ஒரே ஒரு 'டிவிஸ்ட்டைத்' தவிர வேறு எதுவும் திரைக்கதையில் அழுத்தமாக சொல்லப்படவில்லை.

ஒன்பது குழி சம்பத் - ஆழம் குறைவு

 

பட குழுவினர்

ஒன்பது குழி சம்பத்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓