2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் பலர்.
இயக்கம் - சித்திக்
இசை - அம்ரேஷ்
தயாரிப்பு - ஹர்ஷினி மூவீஸ்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆகும் படங்கள் கடந்த சில வருடங்களாகவே பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

ஒரு படத்தை சரியாக ரீமேக் செய்வதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம், கதாபாத்திரங்களின் தன்மை, கதையின் பின்னணி என பல விஷயங்களை ரசிகர்கள் கவனிப்பார்கள். கொஞ்சம் சறுக்கினாலும், அது தமிழ்ப் படம் பார்ப்பது போல இருக்காது, எந்த மொழியிலிருந்து ரீமேக்கினார்களோ அந்த மொழிப் படங்களைப் பார்ப்பதாகவே இருக்கும். அதனால்தான் சில ரீமேக் படங்கள் இப்படி தோல்விகளைத் தழுவியுள்ளன.

மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் தான் தமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

மம்முட்டி இடத்தில் அரவிந்த்சாமி, நயன்தாரா இடத்தில் அமலா பால் என்பது ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் இருவரும் முடிந்தவரை அவர்களுடைய கதாபாத்திரங்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

அரவிந்த்சாமி மனைவியை இழந்து ஒரு மகனுடன் வசித்து வரும் வசதியானவர். அமலாபால் கணவரை இழந்து ஒரு மகளுடன் வசித்து வரும் மற்றொரு வசதியானவர். அரவிந்த்சாமி மகன் மாஸ்டர் ராகவ், அமலாபால் மகள் பேபி நைனிகா இருவரும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள், நண்பர்கள். ராகவ்வுக்கு அமலாபாலை ரொம்பவும் பிடிக்கும், நைனிகாவுக்கு அரவிந்த்சாமியை ரொம்பவும் பிடிக்கும். அதனால், அரவிந்த்சாமி, அமலாபால் இருவரையும் சேர்த்து வைத்தால் அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வசிக்கலாம் என முடிவெடுக்கிறார்கள். இருவரும் அதற்கு சம்மதிக்கும் நிலையில் இறந்துவிட்டதாக நினைத்த அமலாபாலின் கணவர் உயிருடன் வந்து நிற்கிறார். அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் கதை.

அமுல்பேபியாகவே பார்த்துப் பழகிய அரவிந்த்சாமியை அதிரடி ஆசாமியாகப் பார்க்க கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. அவரும், முறுக்கு மீசை, விறைப்புப் பார்வை என என்னென்னவோ செய்தாலும் அவரிடம் உள்ள அந்த சாக்லெட் பாய் இமேஜ் இத்தனை வயதான பிறகும் போக மாட்டேன் என்கிறது. மலையாளத்திற்கே உரிய தனித்துவமான கதாபாத்திரம், அதை முடிந்தவரையில் தமிழுக்குப் பொருத்தமாக மாற்றித் தர முயற்சித்திருக்கிறார் அரவிந்த்சாமி.

பத்து வயது மகளுக்கு அம்மாவாக இருந்தாலும் மிகவும் இளமையாகவே இருக்கிறார் அமலாபால். அவ்வப்போது கிளாமராகவும் காட்சியளிக்கிறார். அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். மலையாளத்தில் நயன்தாரா நடித்த அளவிற்கு நடிக்கவில்லை என்றாலும் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைக் குறையில்லாமல் செய்திருக்கிறார் அமலாபால்.

படத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் ஆகியோரை விட நம் மனதைக் கவர்பவர்கள் மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா. இருவரும் முடிந்தவரை இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். நைனிகா மட்டும் சில காட்சிகளில் கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார்.

ஒரு குடும்பக் கதையில், திடீரென வில்லன்கள் வருவது நம்பும் மாதிரியில்லை. கடைசியில் இறந்தவர் உயிருடன் வருவது, ஹார்ட்டிஸ்க்கைத் தேடி வில்லன் அப்தாப்ஷிவ்தசானி வருவது என கதை தடம் மாறுகிறது.

அரவிந்த்சாமிக்கு அப்பாவாக நாசர், என்ன கொடுமை சரவணன் இது. அண்ணன் மாதிரி கூடத் தெரியவில்லை நாசர். அரவிந்த்சாமிக்கு எடுபிடியாக சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா. சூரி மட்டும் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். 'பிரண்ட்ஸ்' போன்ற காதல், குடும்பப் படங்களில் கூட நகைச்சுவையைத் தெளித்த இயக்குனர் சித்திக் இந்தப் படத்தில் அதை ரொம்பவே 'மிஸ்' செய்திருக்கிறார்.

அம்ரிஷ் இசையில் பாடல்கள் ஓகே ரகம் கூட இல்லை. விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவில் ஒரு பணக்காரத்தனம் தெரிகிறது.

பெரிய அளவில் படம் ஈர்க்கவில்லை என்றாலும், இரண்டரை மணி நேரமும் போரடிக்காமல் ஜாலியாகவே போகிறது. பொழுதுபோக வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - ஜஸ்ட் பாஸ்.

 

பட குழுவினர்

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

அரவிந்த் சாமி

தமிழ் சினிமாவின் அழகன் என வர்ணிக்கப்பட்டவர் நடிகர் அரவிந்த் சாமி. 1967ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி, சென்னையில் பிறந்த அரவிந்த் சாமி, மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே ரஜினி, மம்முட்டி என இரண்டு ஜாம்பவான் நடிகர்களுடன் அசால்ட்டாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற அரவிந்த் சாமி, பின்னர் மணிரத்னத்தின் ரோஜா, பாம்பே உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். காயத்திரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதிரா, ருத்ரா என்ற ஒரு வாரிசுகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்து வாழ்ந்த அரவிந்த் சாமி, 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

மேலும் விமர்சனம் ↓