ரெண்டகம்,Rendagam
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஆகஸ்ட் சினிமா, சினிஹோலிக்ஸ், த ஷோ பியூப்புள்
இயக்கம் - பெல்லினி
இசை - காஷிப்
நடிப்பு - அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன்
வெளியான தேதி - 23 செப்டம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஏன், கடந்த வாரம் கூட ஒரு கேங்ஸ்டர் படம் வெளிவந்தது. ஆனால், இந்த 'ரெண்டகம்' இதுவரையில் இப்படி ஒரு கதையுடன் வெளிவராத ஒரு கேங்ஸ்டர் படம். கிளைமாக்ஸ் வரை அடிதடி, ஆக்ஷன், ரத்தம், வெட்டு, கொலை என இல்லாத ஒரு படம். படத்தின் கதையும், திரைக்கதையும், எதிர்பாராத ஒரு திருப்புமுனையும் தான் படத்தின் ஹைலைட்.


தமிழில் 'ரெண்டகம்' என்று இன்று வெளியான இப்படம், மலையாளத்தில் 'ஒட்டு' என்ற படமாக இந்த மாதம் 8ம் தேதியே வெளியானது. பெல்லினி இயக்கியுள்ள இந்தப் படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் படம்தான். இருந்தாலும் அதை அவர் திரைக்கதை அமைத்துக் கொடுத்துள்ள விதம்தான் சுவாரசியமானது.

மும்பையில் பெரிய தாதாவாக இருந்தவரின் வலது கரமாக செயல்பட்டவர் அரவிந்த்சாமி. தங்கக் கடத்தல் ஒன்று நடந்த போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது நினைவுகளை இழந்தவர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கத்தைப் பற்றிய தகவல்களை அவரிடமிருந்து எப்படியாவது பெற வேண்டும் என ஒரு கும்பல் குஞ்சாக்கோ போபனை அனுப்புகிறது. அவரும் அரவிந்த்சாமியுடன் பழகி, அவரிடமிருந்து தகவலைப் பெற முயற்சிக்கிறார். ஆனால், நடப்பதோ வேறொன்று. அது என்ன ?, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


அரவிந்த்சாமி யார், குஞ்சாக்கோ போபன் யார், தங்கக் கடத்தலைப் பற்றி விசாரிக்கச் சொன்ன கும்பல் யார் என்பதெல்லாம் நமக்குத் தெரிய வரும் போது பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுதான் படத்தின் ஹைலைட். அடுத்தடுத்து திருப்புமுனைகளைத் தந்து ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர் பெல்லினி.

நினைவுகளை இழந்த கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்தவராக அரவிந்த்சாமி. அமைதியாக, சாந்தமாக, அப்பாவியாக படத்தில் அறிமுகமாகிறார். அதிர்ந்து கூட பேசாமல் இருக்கிறார். அவர் மீது நமக்கும் அனுதாபம் வரும் அளவிற்கு நடிக்கிறார். கடைசியில் அவர் யார் என்று தெரிய வரும் போதும், அதன்பின் அவருடைய நடவடிக்கைகளும் அதிரடியாக அமைந்து ரசிக்க வைக்கின்றன.

மலையாளத்தில் பல படங்களில் முத்திரை பதித்த குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்திருக்கும் தமிழ்ப் படம். மலையாள நடிகர்கள் என்றாலே இயல்பான நடிப்பால் கவர்வார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு கதாபாத்திரம். அப்படி பணம் வாங்கிக் கொண்டு அரவிந்த்சாமி பின்னால் சென்று அவரிடம் இருந்து உண்மைகளைக் கறக்கும் ஒரு கதாபாத்திரம். கடைசியில் குஞ்சாக்கோவுக்கும் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார்கள். அது நமக்கும் பேரதிர்ச்சியாகவே இருக்கிறது.

அரவிந்ந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது. இருந்தாலும் சில காட்சிகளில் வந்தாலும் முக்கியக் கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ் நடித்திருக்கிறார்கள். குஞ்சாக்கோவின் காதலியாக ஈஷா ரெப்பா, இவருக்கும் சில காட்சிகள்தான். சிறப்புத் தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் ஜாக்கி ஷெராப்.

காஷிப் இசை, கவுதம் ஷங்கர் ஒளிப்பதிவு ரெண்டகத்தின் ரெண்டு கண்களாக உள்ளது.

ஒரு மாறுபட்ட கேங்ஸ்டர் படம் பின்னர் ஒரு டிராவல் படமாக மாறுவது மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. மும்பை டூ மங்களூர் பயணத்தைக் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். கிளைமாக்சுக்கு முன்பாக நடக்கும் துப்பாக்கி சூடுகள் நம்பும்படியாக இல்லை. ஒரு நூறு பேரையாவது சுட்டுத் தள்ளியிருப்பார்கள்.

மூன்று பாகங்களாக படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த 'ரெண்டகம்' அதில் இரண்டாவது பாகம். இதற்கு முந்தைய முதல் பாகம், அடுத்த மூன்றாவது பாகம் பிறகு வருமாம்.

ரெண்டகம் - சதி ஆட்டம்

 

ரெண்டகம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ரெண்டகம்

  • நடிகர்
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

அரவிந்த் சாமி

தமிழ் சினிமாவின் அழகன் என வர்ணிக்கப்பட்டவர் நடிகர் அரவிந்த் சாமி. 1967ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி, சென்னையில் பிறந்த அரவிந்த் சாமி, மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே ரஜினி, மம்முட்டி என இரண்டு ஜாம்பவான் நடிகர்களுடன் அசால்ட்டாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற அரவிந்த் சாமி, பின்னர் மணிரத்னத்தின் ரோஜா, பாம்பே உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். காயத்திரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதிரா, ருத்ரா என்ற ஒரு வாரிசுகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்து வாழ்ந்த அரவிந்த் சாமி, 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

மேலும் விமர்சனம் ↓