2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விவேக், சார்லி, தேவ் மற்றும் பலர்
தயாரிப்பு - இன்டஸ் கிரியேஷன்ஸ்
இயக்கம் - விவேக் இளங்கோவன்
இசை - ராம்கோபால்
வெளியான தேதி - 19 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கடத்தல், கொலை, விசாரணை என த்ரில்லர் வகைப்படங்கள் தமிழ் சினிமாவில் வருவது குறைவுதான். அப்படியே வந்தாலும் அவற்றில் பல லாஜிக் மீறல்கள் இருக்கும்.

த்ரில்லர் படங்களில் ரசிகர்களை இரண்டரை மணி நேரமும் நெளியாமல் உட்கார வைத்து ரசிக்க வைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இந்தப் படத்தில் முன்னணி ஹீரோ இல்லாமலேயே அதைச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவன்.

அமெரிக்க வாழ் தமிழர்களின் சினிமா ஆர்வத்தால் உருவான படம் இது. இங்கிருந்து நடிகர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து அங்கும் ஒரு தமிழ்ப் பட உருவாக்கத்தை சிறப்பாகச் செய்திருக்கும் அவர்களது முயற்சிக்கு முதலில் வாழ்த்துகள்.

முன்னணி ஹீரோவை நடிக்க வைக்காமல் கதையின் நாயகனாக ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கி, அதில் நகைச்சுவை நடிகர் விவேக்கை நடிக்க வைத்து தங்களது வித்தியாசமான முயற்சியைப் பாராட்ட வைக்கிறார்கள். அவர்களது உருவாக்கத்தில் முதல் திரைப்படம்தான் என்றாலும் மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக், அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சியாட்டில் நகரில் வசிக்கும் தன் மகன் தேவ்-வைப் பார்க்க அமெரிக்கா செல்கிறார். அங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண் திடீரென காணாமல் போகிறார். அது பற்றி தெரிய வர, தன்னிச்சையாக அந்த வழக்கைப் பற்றி விசாரிக்க களத்தில் இறங்குகிறார் விவேக். அடுத்து ஒரு இளைஞன் காணாமல் போகிறான். அதன்பின் விவேக்கின் மகன் தேவ்வும் காணாமல் போகிறார். தீவிர விசாரணையில் இறங்கும் விவேக் குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை.

வழக்கமான ஹீரோக்கள் நடித்திருந்தால் இது ஹீரோயிசப் படமாக மாறியிருக்கும். ஆனால், அவர்களுக்குப் பதிலாக விவேக்கை நடிக்க வைத்திருப்பதால் இந்த 'வெள்ளைப் பூக்கள்' படத்திற்கு வேறு ஒரு நிறம் கிடைத்திருக்கிறது. தன் அனுபவ நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விவேக். வழக்கமான அவருடைய நடிப்பும் சாயலும் படத்தில் எங்குமே இல்லை. விவேக் இதுவரை கதாநாயகனாக நடித்த ஒரு சில படங்களில் இந்தப் படமும், கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கிறது. அமெரிக்க போலீசை விடவும், அவர்களுக்குத் தெரியாமலும் விவேக்கின் விசாரணை வேகமாக நகர்வது ஆச்சரியமாகவும், சினிமாத்தனமாகவும் இருக்கிறது. குற்றம் நடைபெற்ற இடங்களில் இப்படி போலீஸ் அல்லாதவர்கள் எளிதில் செல்ல முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

விவேக்கின் அமெரிக்க நண்பராக படம் முழுவதும் அவர் கூடவே வருகிறார் சார்லி. அவ்வப்போது கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது படத்தில் கொஞ்சம் அலுப்பைத் தருகிறது.

விவேக்கின் மகனாக தேவ், அமெரிக்க மருமகளாக பைஜ் ஹென்டர்சன். சார்லியின் மகளாக பூஜா தேவரியா. ஒரு கட்டத்தில் சார்லியின் மகளான பூஜா தான் குற்றவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகம் நமக்குள் வர, நாம் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் இவர்தான் குற்றவாளி என காட்டுவது திரைக்கதையில் எதிர்பாராத திருப்பம். அதற்குக் குழப்பம் வராமல் இருக்க படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒரு பிளாஷ்பேக்கை இப்போது நடப்பது போலக் காட்டி நம்மை ஏமாற்றுகிறார் இயக்குனர்.

சியாட்டில் நகரம், அதன் அமைதியான தெருக்கள் ஆகிய கதைக் களமே படத்திற்கு கூடுதல் பலத்தைத் தருகிறது. ஜெரால்ட் பீட்டர் ஒளிப்பதிவு ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது. ராம்கோபால் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் படத்தில். பின்னணி இசையில் காட்சியின் தாக்கத்தை கூடுதலாக்கியிருக்கிறார்.

முதல் முயற்சி என்பதால் சிற்சில குறைகளை பெரிய மனதுடன் மன்னிக்கலாம். நம் ஊர் படங்களையே பார்த்துப் போரடிக்கும் நமக்கு இப்படி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் வேறு ஒரு களத்தில் படங்களைத் தருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

வெள்ளைப் பூக்கள் - வரவேற்பு

 

பட குழுவினர்

வெள்ளை பூக்கள்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓