நடிகர்கள் : பஹத் பாசில், நமீதா பிரமோத், சிருந்தா ஆசப், விநாயகன், வினய் போர்ட், சீதா, ரெஞ்சி பணிக்கர்,
டைரக்சன் : ரபி
குழந்தைகளுக்கு நல்லது செய்கிறேன் என படிக்கும் காலத்தில் அவர்கள் மீது பாசம் என்கிற பெயரில் அடக்குமுறையை பெற்றோர்கள் உபயோகித்தால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிளாக வெளியாகியுள்ள படம் தான் இந்த 'ரோல்மாடல்ஸ்'.
ரெஞ்சி பணிக்கர் - சீதா தம்பதியின் மகனான பஹத் பாசில், தனது கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் உற்சாகமாக வலம் வந்தவர். ஆனால் அவரது கல்லூரியிலேயே பேராசிரியராக வேலை பார்க்கும் அவரது தந்தை, அவரை கண்டிப்பாக வளர்க்க எண்ணி, அவரது நண்பர்களான விநாயகன், வினய் போர்ட், ஷராபுதீன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தி அவர்கள் படிப்புக்கு வேட்டு வைக்கிறார். பஹத்தின் உயிர் தோழியாக பழகிய நமீதா பிரமோத்தின் நிலைமையோ அதைவிட அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இந்த விஷயங்களால் தனது உலகத்தையும் மனதையும் குறுக்கிக்கொண்டு படிப்பு, வேலை என மாறிப்போகிறார் பஹத் பாசில். ஆனால் திருமண வயது வந்தும்கூட, அதுபற்றிய உணர்வே இல்லாமல் பட்டும் படாமல் இருக்கும் பஹத் பாசிலை பழைய நிலைக்கு கொண்டுவர, தன்னால் பாதிப்புக்கு ஆளான அந்த நண்பர்களின் உதவியையே நாடுகிறார் தந்தை ரெஞ்சி பணிக்கர்.
அவர்கள் மூவரும் சேர்ந்து பஹத் பாசிலை கோவாவுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு பல வருடங்களுக்குப்பின் தனது தோழியான நமீதாவை ஒரு ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக சந்திக்கிறார் பஹத் பாசில். நண்பர்கள் நால்வருக்கும் உதவிகள் செய்கிறார் நமீதா. ஒருகட்டத்தில் பஹத் தனது காதலை நமீதாவிடம் தெரிவிக்க, அவரோ அதை ஏற்கமுடியாத சூழலில் இருக்கிறார். கோவாவுக்கு போன பின் பஹத்தின் சுபாவம் பழையபடி மாறியதா, நமீதா பிரமோத் இருக்கும் இக்கட்டான சூழல் என்ன, ரெஞ்சி பணிக்கரால் நமீதாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன எல்லாவற்றுக்கும் மீதிப்படம் விடை சொல்கிறது.
பொதுவாக ரபி படங்கள் என்றால் திரைக்கதை தெளிந்த நீரோடை போல இருக்கும், காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், இந்தப்படத்தில் இரண்டுமே செமையாக மிஸ்ஸிங் ஆகி இருக்கின்றன. காமெடி கூட பரவாயில்லை, ஆனால் குழப்பமான திரைக்கதையும் தெளிவில்லாத கேரக்டர் வடிவமைப்பும் ரொம்பவே அயர்ச்சியை தருகின்றன.
பஹத் பாசிலுக்கு இதில் விதவிதமான பரிமாணங்களை எளிப்படுத்தும் வேலை, அவர் என்னவோ சரியாக செய்துள்ளார் என்றாலும் அவரது கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் நமக்கு மிகப்பெரிய குழப்பத்தையே தருகிறது. கல்லூரியில் துறுதுறுப்பான இளைஞனாக இருக்கும் அவர் மிகவும் ரிசர்வ்டு ஆசாமியாக மாறியதன் பின்னணியை இன்னும் அழுத்தமாக விவரித்திருக்கலாம். திடீரென மாயாவியாக மாறி எதிரிகளை எதிர்பாரதவிதமாக அவர் அட்டாக் பண்ணும் காட்சிகள் நன்றாக இருந்தாலும் அது கதையோடு ஒட்டவில்லையே.
வரவர ஒரே விதமான நடிப்பையே வெளிப்படுத்துகிறார் என்கிற எண்ணத்தை நாயகி நமீதா பிரமோத் ஏற்படுத்தினாலும், அவரது அழகான சின்னச்சின்ன ரியாக்சன்கள் அதை மறக்கடித்து விடுகின்றன. நண்பர்களாக வரும் விநாயகன், வினய் போர்ட், ஷராபுதீன் மூவருமே தங்கள் அளவில் மிகச்சரியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இவர்களின் இன்னொரு தோழியாக வரும் சிருந்தா ஆஷப்பின் திருமண காமெடி உண்மையிலேயே செம கலாட்டா தான் போங்கள்..
கண்டிப்பான பெற்றோராக சீதா-ரெஞ்சி பணிக்கரின் நடிப்பில் ரொம்பவே நேர்த்தி. சுராஜ் வெஞ்சாரமூடுவை வீணடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர இன்னும் சில கேரக்டர்கள் நம் மனதை உற்சாகப்படுத்தி கடந்து போகின்றன. சாம்தத் ஷைனுதீனின் ஒளிப்பதிவில் கோவா காட்சிகள் அமர்க்களம். குறிப்பாக அந்த போட் ரேசிங் காட்சிகள்..
பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கட்டும் என்கிற ஒரு நல்ல விஷயத்தை சொல்ல எதற்காக இயக்குனர் ரபி இவ்வளவு தூரம் நம்மை குழப்பியடித்து இருக்கிறார் என்றுதான் புரியவில்லை. தென்காசி பட்டணம், மாயாவி, ட்டூ கண்ட்ரீஸ் என மற்றவர்களின் படங்களில் தனது சுவாரஸ்யமான திரைக்கதையால் நம்மை வசீகரித்த ரபி, தான் இயக்கியுள்ள படத்தில் அதை கோட்டை விட்டுள்ளார். வேறென்ன சொல்ல..?