1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், ஷாலினி பான்டே
தயாரிப்பு - கிரியேட்டிவ் சினிமாஸ் என்ஒய், என்ஜே என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சந்திரமவுலி
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி - 4 அக்டோபர் 2019
நேரம் - 2 மணி நேரம் 31 நிமிடங்கள்
ரேட்டிங் - 1.5/5

தமிழ் சினிமாவில் காதல் படங்கள் கரை ஒதுங்கி சில பல வருடங்கள் ஆகிவிட்டது. வழக்கமான காதல் கதைகளைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. முற்றிலும் வித்தியாசமான காதல் படங்களை வேண்டுமானால் ஓரளவிற்கு ரசிக்கிறார்கள்.

காதலிக்கவே செய்யாத காதலர்கள் உள்ள இந்தப் படத்தின் பெயர் 100 % காதல். எதற்கு இப்படி ஒரு தலைப்பைத் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தின் கதாநாயகன், கதாநாயகியின் காதலைவிட படத்தின் கிளைமாக்சில் 30 வருடங்களாகப் பிரிந்திருந்த அவர்களின் தாத்தா, பாட்டி தங்கள் உண்மைக் காதலை உணர்ந்து ஒன்று சேர்ந்ததற்காக அப்படி ஒரு தலைப்பு வைத்திருக்க வாய்ப்புள்ளது.

2011ல் தெலுங்கில் வெளிவந்த 100% லவ் என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். கடந்த எட்டு வருடங்களில் காதலும் மாறியிருக்கும், காதல் படங்களின் ரசனையும் மாறியிருக்கும் என்பதை இப்படத்தின் இயக்குனர் சந்திரமவுலி புரிந்து கொள்ளாமல் போய்விட்டார்.

ஜி.வி.பிரகாஷ் படிப்பில் தான் எப்போதும் நம்பர் 1 இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கும் புத்திசாலி மாணவர். எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு என்றிருப்பவர். அவரது வீட்டிற்கு படிப்பதற்காக அவருடைய முறைப் பெண் ஷாலினி பாண்டே வருகிறார். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். படிப்பில் தடுமாறும் ஷாலினிக்கு ஜிவி பிரகாஷ், கற்றுக் கொடுத்து அவரை நன்றாகப் படிக்க வைக்கிறார். ஒரு தேர்வில் ஷாலினி, பிரகாஷைத் தோற்கடித்து முதலிடம் பிடிக்கிறார். அதன் பின் ஷாலினி மீது பிரகாஷுக்கு வெறுப்பு வருகிறது. அடுத்த தேர்வில் வேறு ஒரு மாணவர் முதலிடம் பிடிக்கிறார். கடைசி தேர்வில் அந்த மாணவரைத் தோற்கடிக்க ஷாலினி, பிரகாஷ் இருவரும் ஒரு திட்டம் போடுகிறார்கள். ஷாலினி அந்த மாணவரைக் காதலிப்பதாக நாடகமாடி அவரைத் தோற்கடிக்கிறார்கள். பிரகாஷும் முதல் மாணவராய் தேர்ச்சி பெறுகிறார். அதன்பின் நடக்கும் பார்ட்டியில் பிரகாஷுக்கும், ஷாலினிக்கும் சண்டை நடந்து பிரிகிறார்கள். இருவரது குடும்பமும் அதிர்ச்சியாகிறது. பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழில் விஜய், ஜோதிகா நடித்து 2000ம் வருடத்தில் வெளிவந்த குஷி படத்தின் கதையே அப்படி, இப்படி கொஞ்சம் மாற்றி தெலுங்கில் 100 % லவ் என சுட்டிருக்கிறார்கள். அதையே மீண்டும் ரீமேக் உரிமை வாங்கி 100% காதல் என இப்போது படமாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு நேரடியாக குஷி படத்தின் உரிமையை வாங்கி மீண்டும் படமாக்கியிருக்கலாம்.

தெலுங்கில் நாயகன், நாயகி கதாபாத்திரங்களுக்கு என்ன பெயர் வைத்தார்களோ, அதே பெயர்களைத்தான் தமிழிலும் வைத்திருக்கிறார்கள். அதைக் கூட மாற்றி யோசிக்கவில்லை. அப்படியென்றால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அப்படியேதான் ரீமேக் செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

படிப்பில் படுகெட்டியாக இருக்கும் மாணவன் பாலுமகேந்திரா கதாபாத்திரம் ஜி.வி.பிரகாஷுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. நம்பர் 1 ஆகவே இருக்க வேண்டும் என்ற திமிர்த்தனத்தை நன்றாகவே வெளிப்படுத்துகிறார். அதே சமயம், ஷாலினி மீது லேசான காதல் எட்டிப் பார்க்கும் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்த சிரமப்படுகிறார்.

ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் நடிப்பை வெளிப்படுத்தியதை விட இடுப்பை வெளிப்படுத்திய காட்சிகள்தான் அதிகம். இதை ஒன்றை வைத்தே இந்த தெலுங்கு ரீமேக் படத்தின் கதையை குஷி படத்திலிருந்து சுட்டிருப்பார்கள் என நம்பலாம். இருந்தாலும் ஜி.வி.பிரகாஷுடன் ஏட்டிக்குப் போட்டியாக நடிக்கும் காட்சிகளில் அவரை விட இவர் முந்துகிறார்.

படத்தில் ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரத்தைச் சேர்த்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்கும். அப்படி எதுவும் இல்லை. திரும்பத் திரும்ப ஜி.வி. பிரகாஷ், ஷாலினி காட்சிகளே அதிகம் இடம் பெறுகிறது. நகைச்சுவை என்ற பெயரில் பின்னர் அமெரிக்க ரிட்டர்ன் மாமாவாக வரும் தம்பி ராமையா நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறார்.

நாசர், ஜெயசித்ரா, தலைவாசல் விஜய், ரேகா, ஆர்.வி.உதயகுமார், அப்புக்குட்டி தேவையான நேரங்களில் தலைகாட்டி விட்டு போகிறார்கள். அனைவரது நடிப்பையும் பார்க்கும் போது ஏதோ ஒரு டிராமாவைப் பார்ப்பது போலவே உள்ளது. பிரகாஷ் வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் அங்கேயே தங்கி, சாப்பிட்டு, படித்து, வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். எந்த பெற்றோர் இப்படி விட்டு வைப்பார்கள் எனத் தெரியவில்லை.

இந்த மாதிரியான படங்களுக்கு பாடல்கள் ஹிட்டாவது முக்கியம். அதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கவனம் செலுத்தவில்லை. அவர் நடிக்கும் படங்களை அவரேயாவது பாடல்களில் ஹிட்டாக்க முயற்சிக்கலாம்.

ஒரு வீட்டுக்குள்யே நடக்கும் நாடகம் போலத்தான் படம் முழுவதும் நகர்கிறது. நாயகன், நாயகி இருவருக்கும் இடையிலான ஈகோதான் படத்தின் மையம். ஆனால், அதைச் சரியாக வெளிப்படுத்ததால் படம் முழுவதுமே தள்ளாடுகிறது. இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ நகர்ந்து எப்படியோ வந்து முடிகிறது.

100% காதல் - 20 % மட்டுமே...

 

பட குழுவினர்

100 % காதல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓