நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், ஷிவதா நாயர், விஷ்ணு உன்னிகிருஷ்ணன், அல்போன்சா, ஹரீஷ் பெருமனா, ஆர்.கே.சுரேஷ், சலீம்குமார், மணியம்பிள்ள ராஜூ
டைரக்சன் : சுகீத்
குஞ்சாக்கோ போபனை வைத்து 'ஆர்டினரி' என்கிற சூப்பர்ஹிட் படத்தை (தமிழில் 'ஜன்னல் ஓரம்') கொடுத்த இயக்குனர் சுகீத், நான்காவது முறையாக குஞ்சாக்கோவுடன் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள படம் இது.
மலை கிராமம் ஒன்றில் புலி ஒன்று அவ்வப்போது மனிதர்களை கொல்வதால் அந்த ஊர்க்காரர்கள் ஒரு வேட்டைக்காரனை தங்கள் ஊருக்கு வரவழைக்க முடிவு செய்கிறார்கள். சின்னச்சின்ன திருட்டுக்களை செய்துவரும் குஞ்சாக்கோ போபன், விஷ்ணு உன்னி கிருஷ்ணன் மற்றும் ஹரீஷ் பெருமனா மூவருக்கும் இந்த விஷயம் தெரியவர, கிராமத்தினர் தருவதாக சொன்ன 5 லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு, வேட்டைக்காரர்கள் என தங்களை கூறிக்கொண்டு அந்த மலைகிராமத்துக்கு செல்கிறார்கள். சென்றபிறகு தான் அங்குள்ள காட்டுக்கோவில் ஒன்றில் சாமி சிலையில் விலை மதிக்க முடியாத வைரம் ஒன்று இருப்பதும் தெரியவருகிறது.
மீண்டு புலி வருவதற்காக காத்திருந்த நாட்களில், சிறுவயது மகளுடன் கறிக்கடை வேலைசெய்து வாழ்க்கையை நடத்தும் ஷிவதா நாயர் மீது குஞ்சாக்கோவுக்கு காதல் உருவாகிறது. இன்னொரு பக்கம் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவரின் மகள் அல்போன்சாவை காதலிக்கிறார்.
ஒருகட்டத்தில் இவர்கள் எதிர்பாரா வண்ணம் புலி தானாக வந்து இவர்களிடம் சிக்குகிறது. அதன்பின்னர் ஊர்க்காரர்கள் இவர்களை பாராட்டி, பரிசுத்தொகையை தர முன்வர, அதை வாங்கினால் ஊரைவிட்டு போக வேண்டும் என்பதால், அதை மறுத்துவிட்டு அந்த ஊரிலேயே பிழைப்பு நடத்துவதாக சொல்லி அங்கேயே தங்குகின்றனர்.
ஆனால் அதன் பின்னர் தான் ஏற்கனவே புலியால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் இருவரும் உண்மையிலேயே புலியால் தாக்கப்படவில்லை என்பதும், அவர்கள் மரணத்திற்கும் சாமி சிலையில் உள்ள வைரத்திற்கும் தொடர்பு இருப்பதும் தெரியவருகிறது. அதுமட்டுமல்ல, அடுத்தததாக 'புலி'யால் கொல்லப்பட இருப்பது விஷ்ணுவின் காதலி தான் என்பதும் குஞ்சாக்கோவுக்கு தெரியவருகிறது.
விஷ்ணுவின் காதலியை குஞ்சாக்கோ காப்பாற்றினாரா, திட்டமிட்டபடி வைரத்தை அவரால் அபகரிக்க முடிந்ததா, 'புலி'யின் பெயரால் மனிதர்களை கொல்வது யார், அதற்கான காரணம் என்ன என பல கேள்விகளுக்கு விறுவிறுப்பான விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்..
வேலைவெட்டி இல்லாத கிராமத்து ஹீரோ கேரக்டருக்கு இன்றைய தேதியில் குஞ்சாக்கோவை விட்டால் வேறு ஆளில்லை என சொல்லும் அளவுக்கு படம் முழுதும் அலட்டல் இல்லாத நடிப்பையும், தேவைப்படும் இடங்களில் ஆக்ரோஷத்தையும் காட்டியுள்ளார் குஞ்சாக்கோ போபன். அவருடன் நண்பர்களாக வரும் விஷ்ணு ரொமான்ஸ் மூடில் காதலுடன் காமெடியை கலக்க, இன்னொருவரான ஹரீஷ் பெருமனா கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோர் பண்ணுகிறார்.
முரட்டுத்தனமான, எந்த உணர்ச்சியையும் எளிதில் வெளிப்படுத்தாத அழுத்தமான கேரக்டரில் ஷிவதா நாயர். அதை அழகாக சுமந்திருக்கிறார். இவரது பிளாஸ்பேக் காட்சிதான் படத்தின் ஜீவன். இன்னொரு இளம் நாயகியாக வரும் அல்போன்சா இளைஞர்களை நிச்சயம் வசீகரிப்பார். மலையாள சினிமாவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் சர்க்கஸ்காரராக கொஞ்ச நேரமே வந்தாலும் இருவிதமான கெட்டப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். காமெடி போலீசாக வரும் சலீம்குமார் வழக்கம்போல கலகலப்பூட்டுகிறார்.
படத்தின் முதல் அரைமணி நேர காட்சிகள் தமிழில் 'கும்கி' படம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றன. ஆனாலும் அக்மார்க் கிராமத்து கதையில் சரிபாதி காமெடி மற்றும் திடுக்கிடும் திருப்பங்கள் என கதையை அழகாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர் சுகீத். மனிதர்களை கொல்லும் அந்த 'மனித' புலி யார் என்கிற சஸ்பென்ஸ் உடையும் வரை, அது யார் என்பதை நம்மால் யூகிக்க முடியாதபடி கச்சிதமான திரைக்கதை அமைத்திருக்கிறார் சுகீத்..
மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் ரிலாக்ஸாக பொழுதை போக்குவதற்கு ஏற்ற படம் இது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.