சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய் தத்தின் ரீ-என்ட்ரி படமாக அப்பா - மகள் பாச உறவை விளக்கும் படமாக, ஒரு உணர்வுப்பூர்வமான படமாக வெளிவந்துள்ள பூமி படம் மக்களை உருக வைத்ததா...? என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, உ.பி., மாநிலத்தில் ஆக்ராவில் தன் மகள் பூமி எனும் அதிதி ராவ்வுடன் வாழ்கிறார் அருண் சஜ்தேவ் எனும் சஞ்சய் தத். சஞ்சய் சொந்தமாக காலனி கடை வைத்திருக்கிறார். அதிதிக்கு விரைவில் தனது காதலன் நீரஜ் (சித்தாநாத் குப்தா) உடன் திருமணம் நடக்க இருக்கும் வேளையில், திருமணத்திற்கு முதல்நாள், அதிதியை ஒருதலையாக காதலித்த விஷால், தனது சகோதரருடன் இணைந்து அதிதியை பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார். மகளின் நிலையை கண்டு நிலைகுலைந்து போகும் சஞ்சய், மகளையும் காப்பாற்றி, குற்றவாளிகளை எப்படி பழிதீர்க்கிறார் என்பது பூமி படத்தின் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை.
சஞ்சய் தத், அமைதியான, அன்பான தந்தையாகவும், மகளுக்கு ஏற்பட்ட நிலையை கண்டு பொங்கி எழும் வீரமிகு அப்பாவாகவும் அசத்தியிருக்கிறார்.
சஞ்சய் தத்தை போலவே அவரது பாசமிகு மகளாக வரும் காற்று வெளியிடை அதிதி, தனது ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லன் ரோலில் சேகர் கேல்கர் மிரட்டல். சேகர் சுமனின் நடிப்பு சுமார் தான்.
சச்சின் ஜிகார், இஸ்மாயில் டார்பார் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். இவர்களில் இஸ்மாயில் பின்னணி இசை சிறப்பு, சச்சின் பாடல்கள் இசை பெரிதாக ஈர்க்கவில்லை. அதுர் ஜூராவஸ்கியின் ஒளிப்பதிவு பிரமாதம்.
மேரி கோம், சரப்ஜித் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஓமங் குமார், பூமியில் சற்று தடுமாறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முந்தைய படங்களில் இருந்த ஈர்ப்பு இப்படத்தில் சற்று மிஸ்ஸிங். உணர்வுப்பூர்வமான படத்தில் சில காட்சிகள் வேண்டுமென்றே திணித்திருப்பது போன்றும், சில காட்சிகள் கதையோட்டத்தை விட்டு வெளியே சென்றிருப்பதையும் இயக்குநர் தடுத்திருக்கலாம்.
மேற்படி சில குறைகள் இருந்தாலும், பூமி படத்தை, அப்பா - மகளின் உணர்வு ரீதியிலான பாசப்போராட்டத்திற்காகவும், சஞ்சய் தத்தின் ரீ-என்ட்ரிக்காகவும் பூமி படத்தை பார்க்கலாம்.